பணபலத்துடனும் அடியாள் பலத்துடனும் கெத்தாக வலம் வருபவர் லிங்கம். அவரது மகள் விபத்தொன்றில் இறந்துபோக, உடலை போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் தர வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்கிறார் லிங்கம். போஸ்ட்மார்ட்டம் செய்கிற பெண் டாக்டர், ‘போஸ்ட்மார்ட்டம் செய்துதான் தருவோம்; அதுதான் ரூல்ஸ்’ என சட்டம் பேசுகிறார். லிங்கத்தின் மகன் அர்னால்டு (டேனியல் பாலாஜி) ஊரறிந்த ரவுடி. அவர் தன் செல்வாக்கு அனைத்தையும் திரட்டி, டாக்டரை மிரட்டி உடலை போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறார்.
டாக்டர் ‘போஸ்ட்மார்ட்டம் செய்தே தீருவேன்’ என பிடிவாதம் பிடிக்க என்ன காரணம், போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் உடலை பெறுவதற்காக அர்னால்டு மல்லுக்கட்ட என்ன காரணம்? நடந்தது விபத்தா, கொலையா?
இப்படி மனதில் உருவாகும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் தருகின்றன அடுத்தடுத்த காட்சிகள்…
‘நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ, நான் போஸ்ட்மார்ட்டம் செய்யாம பாடிய தர மாட்டேன்’ என்று உறுதியாக நின்று மிரட்டல் உருட்டல்களை, மேலிடம் தரும் அழுத்தத்தை துணிச்சலாக எதிர்கொள்பவராக தான்யா ரவிச்சந்திரனின் நடிப்பு கம்பீரமாக இருக்கிறது.
டாக்டரை மிரட்டி காரியம் சாதித்துக் கொள்ள முயற்சி செய்பவராக டேனியல் பாலாஜி, வெட்டுக்குத்து, கொலை என வழக்கம்போல் நடிப்பில் அதிரடி அட்டகாசம் செய்கிறார்.
லிங்கமாக இயக்குநர் பாக்யராஜ் மகளை இழந்த வலியை வேதனையை கச்சிதமான நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக ஸ்வேதா டோரத்தி, காவல்துறை உயரதிகாரியாக இயக்குநர் தமிழ் என மற்றவர்களின் பங்களிப்பு தாக்கம் தருகிறது.
பரபரப்பான கதைக்களம் கிடைத்துவிட்டால் ஜிப்ரானின் பின்னணி இசை பின்னிப்பெடலெடுக்கும். இந்த படத்திலும் அந்த இசை இருக்கிறது. ஒளிப்பதிவு மிகமிக நேர்த்தி.
ஒரு உடலை போஸ்ட்மார்ட்டம் செய்வதில் உறுதியாக இருக்கும் பெண் மருத்துவர், அவரை அந்த பணியை செய்யவிடாமல் தடுக்க வன்முறை வெறியாட்டத்தில் இறங்கும் ஒருவர் என கதைச்சூழலை உருவாக்கிய இயக்குநர், அழுத்தமான திரைக்கதை அமைத்திருந்தால் படம் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க கிரைம் திரில்லர் வரிசையில் இணைந்திருக்கும்.


