‘அனல் மழை’ என்ற படத்தை அ அய்யனாரப்பன் அழகான டிராமாவாக இயக்கியுள்ளார். படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் பேசிய அய்யனாரப்பன், ”இந்த மேடை ஏற எனக்கு 40 வருடங்கள் ஆகியது, பல படங்களில் பணி புரிந்திருக்கிறேன். இப்போது முதன் முறையாக ஒரு படத்தை இயக்கியுள்ளேன். அதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மோகனுக்கு மிகவும் நன்றி, எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தின் டிரெய்லர் பார்த்து படத்தின் கதையை புரிந்து கொள்ள முடியாது, படம் பார்த்து படத்தை பற்றி சொல்லுங்கள்” என்றார்.
கதாநாயகன் அப்துல் ஷரீப், ”கலை மீதுள்ள ஆர்வத்தினால் கூத்து பட்டறை சேர்ந்து என்னுடைய கலையை வளர்த்து கொண்டேன். இதுவரை 15 படங்களில் துணை நடிகராக நடித்துள்ளேன். மேடை நாடகத்தில் இருந்து தான் பல நடிகர்களும் தலைவர்களும் உருவாக்கியுள்ளனர், அதே போல இந்த படத்தில் பணி புரிந்துள்ள அனைவரும், ஒரு வெற்றி பாதையை அடைய வேண்டும் அது நடக்கும் என நம்புகிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் மோகன், ”படத்தின் தலைப்பு பற்றி படம் பார்த்து முடியும் போது அனல் மழை என்ன என்பது உங்களுக்கு புரியும். இங்கு இருக்கும் அனைவரின் உள்ளத்திலும் ஒரு அனல் இருந்து கொண்டே தான் இருக்கும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அனல் இருக்கும், அப்படி பட்ட ஒரு அனல் தான் இந்தப் படம், இந்தப் படம் பார்க்கும் 60 வயது 70 வயது உள்ள அனைவரும் தன் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை நினைத்துக் கொள்வார்கள்” என்றார்.
தயாரிப்பாளர் திரு கே ராஜன், ”மழை என்றால் குளிர்ச்சிதான். அந்த மழை அனலாக பொழிந்தால் என்ன ஆகும் என்பதே இப்படம். டிரெய்லரும் பாடலும் கவர்ந்தது. அனைவரும் புது முகங்கள். நன்றாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.