HomeMovie Reviewதிவ்யா சினிமா விமர்சனம்

திவ்யா சினிமா விமர்சனம்

Published on

எத்தனை உயிர்களை கொன்று தீர்த்தாலும் அடங்காமலிருக்கிற சாதிவெறியை மையப்படுத்தி மற்றுமொரு படம். புதுமுகங்களின் நடிப்பில் ‘திவ்யா.’

பறையடிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த சிவா, அப்பா அம்மாவை இழந்த நிலையில் தாத்தாவின் அன்போடு வளர்ந்து ஆளாகி, கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். பறையடிக்கும் பணியிலும் அவ்வப்போது ஈடுபடுகிறான். அவனைப் பற்றி நன்றாக தெரிந்துகொண்ட ஆதிக்க சாதிப் பெண் திவ்யாவுக்கு அவன் மீது ஈர்ப்பு உருவாகிறது. அவள் தன் காதலை அவனிடம் சொல்ல, அவனும் அவள் மீது காதலாகிறான்.

அப்புறமென்ன, வழக்கம்போல் அவர்கள் ஊர் சுற்றி உற்சாகமாக, திவ்யாவின் அப்பா அவர்களைப் பார்த்துவிட, அவர் சாதிக்கும் அந்தஸ்துக்கும் முக்கியத்துவம் தருபவராக இருக்க, மகளின் காதலுக்கு எதிரியாகிறார். திவ்யாவை வீட்டுக்கள் பூட்டி வைத்து, சொந்தக்கார இளைஞனுக்கு கல்யாணம் செய்து கொடுப்பதற்கான வேலைகளில் இறங்குகிறார்.

அது ஒருபக்கமிருக்க சிவா, திவ்யாவை அழைத்துப் போய் கல்யாணம் செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறான்.

இப்படி நகரும் கதையில், காதலர்கள் மண வாழ்க்கையில் இணைந்தார்களா இல்லையா என்பது மீதிக்கதை…

கிராமத்து இளைஞன், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்கு தோற்றத்தால் பொருந்தியிருக்கிறார் சிவாவாக வருகிற ஆர் ஜெ பி. கல்லூரி நண்பர்களோடு சேர்ந்து அடிக்கடி குடிப்பதை தவிர நல்லவராகவே இருக்கிறார். அவர் திவ்யாவை காதலிக்கவில்லை; திவ்யா தன்னை காதலிப்பது தெரிந்தபின்னரே காதலில் விழுகிறார்.

தான் காதலிக்கும் பெண்ணின் அப்பா ஊரில் பெரிய மனிதர், அரசுப் பணியில் இருப்பவர், பணபலம் கொண்டவர், சாதிப் பற்றுள்ளவர். அவரை எதிர்த்து அவரது பெண்ணை கூட்டிப்போய் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுப்பவர், அதற்கான துணிச்சலைக் காட்டுவது விளையாட்டுத் தனமாக இருக்கிறது. கல்லூரிப் படிப்பைக் கூட முடிக்காத வயதில், கணவன் மனைவியாக வாழ்வதற்கு அடிப்படையான விஷயங்களை பலமாக்கிக் கொள்ளாமல் தாலி கட்டும் முயற்சியில் இறங்குகிற அவரது கதாபாத்திரம் எரிச்சலூட்டுகிறது. ஹீரோ என்பதற்கான எந்த மெனக்கெடலும் இல்லாமல் இயல்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார். படத்தை இயக்கியிருப்பதும் அவரே.

திவ்யாவாக வருகிற கேத்தி, சாதாரண பக்கத்து வீட்டுப் பெண் போன்ற எளிமையான தோற்றத்தில் இருக்கிறார். காதல் யார் மீது வேண்டுமானாலும் வரும் என்பதற்கேற்ப அவருக்கு சிவா மீது காதல் வருவதில் ஆச்சரியமில்லை. அப்பா, அம்மா சொந்த பந்தம் என எல்லோரும் சாதி வெறி பிடித்தவர்களாக இருக்க அவர் படும் பாடு பரிதாபமாக இருக்கிறது.

காதலனை நம்பி ஓடிப்போக முடிவெடுப்பது, போலீஸ் ஸ்டேசனில் எல்லோர் முன்னிலையிலும் காதலனை கட்டிப்பிடித்து காதலின் ஆழத்தை உணர்த்துவது என பாராட்டும்படியான நடிப்பைக் கொடுத்து கவனம் பெறுகிறார்.

திவ்யாவின் உறவினராக, சாதிதான் முக்கியம் என முடிவெடுத்து செயல்படுபவராக செந்தில். கிளைமாக்ஸில் காட்டியிருக்கும் வில்லத்தனம் மிரட்டல்.

நண்பர்களாக வருகிற சபி, ஜிவி இருவருக்கும் ஹீரோவுடன் சேர்ந்து குடிப்பதற்கே நேர சரியாக இருக்கிறது. அதில் ஒருவர் கல்லூரியில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே குடிக்கிறார். காதல் ஜோடியை சேர்த்து வைப்பதில் தேவையான அளவுக்கு பரபரப்பு காட்டியிருக்கிறார்கள்.

திவ்யாவுக்கு அப்பா, அம்மாவாக வருகிறவர்கள் சாதிப் பெருமையைக் காப்பாற்றுவதற்காக எந்த எல்லைக்கும் போகிறவர்களாகவும், பாசத்துக்கு கட்டுப்பட்டவர்களாகவும் இருவேறு மனநிலை பிரதிபலிக்கும்படியான உடல் மொழியோடு களமாடியிருக்க, சிவாவின் தாத்தாவாக வருகிற பவுனுராஜ் சுடுகாட்டில் பாடும் பாடல் மனதை கலங்கடிக்காமல் விடாது.

ஒளிப்பதிவாளர் செல்வகுமார்,  இசையமைப்பாளர் சங்கர் ராமன் கூட்டணி எளிமையான பட்ஜெட் படைப்புக்கு தங்களால் எந்தளவில் உரோட்டம் தர முடியுமோ அந்தளவில் தந்திருக்கிறார்கள்.

காதலில் ஆழமில்லாதது போன்ற காட்சியமைப்புகள், யூகிக்க முடிகிற காட்சிகளின் அணிவகுப்பு சோர்வு தருகிறது. ஆண்டுகள் எத்தனை கடந்தோடினாலும், யுகங்கள் பல மாறினாலும் சா’தீ’யை அணைப்பதென்பது முடியாத காரியம் என்பதை இந்த படமும் அடித்துச் சொல்கிறது.

திவ்யா – சமூக அவலத்தின் சாட்சி!

Rating 2.5 / 5

 

Latest articles

ராம் அண்ட் லீலா சினிமா விமர்சனம்

நாயகன் ராமுக்கு பெண் பார்க்கிறார்கள். யாருக்கும் அவரை பிடிப்பதில்லை. அந்த விரக்தியில் இருக்கும் அவர் ஒரு கட்டத்தில் லீலாவை...

பரபர கதைக்களம்; விறுவிறு திரைக்கதை… மனநோயாளியாக முருகா அசோக் அசத்தும் ‘கிட்டி’ காந்தி ஜெயந்தி’யன்று வெளியாகிறது!

பரபர கதைக்களத்துடன் விறுவிறு திரைக்கதையில் அமைந்த படங்களை விரும்பும் ரசிகர்களுக்காகவே உருவாகியுள்ள படம் 'கிட்டி.' தமிழ் சினிமாவில் நாட்டில்...

பெரிய நட்சத்திரங்கள். இன்னும் பெரிய கதைகள். தமிழ் ZEE5 வழங்கும் இதுவரையிலான மிகச் சிறப்பான உள்ளடக்கத் தொகுப்பு.

ஜனநாயகன் முதல் பிரபலமான ஃபிராஞ்சைஸ்களின் தொடர்ச்சி வரை, இன்றைய தமிழ் பொழுதுபோக்கை வரையறுக்கும் கதைகள், நட்சத்திரங்கள் மற்றும் அனுபவங்களை...

பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு! தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி

தரமான புற்றுநோய் சிகிச்சையை அனைவருக்கும் எளிதாகவும், குறைந்த செலவிலும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஜஸ்’ ஆன்கோ (Jus’...

More like this

ராம் அண்ட் லீலா சினிமா விமர்சனம்

நாயகன் ராமுக்கு பெண் பார்க்கிறார்கள். யாருக்கும் அவரை பிடிப்பதில்லை. அந்த விரக்தியில் இருக்கும் அவர் ஒரு கட்டத்தில் லீலாவை...

பரபர கதைக்களம்; விறுவிறு திரைக்கதை… மனநோயாளியாக முருகா அசோக் அசத்தும் ‘கிட்டி’ காந்தி ஜெயந்தி’யன்று வெளியாகிறது!

பரபர கதைக்களத்துடன் விறுவிறு திரைக்கதையில் அமைந்த படங்களை விரும்பும் ரசிகர்களுக்காகவே உருவாகியுள்ள படம் 'கிட்டி.' தமிழ் சினிமாவில் நாட்டில்...

பெரிய நட்சத்திரங்கள். இன்னும் பெரிய கதைகள். தமிழ் ZEE5 வழங்கும் இதுவரையிலான மிகச் சிறப்பான உள்ளடக்கத் தொகுப்பு.

ஜனநாயகன் முதல் பிரபலமான ஃபிராஞ்சைஸ்களின் தொடர்ச்சி வரை, இன்றைய தமிழ் பொழுதுபோக்கை வரையறுக்கும் கதைகள், நட்சத்திரங்கள் மற்றும் அனுபவங்களை...