‘ரமணா’ காலத்திலிருந்து இன்று வரை மருத்துவத் துறையில் நடக்கும் அநியாய அக்கிரமங்களை எடுத்துக்காட்டும் படங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. அந்த வரிசையில் ஒன்றாக வந்திருக்கிற இந்த படத்தின் இயக்குநர் நிஜத்தில் மருத்துவர். அதனால் காட்சிகளில் டீடெய்ல்ஸ் அதிகமிருக்கிறது.
சில ஊர்களில் 5 ரூபாய் டாக்டர், 10 ரூபாய் டாக்டர் என்றிருப்பார்கள். ஃபீஸ் குறைவாகவும் மருத்துவம் நிறைவாகவும் இருக்கும். அப்படிப்பட்ட டாக்டர்களை மனித வடிவிலிருக்கிற கடவுளாக மதிப்பார்கள். அவர்கள் இறந்துவிட்டால் மக்கள் தங்கள் குடும்பத்தில் உயிருக்குயிரான ஒருவரை இழந்து விட்டது போல் கலங்கி நிற்பார்கள். மிக சமீபத்தில்கூட அப்படியொரு சம்பவம் நடந்தது.
அதேபோன்ற தங்கமான மருத்துவராக, அரசு மருத்துவமனையின் டீனாக இருக்கிறார் சந்திரபோஸ். அவரது நேர்மையால், எளிமையான வைத்தியத்தில் குணப்படுத்த முடியுமென்றால் அதை தாண்டி யோசிக்காத மருத்துவப் பணியால் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வலம் வருகிறார்.
தனியார் மருத்துவமனையின் தலைமைப் பொறுப்பு வகிக்கிற அவரது மகன், சிறு தலைவலிக்கு கூட ஆபரேஷன் செய்து கல்லா கட்டத் துடிக்கிறார்.
இப்படி எதிரெதிர் துருவங்களாக இருக்கிற அப்பாவால் மகனுக்கும், மகனால் அப்பாவுக்கும் வருகிற பிரச்சனைகளும் தீர்வுகளுமாக கடந்தோடுகிறது ‘செய் செய்யாதே.’
மருத்துவர் சந்திரபோஸாக டாக்டர் எஸ் ராஜா. மருத்துவப் பணியை எப்படியெல்லாம் நேர்மையாக செய்யலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது அவரது பங்களிப்பு. மருத்துவப் பணியை எப்படியெல்லாம் செய்யக்கூடாது என்பதற்கு உதாரணமாக இருக்கிறது அவரது மகனாக வருகிற குரு விஜய்யின் செயல்பாடுகள்.
எஸ் ராஜாவிலிருந்து அவரது மகனாக, மனைவி, மகளாக, மருத்துவ மோசடியில் ஈடுபடுகிற தொழிலதிபர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட எல்லோருமே அறிமுக நடிகர்கள். கதையின் போக்கில் கலந்திருக்கிறார்கள்.
மருத்துவத் துறையில் நடக்கும் தவறுகளை அடக்கியொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிற முதலமைச்சராக வந்து போகிறார் பா ஜ க’வின் எச் ராஜா.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மட்டுமல்லாமல் பெரிதாய் குறை சொல்ல முடியாத அளவுக்கு பின்னணி இசையையும் தந்திருக்கிறார் எஸ் ராஜா. ஒளிப்பதிவு சிறிய பட்ஜெட்டில் அடங்கியதாக தெரிகிறது.
மெடிக்கல் மாஃபியாக்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை விரிவாக காண்பிக்கும் காட்சிகளில் ஒன்றாக லஞ்சம் கைமாறுகிறது – எப்படியெல்லாம் பல மடங்காக உயர்கிறது என்பதை விவரித்திருப்பது சுவாரஸ்யம்.
நடிகர் நடிகைகளின் சுமாரான நடிப்பு, கமர்சியல் அம்சங்கள் அவ்வளவாக இல்லாதது, எந்த வியாதிக்கு என்ன மருத்துவம் என்ற அதிகப்படியான எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாத விளக்கங்கள் என சிலபல குறைகள் இருந்தாலும், படம் எடுக்கப்பட்ட நோக்கம் உயர்வாக இருக்கிறது. அதற்காகவே இயக்குநரை பாராட்டலாம்.
Rating 3 / 5

