விஜய் தேவரகொண்டா ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நடிக்கிறார்.
ஹைதராபாத்தில் ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிகழ்வில் படத்தின் இரத்தம் தோய்ந்த உலகத்தை அறிமுகப்படுத்தியதுடன் ‘ரவுடி ஜனார்த்தனா’ என்ற கிளிம்ப்ஸூடன் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது. படம் பற்றிய ஆர்வத்தையும் பல கேள்விகளையும் பார்வையாளர்களுக்கு இந்த கிளிம்ப்ஸ் எழுப்புகிறது. புதிய இடம், புதிய பேச்சுவழக்கு, வித்தியாசமான தோற்றம் மற்றும் இதுவரை பார்த்திராத உலகத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை இந்தப் படத்தில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள இந்த கிளிம்ப்ஸ் படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதோடு டைட்டில் குறித்தான எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக்கியுள்ளது. நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தீவிரமான திரை இருப்பு, கத்தி ஏந்தியிருப்பது, அவரது இரத்தக்கறை படிந்த, வலிமையான உடலமைப்பு, மூர்க்கத்தனத்தை வெளிப்படுத்துவது என இந்தப் படத்தில் புது அவதாரம் எடுத்துள்ளார்.
விஜய் தேவரகொண்டாவின் கடுமையான தோற்றம், அற்புதமான வசன உச்சரிப்பு மற்றும் இரண்டு நிமிட கிளிம்ப்ஸில் அவரது அதிரடியான நடிப்பு ஆகியவை படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது முதல் படமான ‘ராஜா வாரு ராணி காரு’ மூலம் பாராட்டுகளைப் பெற்ற ரவி கிரண் கோலா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை, தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
1980 களில் கிழக்கு கோதாவரியை களமாகக் கொண்ட இந்தப் படம் டிசம்பர் 2026 இல் உலகளவில் திரையரங்குகளில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசை மற்றும் ஆனந்த் சி. சந்திரனின் ஒளிப்பதிவு, சுப்ரீம் சுந்தரின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படத்தின் தீவிரத்தை மேலும் அதிகமாக்கும்.

