திருவண்ணாமலை சுற்று வட்டாரத்திலுள்ள குறிப்பிட்ட ஒரு கல்லூரியைச் சார்ந்த மாணவிகள் ஒரு சிலரும், பேராசிரியரும் துணை முதல்வரும் அடுத்தடுத்து ஜெடூசி என்ற பெண்கள் பயன்படுத்துகிற கொண்டையூசியால் குத்திக் கொல்லப்படுகிறார்கள். கொல்வது பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன்.
ஏன் கொல்கிறான், ஜெடூசியை ஏன் பயன்படுத்துகிறான் என்பதற்கு பரபரப்பான பிளாஷ்பேக் இருக்கிறது.
கதைநாயகனாக ஸ்ரீதர். பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞராக கெட்டப் நன்றாகப் பொருந்துகிறது. கொடியவர்களை வேட்டையாடும்போது தேவைக்கேற்ப ஆக்ரோஷத்தை தந்திருப்பவர் நீதிமன்றத்தில் தன் அக்காவின் மகளுக்கு நடந்த கொடுமைகளை எடுத்துச் சொல்லும்போது கோபத்தையும் வேதனையையும் சரிவிகிதத்தில் கலந்து டெலிவரி செய்திருக்கிறார்.
அதுவரை உடுத்தியிருந்த உடையிலிருந்து நாகரிக உடைக்கு மாறும்போது காட்டும் தயக்கத்திலிருந்து கொடுமைகளை அனுபவித்து, பரிதாப முடிவை தேடிக் கொள்வது வரை நாயகனின் முறைப் பெண்ணாக வருகிற ஸ்வேதா கச்சிதமான நடிப்பாலும் கவர்ச்சியான உடற்கட்டாலும் கவர்கிறார்.
பெண்களை பாலியல் பசிக்கு பலியாக்குகிறவராக ஏ வெங்கடேஷ் காட்டும் திமிர் தெனாவட்டு கெத்து.
கொலைக்கான பின்னணியை அலசி ஆராய்வதில் போலீஸுக்கு உதவி செய்கிற செகன்ட் ஹீரோயின் சினி யுதன் பரபரப்புக் காட்சிகளுக்கு உதவுகிறார்.
பிளாக் பாண்டி, பவா செல்லதுரை, ஜெயந்திமாலா, அருவி மதன், அசோக் பாண்டியன் என மற்றவர்கள் ஏற்ற கேரக்டர்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் நாகஅர்ஜுனின் கேமரா காடு மேடுகளையும் நகரத்தையும் சுற்றித் திரிந்து காட்சிகளை தரமாக பதிவு செய்துள்ளது. விக்னேஸ்வரன் இசையில் பாடல்கள் மனதில் ஒட்டிக் கொள்ளாவிட்டாலும் கேட்க இதம். பின்னணி இசையில் குறையில்லை.
பெண்களைச் சீரழிக்கிற குற்றங்களை மையப்படுத்தி, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்ற கொதிப்போடு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் நட்ராஜ் ஏகாம்பரம். நீதிபதி சட்டத்தை கையிலெடுப்பது போன்ற காட்சி அதிரடியாக இருந்தாலும் தவறான முன்னுதாரணம். அப்படி சில காட்சிகளை மனம்போன போக்கில் உருவாக்கியிருப்பது உட்பட படத்திலிருக்கிற சில குறைகளைப் பொறுத்துக் கொண்டால் படைப்பில் இறக்கி வைத்திருக்கிற அவரது கொதிப்பை பாராட்டலாம்.
Rating 3 / 5 

