தொடர் கொலைகள் அதன் பின்னணியில் அமானுஷ்யம், பகை, பழிவாங்கல் என சுறுசுறுப்பு பாய்ச்சல் காட்டும் ‘தி டார்க் ஹெவன்.’
மர்மமான முறையில் தொடர்ந்து மரணங்கள் நடக்கிற காடும் மலையும் கலந்துகட்டிய மேக்கரை என்ற ஊர். அந்த ஊரில் காவல் துறை உயரதிகாரியாக பொறுப்பேற்கும் கதாநாயகன் சித்து. அவர் கொலைகள் ஏன் நடக்கிறது, யாரால் நடக்கிறது என்பதை கண்டறிவதற்கான முயற்சியில் இறங்க, அதன் பின் நடக்கும் அத்தனை சம்பவங்களுமே எதிர்பாராதவைதான்; அதிர்ச்சிமேல் அதிர்ச்சி தருபவைதான்…
சின்னத்திரை சித்துவுக்கு நல்ல அறிமுகம் இந்த படம். முகத்தை முறைப்பாக வைத்தபடி களமாடுவது விசாரணையில் கவனம் செலுத்துகிற காட்சிகளுக்கு போதுமானதாக இருக்கிறது. மற்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதில் இன்னும் தேர்ச்சி பெற வேண்டும்.
சித்துவின் மனைவியாக தர்ஷிகா, குடும்பப் பாங்கான தோற்றத்தில் லட்சணமாக இருக்கிறார். குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அவர் எடுக்கும் முடிவு உலுக்குகிறது.
ரித்விகா அப்பாவியாகவும் அடிப்பாவி என்று சொல்லும்படியும் இருவேறு பரிமாணங்களில் அசத்த, ‘பொலி கப்புள்ஸ்’ பிரதீப்பின் நடிப்பு மிரட்டலாக இருக்கிறது. வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயகுமார், விஜய் சத்யா, மேத்யூ வர்கீஸ், அருள் சங்கர், ஜானகிராமன், சாப்ளின் பாலு, மனோஜ், டேனி தயாள், அலெக்ஸ், சோனி, ஆர்த்தி என ஏகப்பட்ட நடிகர்கள் நடிகைகள் கதைக்கு தேவைப்பட்டிருக்கிறார்கள்.
பெரும்பாலான சம்பவங்கள் மலை, காடு, இருள் பரப்புக்குள் நடக்க கேமராவை கழுகுப் பார்வையில் சுழற்றி காட்சிகளில் அழகையும் பயத்தையும் கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பி கே. கதை நகர்விலுள்ள பரபரப்பின் சதவிகிதத்தை அதிகரிக்கிறது சக்தி பாலாஜியின் பின்னணி இசை.
நடக்கும் கொலைகளுக்கு அமானுஷ்ய சக்தி காரணம், சைக்கோ கொலைகாரன் காரணம் என்றெல்லாம் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கும் இயக்குநர் பாலாஜி பின்னர் அதிகப்படியான திருப்பங்களால் படத்தின் நீளத்தை அதிகரித்திருக்கிறார். கடைசிவரை கொலையாளி யார் என சரியாக யூகிக்க முடியாதபடி சஸ்பென்ஸை மெயின்டைன் செய்திருப்பது திரில்லர் விரும்பிகளை அதிகம் கவரும்.
Rating 3 / 5

