தடைகளைத் தாண்டி சாதிப்பவளாக, சக பெண்களுக்கு தன்னம்பிக்கை தருபவளாக ‘வேம்பு.’
முறைப்படி சிலம்பம் கற்று தேர்ச்சி பெற்றிருக்கும் வேம்பு, அந்த கலையில் இன்னும் சிலபல உயரங்களை எட்டிப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறாள். அதற்கு முன்பே அவள் விரும்பிய முறை மாமனை திருமணம் செய்துகொள்ளும் சூழ்நிலை.
அவளுக்கு வாய்த்த கணவன், ‘நீ உன் விருப்பப்படி முன்னேறு; நான் தடையாக இருக்க மாட்டேன்’ என்று சொல்லி ஊக்கப்படுத்துகிறான்.
காலம் பொல்லாதது; அந்த கணவனை இன்னொரு நபரின் உதவியின்றி நடமாட முடியாது என்கிற அளவுக்கு முடக்கிப்போடுகிறது. அவனை 24 மணி நேரமும் உடனிருந்து கவனித்துக் கொள்ளும் பொறுப்பை வேம்புவின் தலையில் சுமத்துகிறது.
அவள் அந்த சுமையிலிருந்து மீண்டு வர முடிந்ததா, தன் எண்ணப்படி சிலம்பத்தில் உயரங்களை எட்ட முடிந்ததா என்பது கதையின் மீதி… இயக்கம் ஜஸ்டின் வி பிரபு
எளிமையான கிராமத்துப் பெண், அப்பாவுக்கு பாசமான மகள், முறை மாமனுக்கு பிரியமான காதலி, சிலம்பம் கற்றுக் கொள்கிற மாணவி, கற்றுக்கொண்டதை விரும்புகிறவர்களுக்கு கற்றுக்கொடுக்கிற ஆசான், சிகிச்சையிலிருக்கும் கணவனை அக்கறையாக கவனித்துக் கொள்கிற / கணவனின் தொழிலைக் கற்றுகொண்டு வருமானத்தை உருவாக்கிக் கொள்கிற மனைவி, சிலம்பம் கற்பிக்கும் ஆசிரியராக பொறுப்பேற்று ‘முயற்சியால் நினைத்ததை சாதிக்க முடியும்’ என்பதற்கு முன்னுதாரணமாகிறவர் என பலவிதங்களில் கவனிக்க வைக்கிறார் ஷீலா.
ஷீலாவின் காதல் கணவராக ஹரிகிருஷ்ணன். ‘தன் வேலையை மற்றவர்கள் மீது சுமத்தக்கூடாது’, ‘மனைவியின் விருப்பத்தையும் உணர்வையும் மதிக்க வேண்டும்’, ‘அவளது கனவு நிறைவேற தன்னால் இயன்றதை செய்ய வேண்டும்’ என்ற நல்ல எண்ணங்களோடு வலம் வருகிற,
பார்த்துக் கொண்டிருந்த வேலையை தொடர முடியாத நிலைக்கு ஆளானபின் மனம் உடைந்து வாழ்க்கையே முடிந்துவிட்டதாக நினைக்காமல் ‘எல்லாம் சரியாகும்’ என்ற நம்பிக்கையோடு நாட்களைக் கடத்துகிற தனித்துவமான பாத்திரத்திற்கு அலட்டலில்லாத இயல்பான நடிப்பால் உயிரூட்டியிருக்கிறார்.
நாயகிக்கு அப்பாவாக வருகிற ஜெயராவ் மகளின் விருப்பத்தை புரிந்து நடந்துகொள்கிற விதம் நெகிழ வைக்கிறது.
திரைப்படங்களில் வருகிற எந்த அரசியல்வாதியும் நல்லவர்களாக இருந்ததில்லை. அதற்கு மாறாக இந்த படத்தில் வருகிற எம் எல் ஏ தங்கமானவராக இருக்கிறார். அந்த வேடத்தில் கச்சிதமாக நடித்திருப்பவர் மாரிமுத்து.
மற்ற நடிகர் நடிகைகள், சிலம்பம் கற்ற சிறுவர் சிறுமிகளின் பங்களிப்பு நிறைவு.
மணிகண்டன் முரளி இசையில் ஜஸ்டின் பிரபு வரிகளில் அந்தோணிதாசன் பாடியிருக்கும் ‘உப்பு மாங்கா புளி’ பாடல் உற்சாகத்துக்கு கேரண்டி. ‘மஞ்சனத்தி ஏ மஞ்சனத்தி’ பாடலிலும காதலுணர்வு பொங்கி வழிகிறது. சிவசங்கர் எழுதியுள்ள ‘ஏலேலோ பொன்னம்மா’ பாரம்பரிய கிராமியப் பாடலொன்றைக் கேட்பது போன்ற குதூகல உணர்வைத் தருகிறது.
சிலம்ப தற்காப்புக் கலையில் அதிகளவில் ஆர்வமாக ஈடுபடுகிற மக்கள் வசிக்கும் கிருஷ்ணகிரி கதை நிகழ்விடமாகியிருக்க, அந்த மண்ணின் பசுமையை ஒளிப்பதிவாளர் ஏ குமரனின் கேமரா கண்கள் வழி பார்ப்பது மனதைக் குளிர்விக்கிறது.
படத்தின் உருவாக்கத்தில் குறையாக சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதையெல்லாம் தாண்டி ‘வேம்பு’ என்ற கதாபாத்திரத்தின் வழியாக ‘பெண்களுக்கு தற்காப்புக் கலை அவசியம்’ என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிற இயக்குநரின் சமூக அக்கறை பாராட்டுக்குரியது!
Rating 3 / 5

