‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படக்கூடிய ஜி டி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படைப்பு.
ஜி.டி. நாயுடு கோயம்புத்தூர் அருகிலுள்ள கலங்கல் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்; பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்; இயந்திரங்களைச் சுயமாகக் கையாண்டு பழகியவர். தனது அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் புகழ் பெற்றவர். பருத்திப் பஞ்சு ஆலை, பேருந்துப் போக்குவரத்து நிறுவனம் என்றெல்லாம் துவங்கி மாபெரும் தொழிலதிபராக உயர்ந்தவர்.
அரசாங்கம் அவரது திறமையை, தொழில் வளர்ச்சியை, வருமானத்தைக் கண்டு மிரள்கிறது. அளவுக்கதிகமாக வரி விதிக்கிறது. அதை அவர் ஏற்க மறுக்கிறார். அதனால் கொதிப்படையும் அரசுத் தரப்பு அவரது தொழில்களை முடக்கத் தீர்மானிக்கிறது; தேசத்துரோகி என குற்றச்சாட்டுகிறது. எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு அராஜமாக நடந்து கொள்கிறது. அதையெல்லாம் சமாளித்து அவர் உலகம் போற்றும் சாதனையாளராக வரலாற்றில் இடம் பிடித்தது எப்படி என்பது மீதிக் கதை… இயக்கம் கிருஷ்ணகுமார் ராமகுமார்
ஜி டி நாயுடுவாக மாதவன். நடுத்தர வயதிலிருந்து வயதான காலம் வரையிலான காலகட்டம் வரை பயணிக்கிற அவர், கண்டுபிடிப்புகளால் அசத்துவது, அரசின் அடக்குமுறையை துணிச்சலாக எதிர்கொள்வது, நெருக்கடிகளை புத்திசாலித்தனத்தால் முறியடிப்பது என அத்தனை காட்சியிலும் நேர்த்தியான நடிப்பாலும், ஜி டி நாயுடுவின் தனித்துவமான உடல்மொழியை கச்சிதமாக பிரதிபலித்தும் கவனம் ஈர்க்கிறார்.
ஜி டி நாயுடுவின் மனைவியாக துஷாரா விஜயன் இளவயதிலிருந்து முதுமைப் பருவம் வரையிலான தோற்றத்தில் ஆளுமையான பெண்மணியாக வலம் வருகிறார்.
ஜி டி நாயுடுவின் வாழ்நாள் முழுவதும் பக்கபலமாக இருக்கிற மனிதராக சத்யராஜ், நேர்மையான அரசு அதிகாரியாக ஜெயராம், ஜி.டி. நாயுடுவின் கண்டுபிடிப்புகளின் உரிமைகளைக் கைப்பற்ற சதிச்செயல்களில் இறங்கபவராக வினய் ராய், பிரிட்டீஷ் அரசு உயரதிகாரிகளின் சூழ்ச்சிக்கு உதவும் அதிகாரியாக கருணாகரன், இளவயது ஜி டி நாயுடுவாக டி ஜே அருணாச்சலம், இளவயது ஜி டி நாயுடுவின் மனைவியாக ஷீலா, உறவினராக தம்பி ராமையா, ஜி.டி. நாயுடுவின் ஆரம்பகால அறிவியல் ஆர்வத்தைக் கண்டறிந்து ஊக்கமளிக்கும் பிரிட்டிஷ் தொழிலதிபர் ராபர்ட் ஸ்டேன்ஸாக ரிச்சர்ட் பக்தி க்ளெய்ன், ஜெர்மனி நாஜி அரசின் உளவுத்துறையிடமிருந்து ஜி டி நாயுடுவின் கண்டுபிடிப்புகளைப் பாதுகாக்க உதவிய ஜெர்மனியப் பெண்ணாக சில்பா ஸ்ரீகுமார், தந்தை பெரியாராக விஜய் யேசுதாஸ் என அத்தனைப் பேருடைய கதாபாத்திரத்துக்கான தோற்ற மாற்றமும் நடிப்புப் பங்களிப்பும் படத்தின் பலம்.
கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது. பாடல்களும் சம்பவங்கள் நடக்கும் காலகட்டப் பின்னணிக்கு பொருந்திப் போகிறது.
அரவிந்த் கமலநாதனின் ஒளிப்பதிவில், கலை இயக்குநரின் ஈடுபாடான உழைப்பில் 1918லிருந்து ஜி டி நாயுடுவின் முதுமைப் பருவம் வரையிலான காலகட்டத்திற்கு போய் வந்த உணர்வு வருகிறது.
நம்மிடையே வாழ்ந்து மறைந்த சாதனையாளர்களைப் பற்றி அறிந்து கொள்வது உந்து சக்தியாக இருக்கும். இந்த படத்தைப் பார்ப்பதால் அந்த உந்து சக்தி உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் கிடைக்கலாம். அந்த வகையில் இன்றைய தலைமுறை இளைஞர்களும், மாணவர்களும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் இது.
Rating 3.5 /5


