சென்னையில் நடந்த சர்தார் 2 படத்தின் டிரெய்லர், பாடல்கள் வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.

நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசுகையில்,
”தமிழ் சினிமா என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல. தமிழ் சினிமா – தமிழ்நாட்டின் அடையாளமாக இருக்கிறது. இங்கு நாம் அனைவரும் 40 மதிப்பெண் எடுத்தால் போதும் அல்லது 50 மதிப்பெண் எடுத்தால் போதும். ஆனால் நூறு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று சிலர் மட்டும் தான் நினைப்பார்கள். இந்தப் படத்தின் குழு அப்படி 100 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறது. 100 மதிப்பெண்ணிற்கு எழுதுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதை இந்த படக் குழு கடினமாக உழைத்து உருவாக்கியிருக்கிறார்கள்.
கனவுகளை காகிதத்தில் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அதனை இப்படி பிரம்மாண்டமான படைப்பாக காட்சிப்படுத்த வேண்டும் என்றால்… அதற்கு இந்த கதை மீது ஆர்வம் கொண்ட நம்பிக்கை வைக்கும் தயாரிப்பாளர் ஒருவர் வேண்டும். அந்த வகையில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் இல்லை என்றால்… எங்களின் கனவு நனவாகி இருக்காது.
இந்தப் படத்தில் நான் ஏராளமான மூத்த நட்சத்திர கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். நான் யோகி பாபுவை ‘முருகா’ என்று தான் அழைப்பேன். அவரும் என்னை ‘முருகா முருகா’ என்றுதான் அழைப்பார். ஒரு காட்சியை அவரிடம் கொடுத்தால்… அந்த காட்சியை சிறப்பாக வடிவமைப்பதற்காக கடினமாக உழைக்கிறார். அதன் பிறகு அந்தக் காட்சி மிகச் சிறப்பானதாக மாறுகிறது. அவரிடம் எழுத்து திறமையும் இருக்கிறது. தயாரிப்பாளர் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. இயக்குநர் நல்ல பெயரை பெற வேண்டும் என்ற மனசும் இருக்கிறது. இவ்வளவு விசயங்கள் அவரிடம் இருப்பதால்… அவருக்கு தோல்வி என்பதே இல்லாமல் இருக்கிறது. அவருடைய கடுமையான உழைப்பை பார்த்து நான் பலமுறை ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
சர்தார் முதல் பாகத்தில் காதல் காட்சிகளை இயக்குநர் வைத்திருந்தார். சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் என்ற உடன் காதல் காட்சிகள் பிரம்மாண்டமானதாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஹீரோயின் மாளவிகா மோகனன் என்று சொன்னவுடன்… அவர்கள் நம்ம ஊர் மோனிகா பெலூச்சி போன்று இருந்தார்கள். அவர்களுக்கு பயங்கரமான காஸ்டியூம் கொடுத்து.. அவர்களுடன் ரசிகர்கள் என்ஜாய் செய்வதற்கான காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.இது தொடர்பாக இயக்குநரிடம் கேட்டபோது, ‘அவர் என் சாரா கதாபாத்திரம் அப்படிப்பட்டதல்ல’ என விளக்கம் அளித்தார். ஏனெனில் படத்தில் சாரா கதாபாத்திரம் எனக்கு பாஸ்.
ஆஷிகா ரங்கநாத்- மிக திறமையான டான்சர். ஆனால் இந்த படத்தில் நாங்கள் அவரை அதிகமாக ஓட வைத்திருக்கிறோம். இவர் ஒரு ஸ்டார் மெட்டீரியல். கமர்சியல் ஹீரோயின். அவர்களை அழைத்து வந்து இயக்குநர் இந்த படத்தில் ஒரு சிறந்த நடிகையாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார்.
பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதை வேண்டுமானால் நீங்கள் தவிர்க்க முடியாமல் தொடர்ந்திருக்கலாம். ஆனால் இந்தப் படத்தைப் பார்த்து பிறகு நீங்கள் இந்த படம் சொல்லும் விசயத்தை உங்களால் தவிர்க்கவே முடியாது. ஏனென்றால் உங்களுடைய ஆரோக்கியத்தை பற்றிய அசைத்துப் பார்க்கும் உண்மையை சொல்லி இருக்கிறோம். இதுதான் படத்தில் முக்கியமான விசயம்.
மித்திரனிடம் எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு விசயம் என்னவென்றால்… எழுத்தாளர்களுக்கு மரியாதையும், மதிப்பையும் வழங்குவது. எழுத்தாளர்களுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்கும் போது தான் ..அது அடர்த்தியானதாகவும் ரசிகர்களை உத்வேகத்துடனும் இருக்க வைக்கும். அத்துடன் இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய உரையாடலை உண்டாக்கும். ஒரு படம் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புபவன் நான். அது இந்த படத்தில் இயக்குநர் மித்திரன் செய்திருக்கிறார். படம் வெளியான பிறகு இது தொடர்பான மிகப்பெரிய உரையாடல் ஏற்படும்.
எந்த பின்புலமும் இல்லாமல் நூறாவது திரைப்படத்திற்கு இசையமைத்திருப்பது என்பது சாதனைதான். இன்னும் அவர் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களுக்கு அற்புதமாக இசையமைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். சிலருக்கு வாழ்க்கை மிகப்பெரிய காத்திருப்பை வழங்குகிறது. ஆனால் வாய்ப்பை வழங்கும் போது மிகப்பெரிய அளவில் வழங்குகிறது. அதனால் இசையமைப்பாளர் சாம் சி எஸ் க்கு மிகப்பெரும் வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்தப் படத்தில் சில காட்சிகளை பார்க்கும் போதே நமக்குள் பயம் ஏற்படும். இது ரசிகர்களுக்கு அற்புதமான தொடர்பை ஏற்படுத்தி வித்தியாசமான அனுபவம் வழங்கும்.
தற்போது திருநெல்வேலியில் இருந்து ஒரு பிரஷ்ஷான வில்லன் கிடைத்திருக்கிறார். அவர் இந்த படத்தில் செய்யும் ஒவ்வொரு விசயமும் ஜாலியாகவும் இருந்தது. அவர் நடிக்கும் கேரக்டரை கேமரா முன்னால் 100% … மைக்கிற்கு முன்னால் 500% …கொண்டு வந்து விடுகிறார். அவருடைய உழைப்பு அற்புதமானது. அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாதது.அவருடைய வாழ்க்கைப் பயணம் தான் எல்லோருக்கும் உண்மையான இன்ஸ்பிரேஷன். எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பை வேண்டுமானால் இமிடெட் செய்யலாம். ஆனால் அவருடைய எனர்ஜியை ஒருபோதும் நகலெடுக்க முடியாது.
என் அப்பாவை பற்றி ஒரு விசயத்தை யோசித்து இருக்கிறேன். இதுவரை அப்பா எனக்காக எந்த ஒரு கதையும் கேட்டதில்லை. நானே கதையைக் கேட்டு அதை தேர்வு செய்து முட்டி மோதி வரட்டும் என்று விட்டுவிட்டார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏன் நம்மை வழி நடத்தவில்லை என்று யோசித்தேன். அவரும் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஒரு நாள் கூட என்ன கதை… எங்கு படபிடிப்பு.. யார் இயக்குநர்.. என்று எந்த ஒரு விவரத்தையும் என்னிடம் கேட்டதில்லை. இதுவே எனக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய சுதந்திரம் என நினைக்கிறேன்.
என் ரசிகர்களை கடந்த மூன்று வருடங்களாக ரொம்ப படுத்தி விட்டேன்.ஆனால் இந்த முறை ரசிகர்களாகிய உங்களுக்கு நான் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை. முழுவதும் இறங்கி அடித்திருக்கிறேன். நீங்கள் சந்தோஷமாக வந்து பார்த்து என்ஜாய் செய்யும் வகையிலான படமாக சர்தார் 2 இருக்கும். என்ன செய்தால் ரசிகர்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்பதை பார்த்து பார்த்து உருவாக்கி இருக்கிறோம். இந்த படம் உங்களுக்கு பிடிக்க வேண்டும்… புரிய வேண்டும்… என்பதற்காக ஒவ்வொரு காட்சியிலும் கூடுதல் கவனம் செலுத்தி உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும். என்றார்.
இயக்குநர் பி எஸ் மித்ரன் பேசுகையில்,
”நான் படத்தைப் பற்றி பேசக்கூடாது என நினைக்கிறேன். படம் தான் மக்களிடம் பேச வேண்டும். அதனால் படத்தைப் பற்றி நான் பேசவில்லை. ஆனால் இந்தப் படம் எப்படி உருவானது? என்பதை பற்றி பேச விரும்புகிறேன்.
இதற்கு முதலில் தயாரிப்பாளர் லட்சுமண் குமாரை பற்றி தான் சொல்ல வேண்டும். சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கலாம் என்பதை முதலில் அவர் தான் எங்களிடம் சொன்னார். அதனால் இது அவருடைய கனவு படம். அத்துடன் எனக்கு முழு நம்பிக்கையை அளித்து இதனை சிறப்பான படமாக உருவாக்குங்கள் என்றார். இதற்காக அவருக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைக்கு உள்ள பொருளாதார சூழலில் இது போன்ற பிரம்மாண்டமான படத்தை உருவாக்க வேண்டும் என யோசிப்பது மிகப்பெரிய விசயம்.
நான் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து பயணிக்கிறேன். கார்த்தி உடனும் ஆறாண்டு காலமாக தொடர்ந்து பயணிக்கிறேன். கார்த்தியை வைத்து தொடர்ந்து இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் நான் ஒருவன் தான். அதனால் கார்த்தியை பற்றி பேசுவதற்கு என்னிடம் ஏராளமான விசயங்கள் உள்ளன.
‘ஜப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் ஒரு விசயத்தை சொன்னேன். யார் ஒருவர் கார்த்தியுடன் இணைந்து பணியாற்றுகிறார்களோ..! அவர்கள் மிகச் சிறந்த இயக்குநராக உருவாகிவிடுவார்கள். உங்களுடைய, பொறுப்புணர்வை அவர் மேம்படுத்தி விடுவார். அதாவது ஒரு விசயம் சிறப்பாக வந்திருக்கிறது என்றால் ..அது அவருக்கு போதாது. அப்போது அவர் இன்னும் சிறப்பாக செயல்படலாம் என்பார். அப்படித்தான் இந்த படம் முழுவதும் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்.
இந்தத் திரைப்படம் இந்த அளவிற்கு தரத்துடன் உருவாகி இருப்பதற்கு கார்த்தியும் ஒரு காரணம். அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் மிக முக்கியமான காரணம்.
இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்க ஒப்புக்கொள்வார் என்ற மனநிலையுடன் தான் அவரை சந்திக்க சென்றேன். ஏனெனில் அவருடைய எதிர்பார்ப்பு என்ன? என்பது எனக்கு ஓரளவு தெரியும். அவரிடம் நான் இயக்குநராக கதை சொல்லவில்லை. எஸ்ஜே சூர்யாவாக மாறி அவரிடம் கதையைச் சொன்னேன்.
எந்தவொரு விசயத்திலும் தெளிவாக இருக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். எந்த விசயத்தை சொன்னாலும் அது ரசிகர்களுக்கு புரிய வேண்டும்… பிடிக்க வேண்டும்… என்பதற்காக கடுமையாக போராடுவார். அது சாதாரண விசயம் அல்ல. அவருக்கு இருக்கும் பரபரப்பில் எனக்கு வாட்ஸ் அப்பில் 17 நிமிசங்கள் பேசிய ஆடியோவை அனுப்புவார். அதனால் இந்தப் படம் மிகப்பெரிய அளவிற்கு உருவானதற்கு எஸ் ஜே சூர்யாவின் உந்துதலும் ஒரு காரணம்.
சாம் சி எஸ் எப்போதும் எதற்காகவும் அசராத மனிதர். அவரை சந்தித்து எனக்கு இப்படி ஒரு விசயத்தை செய்து தாருங்கள் என்று சொன்னால் போதும். அதை ஒருபோதும் மறுக்கவே மாட்டார். அவரிடமிருந்து முடியாது என்ற வார்த்தை இதுவரை வந்ததே இல்லை. ‘ஓகே பிரதர் டோன்ட் வொர்ரி’ என்ற வார்த்தையை அதிகமாக சாம் சி எஸ் பேசித்தான் கேட்டிருக்கிறேன்.
இந்தப் படத்தின் கதையை நான் அவரிடம் விவரிக்கும் போது முழுவதுமாக கேட்டுவிட்டு, ‘பிரதர் இந்த கதையை படமாக எடுப்பதை விட சொன்னாலே ஹிட்டுதான்’ என்றார். அவரிடம் இருக்கும் பாசிட்டிவிட்டி தான் நூறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவரிடம் இருக்கும் பாசிட்டிவிட்டியால்தான் இயக்குநர்கள் அவரைத் தேடிச் செல்கிறார்கள். அவரிடம் இருக்கும் பாசிட்டிவிட்டி தான் அவருக்கு எனர்ஜியை கொடுத்து, நூறு படங்களுக்கு இசையமைக்க வைத்திருக்கிறது. நூறு படங்கள் என்றால் நூறு படங்கள் மட்டுமல்ல .. அவை எண்ணூறு ரீல்கள். 800 ரீல்களுக்கு நீங்கள் இசை அமைத்திருக்கிறீர்கள் என்றால்… அது சாதாரணமான விசயம் அல்ல. அதனால் நீங்கள்தான் ரியல் இன்ஸ்பிரேஷன். சாம்பியன். சர்தார் படத்தின் தரத்திற்கு இவரும் ஒரு காரணம்.
ஆஷிகா ரங்கநாத்திடம் ஜென் ஸீ தலைமுறையை போல் நடிக்க வேண்டும் இன்று சொன்னேன். அதற்காக அவர்கள் உடையை தேர்வு செய்த பிறகு, ”ஃபர்ஸ்ட் நான் எனக்கு சௌகரியமான உடையில் நடிக்கிறேன்’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஆஷிகாவின் மிகப்பெரிய பலம் என்னவென்றால்.. அவர் தமிழ் வசனங்களை தமிழில் தான் பேசி பயிற்சி எடுத்து நடிப்பார்கள். இதற்காக அவர்களுக்கும் நன்றி.
குறிப்பாக கார்த்தியின் டபுள் ஆக்சன் வேடத்தை படமாக்கும் போது கார்த்தி விஜியாவும் நடிக்க வேண்டும். மேக்கப் செய்து கொண்டு சர்தாராகவும் நடிக்க வேண்டும். இவர்கள் இந்த இரண்டு கதாபாத்திரத்துடனும் ஆஷிகா ரங்கநாத் இருப்பார்கள். கார்த்தி மட்டுமல்ல ஆஷிகாவும் இரண்டு முறை நடிக்க வேண்டியது இருந்தது.
மாளவிகா நடித்த ‘தங்கலான்’ படத்தை பார்த்துவிட்டு, இவர்கள் பயங்கரமாக ஆக்ஷன் காட்சியில் நடிப்பார்கள் என நினைத்து, அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் கலந்து கொள்ளும் முதல் நாள் படப்பிடிப்பில் ஆக்சன் காட்சிகளை படம் பிடித்தேன். அவர் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது நான் அவரிடம் ஆக்சன் காட்சிகள் குறித்து விவரித்தேன். 60.. 70 .. அடி உயரத்திலிருந்து கீழே விழ வேண்டும் என்றேன். அவர்கள் தயங்கினார்கள். அதன் பிறகு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள்.
இந்த படத்தைப் பொறுத்தவரை மூன்று ஸ்டேஜ்கள் இருக்கிறது படத்தை உருவாக்கும் ஸ்டேஜ். படத்தை படமாக்கும் ஸ்டேஜ். எடுத்த படத்தை நிறைவு செய்யும் ஸ்டேஜ். இந்த மூன்று ஸ்டேஜ்களிலும் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.
இந்தப் படத்தில் உள்ளரங்க காட்சிகள் அதிகம். அனைத்தையும் நேர்த்தியாக வடிவமைத்த கலை இயக்குநருக்கு நன்றி.
என்னைப் பொறுத்தவரை எடிட்டர் விஜய் வேலு குட்டியும், நடிகர் எஸ் ஜே சூர்யாவும் ஒரே மாதிரி தான் இருவருமே போதும் போதும் என்று சொன்னாலும் நான் வேறு வகையில் நடித்துக் காட்டுகிறேன் என்றும்… நான் வேறு விதமாக படத்தை தொகுத்து காட்டுகிறேன் என்றும்.. சொல்வார்கள். ” என்றார்.
*நடிகர் எஸ் ஜே சூர்யா பேசுகையில்,*
” நான் முதன்முதலாக சென்னை வடபழனி குமரன் காலனியில் உள்ள ஸ்டுடியோவில் பாடுவதற்காக சென்றிருந்தேன். ஆனால் அங்குள்ளவர்கள் ஏழு மணி நேரம் வரை காத்திருக்க செய்து, அதன் பிறகு எனக்கு குரல் வளம் இல்லை என்று நிராகரித்தார்கள். எனக்கு அப்போது இசை ஆர்வம் இருந்தது. ஆனால் பாட வேண்டும் என்று விரும்பினேன். அதன் பிறகும் தொடர்ந்து பல நிராகரிப்புகள்… அவமானங்கள்… தொடர்ந்தது.
நூறாவது படத்திற்கு இசையமைத்து, அதற்கான மேடையில் நான் நிற்கும் போது என்னுடைய இந்தப் பயணம் மிக நீண்டது. துயரம் மிகுந்தது. ஆனாலும் கடவுள் மற்றும் மக்களின் ஆதரவு இருந்ததால் இசையில் ஓரளவு குறிப்பிட்ட சாதனையை எட்டி இருப்பதாக நம்புகிறேன்.
என்னுடைய நூறாவது திரைப்படத்தில் கார்த்தி நடித்திருக்கிறார் என்பதே எனக்கு பெருமிதமாக இருக்கிறது. எனக்கு எப்போதும் அறிவாளியாய் உள்ள இயக்குநர்களிடம் பணியாற்றுவதற்கு ஆசையாக இருக்கும். அதிலும் இசை பற்றிய அறிவு அதிகம் உள்ள மித்திரன் போன்றவர்களிடம் பணியாற்றும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இசையில் ராகங்களை பற்றியும்.. இசை குறிப்புகளை பற்றியும் ..மித்திரனுக்கு நன்றாக தெரியும். இவரைப் போன்றவர்களை அசத்துவதற்காக இன்னும் ஏதாவது புதிதாக முயற்சிக்கலாம் என புதிதாக ஏதேனும் ஒன்றை செய்வேன். மித்திரன் என்னுடைய நண்பர். இருந்தாலும் அவருடன் இணைந்து பணியாற்றுவது சிறந்ததாக இருந்தது. நான் பணியாற்றிய இயக்குநர்களில் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் மித்ரன்.
இந்தப் படத்தின் பின்னணி இசை அமைக்கும் போது இயக்குநரும், நானும் ஒன்றாக அமர்ந்து பணியாற்றினோம். இந்தத் திரைப்படம் மியூசிக்கலாக எனக்கு மிகவும் நெருக்கமான படம். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். அதற்கான உழைப்பை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து வழங்கியுள்ளோம்.” என்றார்.

