நாயகன் ஆசைப்பட்டபடி அழகான காதலி கிடைக்கிறாள். அது அதிர்ஷ்டம். விபத்தில் சிக்கி அவளது முகத்தில் பலமாக அடிபட அழகு பறிபோகிறது. அது துரதிஷ்டம். அதன் பிறகு காதலில் நாயகன் என்ன முடிவெடுக்கிறான்; காதலி என்ன முடிவெடுக்கிறாள் என்பதே மெளன மொழிகளின் கதை. நாயகனை இன்னொரு பெண் ஒருதலையாய்க் காதலிக்கிறாள் என்பது கதையிலிருக்கும் விறுவிறுப்பான பகுதி…
நல்ல மனதுக்காரராக, உழைத்து சம்பாதிப்பவராக, காதலியின் அழகு பறிபோனாலும் அப்படியே ஏற்கும் அளவில் ஆழமாக காதலிப்பவராக ஷாகிர் மனோ. இயல்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார். உணர்வுகளை வெளிப்படுத்துவதில் இன்னும் தேற வேண்டும்.
காதலியாக அர்ச்சனா சிங். அழகாக இருக்கும்போது ஷாகிரிடம் அலட்டலாக நடந்து கொள்வதும், விபத்துக்கு பின் விலகிச் செல்வதுமாக அளவான நடிப்பில் வலம் வருகிறார்.
இன்னொரு நாயகி திவ்யா நாகேஷ், பலருடன் பழகி கல்யாணத்துக்காக ஷாகிரை தேர்வு செய்து ஷாகிர் – அர்ச்சனா ஜோடியின் காதலுக்கு ஆப்பு வைக்க முயற்சி செய்வது ரசிக்கும்படி இருக்கிறது.
நாயகனின் நண்பராக வரும் அர்ஜுனன் காமெடி கலகலப்புக்கு உதவ, பி. ஸ்ரீமன், தலைவாசல் விஜய், இளவரசு, மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோரின் நடிப்பு நேர்த்தி.
நல. இளந்திரையன் பின்னணி இசை ஓரளவு படத்தை தாங்குகிறது. பாடல்கள் ஐந்தாறு இருந்தாலும் கானா பாலா குரலில் வரும் ஆரம்ப பாடல் அதிகம் கவர்கிறது. எம் ஜி ராயின் ஒளிப்பதிவு பட்க்ஜெட்டில் அடங்கியதாக தெரிகிறது.
பழக்கப்பட்ட கதைதான் என்றாலும் அழகைப் பார்த்து வருகிற காதலைவிட உணர்வுபூர்வமாக உருவாகிற காதல் பவர்ஃபுல்லானது என்பதை எடுத்துச் சொல்லியிருப்பதற்காகவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி யோசிக்க வைக்கிற கிளைமாக்ஸுக்காகவும் இயக்குநர் ஏ சி செளந்தரை பாராட்டலாம்.
Rating 2.5 / 5

