முதலமைச்சர் செய்த ஒரு குற்றத்திற்கான ஆதாரம் வீடியோவாக ஒரு இளைஞனிடம் இருக்கிறது. அவனை பிடித்து வந்த போலீஸ் அதிகாரி லாக்கப்பில் தள்ளி அடித்து துன்புறுத்த, அவன் இறந்து போகிறான். அந்த ‘லாக்கப் டெத்’ கொலைப் பழியிலிருந்து போலீஸ் அதிகாரியை காப்பாற்ற அப்பாவி மனிதர் ஒருவரை குற்றவாளியாக்க முயற்சி செய்கிறார்கள்.
அந்த முயற்சிகள் கொடூரமாக இருக்க, அந்த அப்பாவி என்னவாகிறார்? போலீஸ் அதிகாரி தப்பிக்க முடிந்ததா? முதலமைச்சர் செய்த குற்றம் என்ன? அதற்கான தண்டனை கிடைத்ததா? என்பதையெல்லாம் அடுத்தடுத்த காட்சிகளில் தெரிந்து கொள்கிறோம்…
சாமானிய மனிதனாக கிஷோர். செய்யாத குற்றத்துக்காக போலீஸிடம் அடிபட்டு, மிதிபட்டு, குரூரமான தாக்குதல்களால் ரத்தம் சிந்துகிற காட்சிகளில் மனது ரணமாகிறது. மனிதர் உடம்பை பெரியளவில் கஷ்டப்படுத்திக் கொண்டு நடித்திருக்கிறார்.
பைக் ரேஸ் பிரபலம் டி டி எஃப் வாசன் நடிகராக, ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் படம் இது. தான் காதலிக்கும் பெண்ணின் அப்பாவான கிஷோரை போலீஸின் பிடியிலிருந்து மீட்பதற்காக புத்திசாலித்தனமாக காய் நகர்த்தும்போது ஹீரோயிஸத்தை வெளிப்படுத்துகிறார்; காதல் காட்சிகளை இயல்பான நடிப்பால் நிரப்புகிறார். அவரது பைக் ரேஸ் திறமையை பிரதிபலிக்க அட்டகாசமான ஆக்சன் காட்சியும் இருக்கிறது.
ஹரீஷ் பேரடி, போஸ் வெங்கட், ஜான் விஜய் மூவரும் ‘காவல்துறையினர் அதிகாரத்தில் உள்ளவர்களை திருப்திபடுத்த எந்தவிதமான கேடுகெட்ட செயல்களையும் செய்வார்கள்’ என்பதற்கு எடுத்துக்காட்டாக பங்களித்திருக்கிறார்கள்.
கிஷோரின் மனைவியாக வருகிற அபிராமி உள்ளிட்ட மற்றவர்களின் நடிப்பு அவரவர் கேரக்டர்களுக்கு பொருத்தமாக இருக்கிறது.
பின்னணி இசையும் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைந்திருக்க, படத்தின் சில காட்சிகள் தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டு அரசியல் களத்திலும் கடந்த காலங்களில் நடந்த உண்மைச் சம்பவங்களை நினைவுபடுத்துகிறது.
‘மனசாட்சிக்கு விரோதமாக செயல்படுவதில் காவல்துறையை மிஞ்சமுடியாது’, ‘மனிதாபிமானம் என்றால் என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது’ என்பதை ஏற்கனவே பல படங்கள் பதிவு செய்திருக்கின்றன. ‘ஐ பி எல்’லும் அதையே செய்திருக்கிறது.
Rating 2.5

