மனநல பாதிப்பு ஒரு மனிதனை எந்த எல்லை வரை கொண்டு போகும் என்பதற்கு உதாரணமாக ஒரு படம்.
மகளைக் காணவில்லை என ஒரு அப்பா போலீஸில் புகார் கொடுத்து தேடிக் கொண்டிருக்கிறார். தொழிலதிபர் சித்தார்த் அந்த மகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக் கூடாது என்ற அக்கறையில் அழைத்துப் போய் தன் பாதுகாப்பில் வைத்திருக்கிறார்.
அப்படி அவளுக்கு என்ன ஆபத்து நேரவிருந்தது? எதற்காக சித்தார்த் அழைத்துப் போனார்?
இந்த கேள்விகளுக்கு கிடைக்கிற பதில் அதிர்ச்சி தருகிறது… இயக்கம் மலர்விழி நடேசன்
சித்தார்த்தாக சந்தோஷ் பிரதாப். காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் மீது காட்டும் பிரியமாகட்டும், அவளை இழந்தபின் ஏற்படும் வலியால் மனநலம் பாதிக்கப்பட்டு நல்லது செய்வதாக நினைத்து விபரீதமான செயல்களில் ஈடுபடுவதாகட்டும் நடிப்பு பாராட்டும்படியிருக்கிறது.
சந்தோஷ் பிரதாப்பின் காதலியாக, மனைவியாக புஜிதா பொன்னாடா. வசீகரிக்கிற அழகும் கதையின் நகர்வுக்கேற்ற நடிப்புமாக மனதில் தொற்றிக் கொள்கிறார்.
காணாமல் போகிற பெண்ணாக பவ்யா திரிகா. பயம், பதட்டம், உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கான போராட்டம் என சீரியஸான சீன்களில் ஸ்கோர் செய்கிறார்.
பவ்யா திரிகாவின் அப்பாவாக ஜெயபிரகாஷ், மற்ற வேடங்களில் முனீஸ்காந்த் உள்ளிட்டோரின் நடிப்பு தேவைக்கேற்றதாக இருக்கிறது.
திரில்லர் கதைக்குப் போதுமான பின்னணி இசையைக் கொடுத்து ஆடியன்ஸுக்கு பதட்டத்தைக் கடத்துகிறார் டி இமான். ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜியின் பங்களிப்பு ‘படத்தின் மேக்கிங் அசத்தலாக உள்ளது’ என்று சொல்வதற்கு உதவுகிறது.
விறுவிறுப்புக்காக திணிக்கப்பட்ட காட்சிகள் குழப்பத்தை உருவாக்குவது உட்பட சில குறைகள் இருந்தாலும் சைகலாஜிக்கல் திரில்லர் விரும்பிகள் திருப்தியடைய வாய்ப்பிருக்கிறது.
Rating 3 / 5 

