திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்னு வந்துச்சாம் யோகம் என்பது போல் மூன்று எளிய குடும்பங்களிடம் 5 கோடி ரூபாய் சிக்குகிறது. அந்த பணத்தை வைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள், அந்த பணம் அவர்களை என்னவெல்லாம் செய்கிறது என்பதே ‘ஆல்பாஸ்.’
ஒரு சில காட்சிகள் சாதி ஏற்றத்தாழ்வு பற்றியும் லேசாக பேசியிருக்கிறது. இயக்கம் மைதீன்
ஜெயபிரகாஷ், சுப்ரமணிய சிவா, பிரசன்னா பாலசந்தர். வினோதினி, செந்திகுமாரி, மோகனா என மூன்று குடும்பங்களின் தலைவன் தலைவியாக வருகிறார்கள்.
கிடைத்த பணத்தில் கடன்களை அடைக்கலாம். ஆளுக்கு பத்து பவுன் நகை வாங்கலாம், சொந்த வீடு வாங்கலாம் என்றெல்லாம் யோசிக்கிறவர்களாக, அதை செயல்படுத்துவதில் இருக்கிற ஆபத்துக்களை உணர்ந்து என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறவர்களாக, எப்போது வேண்டுமானாலும் பணத்துக்கு சொந்தக்காரரிடம் சிக்கிக் கொள்வோம் என பயப்படுபவர்களாக பொருத்தமாக நடித்திருக்கிறார்கள். பணத்தைக் கண்டு மயங்காதவராக, அதிலிருந்து எடுத்துச் செலவு செய்ய உடன்பாடில்லாதவராக தனித்து தெரிகிற கேரக்டர் ஜெயபிரகாஷுக்கு.
இந்த திடீர் பண வரவு, அதனால் சண்டை சச்சரவு என ஒரு பக்கம். இன்னொரு பக்கம் கதாநாயகன் ஆட்டோ ஓட்டுபவராக நேர்மையானவராக இருக்க, வில்லங்கமான முறையில் கிடைத்த கோடிக்கணக்கான பணத்தை வீட்டில் வைத்திருக்கிற குடும்பங்களின் ஒன்றின் வாரிசான ஜனனியை அவர் காதலிக்க, அவர்களுக்குள் ஏற்படும் சிறு பிரச்சனைகள் கதையின் ஒரு பகுதியாகிறது. துஷ்யந்த் – ஜனனி ஜோடிப் பொருத்தம் அசத்தல். நடிப்பில் குறையில்லை.
கண்ணில் பட்ட 5 கோடி ரூபாயை அசால்ட்டாக வீட்டுக்கு தூக்கி வந்து வைக்கிற மூன்று குடும்பங்களின் ஆண் வாரிசுகளாக சஞ்சய், கோகுல், நிகில். பள்ளி மாணவர்களாக வருகிற அவர்களின் நடிப்பும் நன்று.
பணத்தின் சொந்தக்காரராக சரத் லோகிதஸ்வா அதட்டலும் உருட்டலுமாக வன்முறையில்லா வில்லத்தனம் காட்டுகிறார். அருவி மதன், ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, கலையரசன் கண்ணுசாமி என சிலர் சப்போர்ட்டிங் கேரக்டர்களில் கலந்திருக்கிறார்கள்.
ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாடல்கள் இதம். பின்னணி இசை கதையின் போக்கிற்கு ஏற்றபடி பயணிக்கிறது. கதை நிகழ்விடங்கள் சுமாராக இருந்தாலும் பளீரென காண்பிக்கிறது ஒளிப்பதிவாளர் தில்ராஜுவின் கேமரா.
எம் எல் ஏ ஒருவருக்கு சொந்தமான பணம் மூன்று குடும்பங்களுக்குள் வந்து சேர்கிற ஆரம்பக் காட்சி சுவாரஸ்யம். இடையில் அரை மணி நேரம் மெல்லமாக பயணிக்கிற காட்சிகளைப் பொறுத்துக் கொண்டால், அதன்பின் காமெடி கலாட்டாக்களோடும் பணம் படுத்தும் பாட்டை எடுத்துச் சொல்லும் விதமாகவும் ஓடி முடிகிற இந்த ஆல் பாஸ் குடும்பத்தோடு பார்க்க குட் சாய்ஸ்!
Rating 3 / 5

