ஜாலியாய் பார்த்து ரசிக்க ஒரு படம்.
லண்டனில் ஒரு பெரு நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞன் வெற்றியை, அவரது உயரதிகாரி மாயா படாதபாடு படுத்துகிறார். ஒரு கட்டத்தில் மாயா, வெற்றியின் மனைவியாக நடிக்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அதனால் ஏற்படும் பிரச்சனைகளை சென்டிமென்டாகவும், லண்டணில் பணிபுரியும்போது வெற்றிக்கும் மாயாவுக்குமான வேலை சம்பந்தமான மோதல்களை காமெடி கலாட்டாவாகவும் தொகுத்திருக்கிறார் இயக்குநர் மாதேஷ்.
வெற்றியாக விமல். ஜாலியாக நடித்து பழக்கப்பட்டவருக்கு ஏற்ற கேரக்டர். மாயாவின் அடக்குமுறைகளுக்கு ஆளாகும்போது காட்டும் கடுப்பு, அதே மாயா மீது காதல் உருவானபின் ஏற்படுகிற நெருக்கம், தன் உணர்வுகளை மதிக்காத அப்பாவிடம் வலிகளை எடுத்துச் சொல்லி குமுறும் தருணம் என எல்லாவற்றிலும் ஸ்கோர் செய்கிறார்.
மாயாவாக ஸ்ரேயா. தனக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் கறாராக நடந்து கொள்வதாகட்டும், விமல் மீது அதிகாரத்தைக் காட்டி வெறுப்பேற்றுவதாகட்டும் கெத்தான நடிப்பும் ஸ்டைலிஷ் லுக்குமாக அசத்துகிறார். விமலின் குடும்பத்துக்குள் போலி மருமகளாக நுழைந்தபின் மெல்ல மெல்ல சென்டிமென்ட் டிராக்கிற்கு தாவும்போது உடையிலும் நடிப்பிலும் வேறொரு பரிமாணம் தெரிகிறது.
விமலின் பணியிடத்து தோழனாக சத்யன் கலகலப்புக்கு துணையாக நிற்கிறார்.
விமலின் அப்பாவாக இளைய திலகம் பிரபு கிராமத்து பெரிய மனிதராக கம்பீரம் காட்டி, மருமகளிடம் உனக்கு சரக்கடிக்கணும் போல இருந்த என்கிட்ட தனியா கேளு என்பது போல் டயலாக் விடுகிற காட்சி ரகளை. மகனிடம் தன் தவறுக்கு வருந்துவது நெகிழ வைக்கிறது. மற்றவர்களின் நடிப்பு நிறைவு.
அம்ரிஷ் பாடல்களுக்கு தந்திருக்கும் இசை தெறிக்க விடுகிறது. லண்டனின் பிரமாண்டம், கிராமத்துச் சூழலின் பசுமை இரண்டையும் அதன் தன்மை மாறாமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஆர் பி குருதேவ்.
டாம் & ஜெரி டைப்பில் ஜாலியாக முதல் பாதி, உறவுகள், பாச நேசம் என இரண்டாம் பாதி என கத்தி ரத்த வன்முறையில்லாத இந்த படம் மலையாள மை பாஸின் தமிழ் ரீ மேக். சிரிக்கவும் ரசிக்கவும் வாய்ப்பிருக்கிறது. சிரித்து ரசித்தால் போதும் என்பவர்களுக்கு சண்டக்காரி நல்லதொரு என்டர்டெயினர்.
Rating 3.5 / 5

