சிரித்தால் அழகு கூடுகிற கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரசித்துச் சிரிக்கும்படியான ‘ரிவால்வர் ரீட்டா.’
இளம்பெண் ரீட்டாவை பாலியல் தொழிலாளி என நினைத்து அணுகிய, வயதில் முதிர்ந்த ரவுடிப் பேர்வழி பாண்டியனை ரீட்டாவின் அம்மா தற்காப்புக்காக தாக்க, அவரது உயிர் பிரிகிறது.
பாண்டியனை போட்டுத் தள்ளுவதற்காக அவரது எதிரிகள் தேடிக் கொண்டிருக்க, பாண்டியனின் மகன் அப்பாவை காணவில்லை என தேடிக் கொண்டிருக்கிறார். எல்லோரையும் ஏமாற்றி, போலீஸின் கண்ணிலும் பட்டுவிடாமல் பாண்டியனின் உடலை அகற்றத் திட்டமிடுகிறது ரீட்டாவின் குடும்பம். அந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பதே கதை…
ரீட்டாவாக கீர்த்தி சுரேஷ். நடந்துவிட்ட கொலையை மறைக்க, உடலை அகற்ற போடும் திட்டங்கள் தாறுமாறு தக்காளிச் சோறு ரகம். அதற்கான நடிப்பு ரசிக்கும் தரம்.
‘கொலையை மறைக்க எதை வேண்டுமானாலும் செய்யத் தயார்’ என்ற மனநிலையில் கீர்த்தி சுரேஷின் அம்மாவாக வருகிற ராதிகாவின் அத்தனை செயல்பாடுகளும் அதிரிபுதிரி; பாடி லாங்வேஜும் அசத்தல். சிரிக்காமல் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது.
பாண்டியனின் மகனாக சுனில் ஹைஃபை வில்லன்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்வார்களோ அப்படியெல்லாம் நடந்து கொள்கிறார். ஜான் விஜய் போலீஸாக வந்தால் என்னவெல்லாம் செய்வாரோ அதையே அதிகமான அலட்டலோடு செய்திருக்கிறார்.
அஜய் கோஷை காரில் கிலோமீட்டர் கணக்கில் சுற்றவிட்டிருக்கிறார்கள். சென்ராயன், அகஸ்டின் என மற்றவர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. பின்னணி இசை, ஒளிப்பதிவு நேர்த்தி.
பக்கா கேங்ஸ்டர் கதையை எடுத்துக் கொண்டு, ஹீரோயினை ஹீரோவாக்கி, படம் நெடுக வன்முறையை நிரப்பி ஆடியஸ்ஸை சிரிக்க வைப்பதெல்லாம் சாதாரண விஷயமில்லை. அதை செய்து காட்டியிருக்கிறார் இயக்குநர் ஜே கே சந்துரு.
Rating 3.5 / 5

