ஒரு மலை, அதில் மலைமேல் வாழ்பவர்கள், அடிவாரத்தில் வாழ்கிறவர்கள் என இரு பிரிவு. மலைமேல் வாழ்கிற மக்களிடம் இருக்கும் யாளீஸ்வரர் சிலையை அபகரிக்க அடிவார மக்கள் பல வருடங்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த மக்களைப் பயன்படுத்தி சிலையைக் கைப்பற்ற வனத்துறை உயரதிகாரி ஒருவர் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்.
அவர்களிடமிருந்து மலைவாழ் மக்களால் சிலையைக் காப்பாற்ற முடிந்ததா இல்லையா என்பது மீதிக்கதை… இந்த கதையில் ஒரு யானைக்கும் பங்கிருக்கிறது.
விமலுக்கு மலைவாழ் மக்களின் தலைவன் என்ற பொறுப்பு வழங்கப்பட்டிருக்க, அதற்கான பங்களிப்பாக ஆஹா ஓஹோவென எதையாவது செய்வார் என்று பார்த்தால் கூட்டத்தோடு கூட்டமாக நின்று குரல் கொடுப்பவர் போலவே அவருக்கான காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் எதிராளிகளிகளை எதிர்கொள்ளும்போது வெளிப்படுத்தும் ஆக்ரோஷ ஆவேசங்களால் ஓரளவு கவனிக்க வைக்கிறார். மனைவி மீது, மகள் மீது, தன்னைச் சார்ந்த மக்கள் மீது, தான் வளர்க்கும் யானை மீது என குறை சொல்லமுடியாதபடி பாசமும் காட்டுகிறார்.
மக்களுக்காக போராடுகிற தலைவனின் மனைவி என்றால் அவரும் துணிச்சல் மிக்கவராக இருந்தால்தான் கதைக்களம் பலமடையும். அதற்கேற்ப தீயவர்கள் மீது சீற்றம் காட்டுகிற விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது விமலின் மனைவியாக வருகிற ஸ்ருஷ்டி டாங்கேவின் கதாபாத்திரம். அவர் குழந்தைத்தனமான முகத்தை வைத்துக்கொண்டு தன்னால் முடிந்தளவு கெத்து காட்டி அந்த கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியிருக்கிறார்.
அரக்கர்களாக இருக்கிற ஆடிவார மக்களின் தலைவியாக மஹிமா குப்தாவின் நடிப்பு மிரட்டுகிறது.
வனத்துறை அதிகாரியாக, தான் விரும்பியதை அடைய யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலையில் செயல்படுபவராக ஜான் விஜய். வழக்கம்போலவே இருக்கிறது அவரது வில்லத்தனம். ஒரு மாற்றமும் இல்லை.
சிலை கடத்தல் தாதாவாக வருகிற கபீர் துஹான் சிங் அண்ணாந்து பார்க்கும்படியான உயரத்தில் வாட்டசாட்டமாக இருக்கிறார். மனிதர்களை கண்டபடி சுட்டுத்தள்ளி கொடூர முகம் காட்டுகிறார்.
யோகிபாபுவை கொஞ்சம் கூடுதலாக பயன்படுத்தியிருக்கலாம். மற்றவர்களின் நடிப்பு கதையோட்டத்துக்கு பொருத்தம், யானைக்கான காட்சிகள் பரவாயில்லை ரகம்.
விமலும் ஸ்ருஷ்டி டாங்கேவும் உற்சாகமாக ஆடும் பாடலில் கவனம் பெறுகிறது பிரவீன்குமார் எனர்ஜிடிக்கான இசை.
உதய்பிரகாஷ் குமாரின் பின்னணி இசை நிறைவு. கதை நிகழும் மலையும் மலை சார்ந்த பகுதிகளும் அழகாக இருக்க அந்த அழகு குறையாமல் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனாஸ் பிரபு.
இந்தக் காலத்தில் மனிதர்கள் அரக்க குணத்தோடு இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த கதையில் அரக்கர்களாகவே வாழ்கிறார்கள். அதை ஏற்க முடியவில்லை. உணர்வுபூர்வமான காட்சிகளைத் தேட வேண்டியிருக்கிறது.
தாராளமான பொருட்செலவில் எடுக்கப்பட்டிருந்தாலும் கதை, திரைக்கதையில் கவனம் ஈர்க்கும்படியான விஷயங்கள் இல்லாததால் மகாசேனா ஆடியன்ஸ் விரும்பாத படைப்பாகியிருக்கிறது.
Rating 2 / 5

