தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சியில் துணை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனது திறமையான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வருபவர் நடிகை விஜயலட்சுமி வீரமணி. ‘மாவீரன்’, ‘செம்பி’, ‘கஜானா’ உள்ளிட்ட திரைப்படங்களிலும், ‘ஆபீஸ்’ தொடரிலும் தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்துள்ளார்.

தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து வரும் விஜயலட்சுமி வீரமணி, தற்போது சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த, உணர்வுப்பூர்வமான பாலம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே வெளியாகியுள்ள இப்படத்தின் டிரெய்லரில் விஜயலட்சுமி கதாபாத்திரத்தின் அழுத்தமான தன்மையையும், இதுவரை அவர் ஏற்று நடித்திராத மாறுபட்ட உணர்வுப்பூர்வமான நடிப்பையும் பார்க்க முடிகிறது. செப்டம்பர் 17ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை விஜயலட்சுமி வீரமணி பகிர்ந்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி வீரமணி பகிர்ந்து கொண்டதாவது, “உணர்வுகளுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது என்னைப் போன்ற வளர்ந்து வரும் நடிகருக்கு கிடைத்த வரம். உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று நான் எப்போதும் கனவு கண்டிருக்கிறேன். ‘என்ன விலை’ படத்தின் மூலம், இதுவரை ரசிகர்கள் பார்த்திராத என்னுடைய நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தக்கூடிய தனித்துவமான கதாபாத்திரம் கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
பாலம்மா கதாபாத்திரம் ஒரு நடிகையாக என்னிடம் நிறைய எதிர்பார்த்தது. மிகச் சிறந்த கலைஞரான கருணாஸ் அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. இத்தனை ஆண்டுகளாக திரைத்துறையில் பயணித்துவரும் அவரைப் போன்ற ஒரு கலைஞர், என்னுடைய நடிப்பை ஊக்குவித்து பாராட்டியது எனக்கு மறக்க முடியாத தருணமாக அமைந்தது. நிமிஷா சஜயன் என்னைப் போன்ற கலைஞர்களுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவருடன் நடித்திருப்பது மகிழ்ச்சி” என்றார்.
மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “இந்தக் கதாபாத்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி. சஜீவ் சார் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் இயக்குநர். மிகவும் எளிமையான தருணங்களைக்கூட கூர்ந்து கவனித்து, அவற்றை சுவாரஸ்யமாகவும் அர்த்தமுள்ளதாகவும் கொடுப்பவர். கதாபாத்திரங்கள் மற்றும் அவற்றின் உணர்வுகள் குறித்து அவருக்கு இருந்த தெளிவு, எனக்கும் சிறந்த அனுபவமாக இருந்தது. இவ்வளவு வலுவான கதைக்களத்துடனும், சமூக முக்கியத்துவம் வாய்ந்த மையக்கருத்துடனும் உருவாகியுள்ள திரைப்படத்தில் நடித்திருப்பது அதிர்ஷ்டம்” என்றார்.
சமூக முக்கியத்துவம் வாய்ந்த பின்னணியில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம் ராமேஸ்வரம் அருகே கடலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் நாணயங்களை மீட்டெடுத்து வாழும் ஒருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. கண்ணியத்துடனும் வாழ்வாதாரத்திற்காகவும் அவர் மேற்கொள்ளும் போராட்டம், இறுதியில் ஒரு முக்கியமான சட்டப் போராட்டத்திற்கு வழிவகுக்கிறது.
இப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன், விஜயலட்சுமி வீரமணி, சாஷா, சித்தா தர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீணா, மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை கலாமயா பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜிதேஷ் வி தயாரித்துள்ளார். படத்தின் தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி மற்றும் படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சமூக முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘என்ன விலை’, செப்டம்பர் 17, அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

