தன் குறைந்தளவிலான வருமானத்தில் நிறைவான வாழ்க்கை வாழ நினைக்கிறார் கதையின் நாயகன். மனைவி அவனது எண்ணத்துக்கு எதிரியாக நிற்கிறார். அதனால் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு பெருகுகிறது. அந்த நேரமாகப் பார்த்து லாட்டரியில் ஜாக்பாட் அடித்ததுபோல் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைக்கிறது.
கோடி ரூபாய் கிடைத்தது அதிர்ஷ்டம் என்றால் அதை அனுபவிக்க முடியாதபடி ஒரு துரதிஷ்ட சம்பவம் நடக்கிறது. அதையெல்லாம் கடந்து கோடி ரூபாய் மார்க்ஸ் குடும்பத்துக்கு கிடைத்தா, வாழ்க்கைத் தரம் உயர்ந்ததா என்பது மிச்சசொச்ச கதை.
மனைவியின் ஆசைகளுக்கு ஈடுகொடுக்க முடியாத வருமானத்தை வைத்துக் கொண்டு படாதபாடு படுகிற கேரக்டருக்கு தன் தரமான நடிப்பால் உயிர் கொடுத்து ஒட்டுமொத்த படத்தையும் தாங்கியிருக்கிறார் முனீஸ்காந்த்.
கணவனின் வருமானத்தை மீறிய வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவனை வார்த்தைகளாலும் செயல்பாடுகளாலும் நோகடிக்கிற வேலையை அலட்டலாக செய்திருக்கிறார் விஜயலெஷ்மி.
முனீஸ்காந்தின் தந்தையாக வேல ராமமூர்த்தி, நண்பர்களாக வடிவேல் முருகன், குரேஷி மூவரும் நியாயமான மனிதர்களாக நடமாடி ஏற்ற கேரக்டர்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
ராதாரவி, மாளவிகா அவினாஷ் என மற்றவர்கள் முக்கியத்துவமுள்ள பாத்திரங்களில் வந்து போகிறார்கள். காளி வெங்கட்டை கொஞ்சமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
‘தேன்கூடே’ பாடலை இனிமையாக தந்திருக்கும் பிரணவ் முனிராஜின் பின்னணி இசை கதைக்கேற்றபடி கச்சிதமாக பயணித்திருக்கிறது. சுதர்சன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகூட்டப்பட்டிருக்கிறது.
சுவாரஸ்யமான காட்சிகளைக் குவித்து, மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்து படத்தை ஜோரான அனுபவமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம்!
Rating 3.5 / 5


