மருத்துவ மாணவி ப்ரீத்தி அஸ்ரானியும் முகேனும் காதலர்கள். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிய, சிலபல நாட்களில் பிரீத்தி காணாமல் போகிறார். அவரை கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் முகேனை போலீஸ் கைது செய்கிறது; ஜாமினில் வெளிவரும் அவர் முன்னாள் காதலியைத் தேடத் துவங்குகிறார். அந்த நேரத்தில் பிரீத்தி மருத்துவப் படிப்பைத் தொடர்கிற மருத்துவமனை சேர்மனின் மகளும் காணாது போகிறார்.
அந்த சம்பவங்கள் ஏன் நடக்கிறது, நடத்துவது யார்?
சுறுசுறுப்பான திரைமொழியில் பதில் தருகிறார் அறிமுக இயக்குநர் பலராம் கிருஷ்ணா.
காதலிப்பது, காதலியைக் கடத்திய சந்தேகத்தில் கைதாகி போலீஸின் அடி உதைக்கு ஆளாவது, வில்லன் கும்பலுடனான சண்டைக் காட்சியில் ஆக்ரோஷம் காட்டுவது என முகேன்ராவின் பங்களிப்பு கச்சிதம்.
சமூகத்தில் நடக்கும் அநீதிகளை வீடியோவாக எடுத்து வைரலாக்குகிற துணிச்சலான பெண்ணாக பிரீத்தி அஸ்ராணி துறுதுறுவென களமாடிக் கொண்டிருக்க, மருத்துவமனை சேர்மனின் மகளாக கவர்ச்சியான உடையில் நடமாடிக் கொண்டிருக்கிறார் தான்யா ஹோப்.
வில்லனாக நிதின் சத்யா மிரட்ட முயற்சித்திருக்கிறார். கஜராஜ், சுரேகா வாணி உள்ளிட்டோர் கொடுத்த எளிமையான வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள்.
இமானின் பின்னணி இசையில் ஆர்ப்பாட்டம் அதிகமாக தெரிகிறது. பாடல்கள் இதம்.
மருத்துவமனையில் நடக்கும் குற்றங்கள், அதன் விளைவாக நடக்கும் அதிரடியான சம்பவங்கள் என கதையை யோசித்த இயக்குநர் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் வலுவாக உருவாக்கியிருந்தால் நிறம் தரம் கூடியிருக்கும்.
Rating 2.5 / 5

