இலங்கைத் தமிழர்கள் குறித்த படைப்புகளின் வரிசையில் குண்டு வெடிப்பு, பாலியல் கொடுமைகள் என பழக்கப்பட்ட விஷயங்களைத் தவிர்த்து உருவாகியிருக்கும் திரைப்படம்.
போரில் மனைவியை இழந்த சேதுராமனும் அவரது மகளும், தாங்கள் இதுவரை வாழ்ந்த தாய்நிலத்தை விட்டு மகளோடு தமிழத்தின் தென்காசி பகுதிக்கு வருகிறார்கள். சாலையோர பேருந்து நிறுத்தத்தை இருப்பிடமாக்கிக் கொண்டு நாட்களைக் கடத்துகிறார்கள். அந்த வாழ்க்கை அவர்களுக்கு என்னவெல்லாம் தருகிறது என்பதே கதை…
இழப்பின் வலி, மகளின் பசியாற்றத் துடிக்கும் தவிப்பு, உழைக்காமல் எதையும் யாரிடமிருந்தும் பெறக்கூடாது என்ற உறுதி, எந்த நிலையிலும் அழக்கூடாது; அப்படி அழுதால் தங்கள் இனத்தின் தோல்வி என்ற கொள்கை, அந்த கொள்கையை மகளுக்கும் புகட்டும் பக்குவம் என எளிமையாக நடித்திருக்கிறார் சேதுராமனாக வருகிற அமர் ராமச்சந்திரன்.
மகளாக வருகிற சிறுமி நேஹா அமர் சரியான இருப்பிடம் இல்லாமல், விரும்பும் உணவை சாப்பிட முடியாமல் தனக்காக அப்பா படும் கஷ்டங்களில் பங்கெடுத்துக் கொள்கிற கேரக்டருக்கு இயல்பான நடிப்பால் பலம் தந்திருக்கிறார்.
சேதுராமனின் வேலைக்கு ஐடியா கொடுப்பது, அவரது மகளின் படிப்புக்கு ஏற்பாடு செய்வது என, மனிதாபிமானமுள்ள மனிதராக அலட்டலில்லாத நடிப்பை தந்திருப்பது பாலா சிங். அவரைப் போலவே உதவும் குணம் கொண்டவர்களாக நான்கைந்து பேர் ஆட்டோ ஓட்டுநர்களாக வருகிறார்கள். அவர்களின் பங்களிப்பும் மற்ற சில கேரக்டர்களை ஏற்றவர்களின் நடிப்பும் கச்சிதமாக இருக்கிறது.
அவுஸப்பச்சன் இசையில் பாடல்கள் இனிமை; பின்னணி இசை பரிதாபம் சுமந்த கதைக்கு பொருத்தம். பிரசாந்த் பிரணவத்தின் ஒளிப்பதிவு எளிமையாக, போதுமான அளவிலிருக்கிறது.
இந்த படம் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிவது, காலங்காலமாக வசித்த இடத்தை விட்டு வெளியேறி, அகதிகளாக மாறுகிற மனிதர்களின் வாழ்நாள் எந்தளவுக்கு பரிதாபத்துக்கு உரியது என்பதன் ஒரு துளி. அந்த ஒரு துளியை முடிந்தவரை அதன் தன்மையோடு பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் அபிலாஷ் ஜி தேவன். குறைகள் இல்லாமலில்லை; இதுபோன்ற படங்களில் அவற்றை பெரிதுபடுத்தி பார்ப்பது அவசியமில்லை.
Rating 3 /5 

