விஷால் இயக்குநராகியிருக்கும் படம். ஏற்ற பாத்திரங்கள் அப்பா மகன் என இரண்டு. அப்பா பெரிய கேங்ஸ்டர். அப்படியிருப்பவருக்கு எதிரிகள் எல்லா திசையிலும் இருப்பார்கள். அதில் ஒரு தரப்பு அவர் உயிருக்கு குறி வைக்க, அதில் அவர் தப்பித்துக் கொள்ள, மகன் விஷாலின் மனைவியும் மகளும் கொல்லப்படுகிறார்கள். அப்புறமென்ன பழிவாங்கல்தான், அடிதடிதான், வெட்டுக் குத்துதான், ரத்தச் சகதிதான்… ஏராளமான கேங்ஸ்டர் படங்களில் பார்த்த அதே சம்பவங்கள்தான்…
விஷால் முன்பை விட கன்னம் ஒட்டிப் போனது போலிருக்கிறார். அப்பாவாக அஞ்சலியுடன் ரொமான்ஸில் ஈடுபடுகிறார், மகனாக துஷாராவுடன் அழகாக குடும்பம் நடத்துகிறார். கேங்ஸ்டராக இரண்டு ரோலிலும் அதிரடி அட்டகாசம் செய்வதில் குறையில்லை.
அஞ்சலி அனுபவ நடிப்பில் திமிரும் தெனாவட்டும் காட்டுகிறார். பாடல் காட்சியில் சேலையுடுத்தி போடும் குத்தாட்டம் அட்டகாசம்.
துஷாரா ஹோம்லி லுக்கில் அளவான நடிப்பைத் தந்திருக்கிறார். ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ், வம்சி கிருஷ்ணா, அஜய், அபு சலீம், அர்ஜய், சபூமோன் அப்துசாமத், தம்பி ராமையா, விஜய் ஜான்சி, பதம் குமார் என மற்றவர்களின் நடிப்பு கச்சிதம்.
கதையோட்டத்தின் பரபரப்புக்கு பின்னணி இசையால் எனர்ஜி ஏற்றியிருக்கும் ஜி வி பிரகாஷ், விஷாலும் அஞ்சலியும் ஆடும் பாடலுக்கான இசையில் உற்சாகம் தருகிறார். ஒளிப்பதிவு காட்சிகளுக்கு பிரமாண்டத்தைத் தருகிறது.
பரபரப்பாக இருப்பதற்காக பல காட்சிகளை உருவாக்கிய இயக்குநர் விஷால், அது படம் பார்ப்பவர்களைக் கவர்வதாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தாததால் மகுடத்துக்கு வெற்றி மகுடம் சூட்டும் வாய்ப்பை இழந்திருக்கிறார்.
Rating 2 / 5

