எத்தனையோ பேர் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வு எழுதுகிறார்கள். அதில் நன்றாக எழுதியவர்கள் தேர்ச்சியடையாமல் போகலாம்; திறமையும் தகுதியும் இல்லாதவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப் பணியில் இணையலாம். அப்படி நடக்கிறது என்றால், அதன் பின்னணியில் இப்படியான மோசடிகள் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்லி அதிர வைக்கிறது இந்த ‘எக்ஸாம்.’
போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதை உறுதிபடுத்திக் கொண்ட ஜான்சி என்ற இளம்பெண், பெண் டி எஸ் பி ஒருவரை கடத்துகிறார். அவரது பெயரைப் பயன்படுத்தி, அதே டி எஸ் பி பொறுப்பில் சேர்கிறார். அந்த பொறுப்பில் இருந்தால், போட்டித் தேர்வுகள் நடக்கும் மையத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும், மோசடிகளில் ஈடுபடுபவர்கள் யார் என்பதை கண்டறிய முடியும் என்பது அவரது திட்டம்.
அத்தனை ரிஸ்க்கான திட்டத்தை செயல்படுத்த அவர் மட்டும் களமிறங்கவில்லை. அவருக்கு பின் ஒரு டீம் இருக்கிறது. அவர்களால் திட்டத்தை சரியானபடி செயல்படுத்த முடிந்ததா? மோசடிகளில் ஈடுபடுபவர்களை தண்டிக்க முடிந்ததா என்பதே 7 எபிசோடுகள் கொண்ட இந்த சீரிஸின் திரைக்கதை…
போலி டி எஸ் பியாக துஷாரா விஜயன். அவரது உயரமும் உடற்கட்டும் டி எஸ் பி உடைக்கு சரியாகப் பொருந்தி கம்பீரம் தருகிறது. போட்டித் தேர்வு மோசடியால் பாதிக்கப்பட்டு சிறைக்கு சென்று அவஸ்தைகளை அனுபவிப்பதாகட்டும், குற்றவாளிகளை தண்டிக்க துடிப்போடு செயலாற்றுவதாகட்டும் நடிப்பு அசத்தல் ரகம்.
வில்லனாக நரேன் மணி பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் மிரட்டியிருக்கிறார். மோசடி மூலம் டி எஸ் பி பதவிக்கு வந்தவராக அதிதி பாலன், துஷாராவுக்கு பின்னணியில் பலமாக இருக்கிற அப்பாஸ், காவல்துறை அதிகாரியாக துரை சுதாகர் என பலர் கவனம் பெறுகிற அளவில் நடித்திருக்கிறார்கள்.
மலை, காடு என சம்பவங்கள் நடக்குமிடங்கள் பசுமையாக, பிரமாண்டமாக இருக்க அவற்றை அருண் அமரேந்திரனின் ஒளிப்பதிவில் பார்ப்பது மனதுக்கு புத்துணர்ச்சியாக இருக்கிறது. சாம் சி எஸ் தந்திருக்கும் பின்னணி இசை கதையின் வேகத்துக்கு சுறுசுறுப்பூட்டுகிறது.

