மக்களின் உரிமைக்காக போராடுகிற புரட்சிப் படையின் தலைவரான பெருமாள் வாத்தியாரை போலீஸார் கைது செய்ய சுற்றி வளைத்து, கதையில் பரபரப்புத் தீ பற்ற வைத்து முடிவுக்கு வந்தது முதல் பாகம். அதில் கதையின் நாயகனாக சூரி அதகளம் செய்திருக்க, இந்த பாகத்தை பெருமாள் வாத்தியாரான விஜய் சேதுபதியின் ‘பயோ பிக்’காக மாறியிருக்கிறார் வெற்றி மாறன்.
பெருமாள் மீது ரயில் கவிப்பு சதி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட, தான் குற்றவாளியானதன் பின்னணி குறித்து போலீஸாரிடம் அவர் விளக்குவதுபோல் அமைக்கப்பட்ட காட்சிகளின் மூலம், பண்ணையார்கள் தங்களிடம் வேலை பார்க்கும் ஏழை எளிய மக்களை கொடுமைப் படுத்துவது, முதலாளிகள் தொழிலாளிகளை அடிமையாக வைத்திருப்பது என கலங்கடிக்கும் சம்பவங்கள் அணிவகுக்கின்றன. அப்படி மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண குழுவாக களமிறங்கி போராடுகிற பெருமாளுக்கு ஏற்படுகிற கஷ்ட நஷ்டங்களை விரிவாக காண்பித்து போலீஸிடம் சிக்கிய பெருமாள் என்னவானார் என்பதை கிளைமாக்ஸாக்கி நிறைவடைகிறது.
படத்தின் துவக்கத்தில் சகதியில் புரளும் சண்டைக் காட்சியில் உடம்பை தாறுமாறாக வருத்திக் கொண்டு நடித்திருக்கும் விஜய் சேதுபதி, பின்னர் போலீஸாரிடம் தான் கடந்து வந்த பாதையை விவரிக்கும்போது வழக்கமான உடல்மொழியிலேயே வெளிப்பட்டிருக்கிறார். கம்யூனிச தத்துவ சித்தாந்தங்களை பாடம் நடத்துவதுபோல் சொல்லிக் கொண்டேயிருப்பது சற்றே சலிப்பு தட்டுகிறது.
சூரியின் பங்களிப்பு குறைவுதான் என்றாலும் உயரதிகாரிகளை இரண்டு முக்கியமான தருணங்களில் கடுமையாக எதிர்த்து கவனம் பெறுகிறார்.
விஜய் சேதுபதியின் காதல் மனைவியாக வருகிற மஞ்சு வாரியார் புரட்சிகரமான செயல்பாடுகளில் ஈடுபடுவது கெத்தாக இருக்கிறது.
போலீஸ் என்றாலே மனிதாபிமானம் தொலைத்த சுயநலவாதிகள், கேவலமானவர்கள் என எடுத்துச் சொல்லும் காட்சிகள் ஏராளம் தாராளம்… அவற்றுக்கு ராஜீவ் மேனன், கவுதம் மேனன், சேத்தன், இயக்குநர் தமிழ் என பலரும் இணைந்து உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
பண்ணையாரின் துன்புறுத்தல் அத்தியாயம் கொடூரத்தின் உச்சமாக கட்டமைக்கப்பட்டிருக்க அதில் கென் கருணாஸின் ஆளுமை நிரம்பிய கம்பீரமான நடிப்பு தனித்து தெரிகிறது.
போஸ் வெங்கட், கிஷோர் என மற்றவர்கள் தேர்ந்த நடிப்பைத் தந்திருக்க காடு மலை என கரடு முரடான பகுதிகளில் பரவிப் பாயும் கதை நிகழ்விடங்களை தன் கேமரா கோணங்களால் பிரமாண்டமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.
இசைஞானி இளையராஜா பாடல்களால் இதயத்தை வருடிவிட்டு, பின்னணி இசையில் அதிரடியை அதிகரித்திருக்கிறார்.
கடந்துபோன கசப்பான காலங்களில் ஆதிக்க சக்திகளின், அதிகார வர்க்கத்தின் அராஜகங்களை அடக்கி ஒடுக்கும் களப்பணியில் ஏழை எளியோர் எப்படியெல்லாம் செயலாற்றியிருக்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லி, செயலாற்றிய அமைப்புகளையும் தொட்டுக் காட்டி, அத்தனையும் கற்பனை என இயக்குநர் வாக்குமூலம் தருவதை ஜீரணிக்க முடியவில்லை. அதையெல்லாம் கடந்து, படத்தை படமாக பார்த்தால் உருவாக்கத்திலிருக்கும் உழைப்புக்காக படக்குழுவை பாராட்டாமல் விட முடியாது.
Rating 3 / 5

