ஒரு கொலைக்குற்றத்தில் பெரும் பணக்காரர் ஒருவருக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகப்படும் போலீஸ் உயரதிகாரி அவரை விசாரிக்கிறார். விசாரிக்கப்படுபவர் விசாரித்துக் கொண்டிருக்கும் போலீஸ் முன் வைத்தே கொலை செய்யப்பட, முன்பு நடந்த கொலையையும் போலீஸ் முன் நடந்த கொலையையும் செய்தது முகத்தை மறைத்தபடி வந்துபோன நபர் என்பது தெரியவருகிறது.
மறைத்த முகத்துக்குள் இருப்பது யார், கொலைகள் எதற்காக என்பது திரைக்கதை…
போலீஸ் அதிகாரியாக பல படங்களில் பார்த்த ஆக்சன் கிங் அர்ஜுனை மீண்டும் அதே கம்பீரத்துடனும் ஆக்சன் காட்சிகளில் அதே சுறுசுறுப்புடனும் பார்க்க முடிகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தீயவர்கள் செய்யும் அநியாயங்களைக் கண்டு கொதிப்படைந்து குலை நடுங்கும் சம்பவங்களைச் செய்கிற கடமை. உணர்வுபூர்வமான காட்சிகளில் அதன் தன்மைக்கேற்பவும், ஆக்சன் அதிரடியில் ஆக்சன் கிங்குக்கு சமமாகவும் களம் கண்டிருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் காதலனாக வருகிற பிரவீன் ராஜா காட்டுகிற அப்பாவி முகமும் அடப்பாவி முகமும் அசத்தல். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் ஏற்றிருப்பது கேடுகெட்ட கேரக்டர் என்றாலும் நடிப்பில் குறையில்லை.
முதன்மை கதாபாத்திரத்தில் சிறப்புக் குழந்தையாக வருகிற அனிகாவின் நடிப்புக்கு பாராட்டுக்களை அள்ளிக் கொடுக்கலாம்.
மார்ஷியல் ஆர்ட் கற்றுக் கொடுத்து துணிச்சலான பெண்மணியாக மாற்றும் வேடத்தில் வேல ராமமூர்த்தி நல்ல உள்ளம் படைத்த மனிதராக வந்து மனித குலத்தின் கழிசடைகளை அடித்து துவைக்கிற வேலையை வீரியமாக செய்து பரிதாப முடிவை எட்டுகிறார்.
அனிகாவின் அம்மாவாக அபிராமி வெங்கடாசலம், அனிகாவின் கேர் டேக்கராக பிரியதர்ஷினி ராஜ்குமார், எழுத்தாளராக _ கதையில் முதலில் கொலை செய்யப்படுகிறவராக லோகு, சீரியஸான கதையில் ஒட்டாத காமெடிக்காக பிராங்ஸ்டர் ராகுல், காவல்துறை உயர்மட்ட அதிகாரிகளாக ஓ ஏ கே சுந்தர், பி எல் தேனப்பன், கிறிஸ்தவ ஃபாதராக அஜய் ரத்னம் என மற்றவர்களின் நடிப்பும்,
பின்னணி இசை, ஒளிப்பதிவும் கதையோட்டத்துக்கு நியாயம் செய்வதாக இருக்கிறது.
‘நம் பிள்ளைகளை யாரை நம்பியும் விடக்கூடாது’ என பல திரைப்படங்கள் உருவாக்கிய அதே விழிப்புணர்வை இந்த படம் தந்தாலும், அந்த விழிப்புணர்வு இப்போதும் எப்போதும் அவசியமானது என்பதால், அதை மீண்டும் ஒருமுறை உருவாக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் தினேஷ் லெட்சுமணனை பாராட்ட வேண்டியது கடமையாகிறது; அடுத்த படத்தில் வெற்றியை சம்பாதிக்க வாழ்த்துவது கூடுதல் கடமையாகிறது!
Rating 3 / 5


