தமிழகத்தின் தேர்தல் அரசியல் எந்தளவுக்கு சீர் கெட்டுப் போயிருக்ககிறது என்பதையும், ஓட்டு போடும் மக்களிடமிருக்கும் முட்டாள்தனத்தையும் பொலிடிக்கல் சட்டயர் வடிவில் முன்பே பல படங்களில் பார்த்திருக்கிறோம். நிஜ அரசியல்வாதிகளான ராதாரவி, பழ கருப்பையா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோரின் நடிப்பில் மீண்டும் ஒருமுறை பார்க்கும் வாய்ப்பு.
இதுவரை காமெடியனாகவும் வில்லனாகவும் வலம் வந்த ரவி மரியா இந்த படத்தின் கதைநாயகன். தமிழ்க் குடிமகன் என்ற பெயரில் வருகிற அவர், குடிமகன்கள் சந்திக்கும் ‘பாட்டிலுக்கு பத்து ரூபாய்’ மேட்டரை பெரிதுபடுத்தி பிரச்சனையாக்குகிறார்; அவருக்கு ஆதரவாக பெரும்கூட்டம் சேர்கிறது. அரசுக்கு குடைச்சல் கொடுப்பவராகிறார். அதே பாணியில் இன்னும் சிலபல போராட்டங்களை நடத்தி ஆளுங்கட்சியிடமிருந்து பணம் பறிக்கிறார்.
புத்திசாலித்தனமாக சூழ்ச்சி செய்கிற அவரை பச்சமுத்து பழனிமாணிக்கம் என்கிற கார்ப்பரேட் தொழிலதிபர் கவனிக்கிறார். அவரை ‘உள்ளே வெளியே’ என ஒரு கட்சி துவங்க வைத்து, அவரை தலைவராக்கி, முதலமைச்சர் வேட்பாளராக்கி, தானும் அந்த கட்சியில் நிர்வாகியாக இணைந்து தேர்தலை சந்திக்கிறார். கதை சூடுபிடிக்கிறது.
சமூக நலனுக்காக மக்களைத் திரட்டி போராடுகிறவர் என்கிற அடையாளமும் செல்வாக்கும் கொண்ட தமிழ்க் குடிமகன் தமிழ் நாட்டின் முதலமைசசர் ஆனாரா இல்லையா என்பது மிச்சமீதி கதை… தொழிலதிபர் தமிழ்க் குடிமகனை அரசியல் தலைவராக்கியதன் பின்னணியில் இருக்கிற வில்லங்கம் எதிர்பாராதது…
காமெடியனாக நடிக்கும்போது என்னவெல்லாம் செய்வாரோ அதையே கொஞ்சம் மெருகேற்றி செய்திருக்கிறார் ரவி மரியா. கதாநாயகன் என்பதால் அவருக்கு கதாநாயகியும் சாங்குக்கு அடும் சான்ஸும் கிடைத்திருக்கிறது.
யாரை வெற்றி பெற வைக்க வேண்டும், யாரை தோல்வியடைய வைக்க வேண்டும் என்ற தெளிவில்லாத மக்களுக்கு பாடம் புகட்ட ஸ்கெட்ச் போடுபவராக ராதாரவி, அமைச்சராக பழ கருப்பையா, அரசியல் பிரபலமாக நாஞ்சில் சம்பத் என மூவரிடமும் இருக்கிற அரசியல் அனுபவம் நடிப்பில் அழகாக பிரதிபலிக்கிறது.
ரவி மரியாவுக்கு ஜோடியாக வருகிற அக்சரா விஜய் கவர்ச்சியாக ஆடிவிட்டு போகிறார். இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, பயில்வான் ரங்கநாதன் என இன்னும் நிறையப் பேர் அப்படியும் இப்படியும் தென்படுகிறார்கள்.
துளசி ராமன் துள்ளலிசையில் பாடல்களைத் தர, பைஜு கதைக்கேற்ற பின்னணி இசையை வழங்க, கார்த்திக் எஸ் நாயரின் ஒளிப்பதிவு கச்சிதமாக இருக்கிறது.
தமிழக அரசியலை, தேர்தல் களத்தை, ஓட்டு போடுகிற விஷயத்தில் மக்கள் எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள் என்பதை ஜாலி கேலியாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் ராம்தேவ், ‘நம்ம மாநிலத்தின் லட்சணம் இதுதான்’ என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
மக்கள் தலைவா – சிரிக்கலாம்; சிந்திக்கலாம்!
Rating 3 / 5

