தமிழக – ஆந்திரா பார்டரில் செம்மரக் கடத்தலில் ஆளுமையாக இருக்கும் பர்மா கார்த்திகேயனையும், அவருக்கு மேலிருக்கிற சர்வதேச கடத்தல் கும்பலையும் ஒட்டுமொத்தமாக பிடிக்கும் சிறப்பு அதிரடிப் படையின் முதன்மைப் பொறுப்பாளராக ஐ பி எஸ் அதிகாரி சாய் பல்லவி. அந்த படையிலிருந்து பர்மா கார்த்திகேயனின் கோட்டைக்குள் பணியாளாக சாமர்த்தியமாக நுழைகிற அதிகாரியாக பழனிவேல்.
கடத்தல் கும்பலை சுற்றி வளைப்பது மட்டுமல்லாது, செம்மரம் வெட்டிய விவகாரத்தில் கைதாகியிருக்கும் தமிழர்கள் சிலரை மீட்கும் கடமையும் அவர்களுக்கிறது.
கடமையை நிறைவேற்றுவதற்குள் அவர்கள் சந்திக்கும் சவால்களும், படும் வேதனைகளும், இழப்பவையும் அதிகம். அதையெல்லாம் கடந்து கடத்தல் சாம்ராஜ்யத்துக்கு எப்படி சமாதி கட்டுகிறார்கள் என்பதை விறுப்பான காட்சிகளாக தொகுத்திருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.
பர்மா கார்த்திகேயனின் நம்பிக்கைக்குரியவனாக மாறுவதற்கான முதல் படியாக ஊரையே திரட்டி ஆந்திர போலீஸாரை எல்லை வரை விரட்டியடிக்கும் ஆரம்பக் காட்சியே அசத்தலாக இருக்க அப்பாவை பறிகொடுத்து கதறுவது, எங்கு போகிறாய் – எதற்கு போகிறாய் என நச்சரிக்கும் மனைவியைச் சமாளித்து, எடுத்துக்கொண்ட பணிக்கு முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்வது, ஆக்சனில் அதிரடி கிளப்புவது என பழனிவேலாக வருகிற தனுஷின் நடிப்பு எப்போதும்போல் தரம்.
சாய் பல்லவி மாறுபட்ட ஹேர் ஸ்டைலில் காவல்துறை உயரதிகாரிக்கான தோரணையை நடிப்பில் சரியாக கொண்டு வந்திருக்கிறார். ஆக்சனிலும் அசத்துகிறார்.
பர்மா கார்த்திகேயனாக மம்முட்டி. பவர்ஃபுல் கேங்ஸ்டருக்கான ஹீரோயிஸம் காட்டாமல் பேச்சிலும் முகபாவங்களிலுமே கேரக்டருக்கு பலம் கூட்டியிருக்கிறார்.
தனுஷின் மனைவியாக ஸ்ரீலீலா, கடத்தல் தாதாவாக நஸ்ருதின்ஷா உள்ளிட்டோர் அவரவர் கேரக்டரில் பொருந்திப் பயணித்திருக்க, சாய் அப்யங்கர் இசையில் பாடல்கள் எனர்ஜியேற்றுகின்றன. பின்னணி இசையில் அதிரடி அதிகம்.
ஒளிப்பதிவு, சண்டைப் பயிற்சி படத்தின் பலம்.
செம்மரக் கடத்தல் விவகாரத்தில் தமிழர்கள் பலரை ஆந்திர போலீஸ் சுட்டுக்கொன்ற, நம் மாநிலத்தை உலுக்கிய சம்பவத்தை தொட்டுக் கொண்டிருக்கும் இந்த ஆக்சன் திரில்லரின் நீளம் அலுப்பு சலிப்புக்குள் தள்ளுகிறது.
Rating 3 / 5

