அட்டகாசமாக கிரைம் திரில்லராக, கிரைம் கதைகளில் புகழின் உச்சம் தொட்ட ராஜேஷ்குமாரின் நாவலை தழுவிய ‘ரேகை.’
தொடர்ச்சியாக மர்ம மரணங்கள் நடந்துகொண்டிருக்க, நடப்பதெல்லாம் கொலைகள் போல் தோன்றினாலும் ‘விபத்துச் சாவு’ என்றே போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வருகிறது.
ஒருவருடைய ரேகைபோல் இன்னொருவரின் ரேகை இருக்காது என்ற அறிவியல் உண்மையை சந்தேகப்படும்படி மரணமடைகிற எல்லோரின் ரேகைகளும் ஒரேவிதமாக இருக்கிறது. அது எப்படி சாத்தியம்? நடக்கிற மரணங்களின் பின்னணி என்ன? தோண்டித் துருவுகிறார் போலீஸ் அதிகாரி வெற்றி. அவர் எதையெல்லாம் கண்டுபிடிக்கிறார் என்பது கதையின் மீதி. இயக்கம் எம் தினகரன்
நடப்பவை கொலைகள் என உறுதிபடுத்திக் கொள்வதற்கான முயற்சியாகட்டும், கொலைகளைச் செய்வது யார் என கண்டுபிடிப்பதில் காட்டும் ஈடுபாடாகட்டும், படிப்படியாக கொலையாளியை நெருங்குவதாகட்டும், காதலியை படு வித்தியாசமாக டீல் செய்வதாகட்டும் போலீஸ் அதிகாரி வெற்றியாக வருகிற பாலா ஹசனின் நடிப்பில் கேரக்டருக்கு தேவையான துடிப்பு போதுமான அளவில் இருக்கிறது.
போலீஸாக வருகிற பவித்ரா ஜனனி ஹீரோவுடன் சேர்ந்து புலனாய்வில் ஈடுபடுவது நேர்த்தியாக இருக்க, ஹீரோவைக் காதலித்துக் கொண்டே இன்னொருவருடன் நிச்சயதார்த்தம் வரை போவது சுவாரஸ்யம்.
போஸ்ட் மார்ட்டம் செய்து போலீஸ் தரப்புக்கு அறிக்கை தருகிற டாக்டராக வினோதினி வைத்தியநாதன், நடிப்பில் இதுவரை வெளிப்படுத்தாத மிரட்டலான பரிமாணத்தைக் காட்டியிருக்கிறார்.
அஞ்சலியின் வில்லத்தனமும் அசத்துகிறது. மற்றவர்களின் நடிப்புப் பங்களிப்பில் குறையில்லை.
திரில்லர் கதைக்களத்துக்கு சுறுசுறுப்பு தீ பற்றவைத்ததுபோல் பின்னணி இசையைத் தந்திருக்கிறார் ராஜ் பிரதாப். மகேந்திரா எம் ஹென்றி ஒளிப்பதிவுப் பணியை தரமாகச் செய்திருக்கிறார்.
மெடிக்கல் கிரைம் பின்னணியில் காட்சிக்கு காட்சி தொற்றிக் கொண்டிருக்கும் விறுவிறுப்பால் அத்தனை அத்தியாயங்களையும் ஆர்வமாக பார்க்க முடிகிறது. பரபரப்பான கிரைம் திரில்லர் கதைகள் உங்களுக்கு பிடிக்குமென்றால் ரேகை தருகிற திக்திக் அனுபவத்துக்காக ZEE 5 தளத்தில் மூழ்கலாம்!
Rating 3.5 / 5


