கதைக்குள் கதை என திரைக்கதையில் வித்தியாசமான அணுகுமுறையைக் கடைப்பிடித்திருக்கும் சஸ்பென்ஸ் ஆக்சன் திரில்லர்.
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் அருண், உயரதிகாரியின் உத்தரவுபடி ரவுடிகளை என்கவுண்டரில் போட்டுத் தள்ளுகிறார். அந்த வரிசையில் ரவுடி ஆதிக்கு ஸ்கெட்ச் போடுகிறார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் தன் தோழியின் கணவர் என்பதும் அவர் ரவுடியிஸத்திலிருந்து விலகி, ஊர் மக்கள் சாமியாக மதிக்கிற அளவு நல்ல மனிதராகியிருப்பது தெரிகிறது. உயரதிகாரியின் உத்தரவுக்கு கட்டுப்படுவதாக இருந்தால் ஆதியை சுட்டுக்கொல்ல வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் யோசித்தால் அவரை அப்படியே விட்டு விலக வேண்டும்.
கடமையா, மனசாட்சியா? அருண் எந்த பக்கம் நிற்கிறார் என்பது கிளைமாக்ஸ்…
கதைப்படி, கதையின் நாயகன் கண்ணா ரவி பிரபல நடிகர். அவர் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் அருணாக நடிக்கிறார். நடிப்பதன் மூலம் அவர் அருணின் வாழ்க்கையின் கடைசி நாட்கள் எப்படியிருந்தது என்பதை தெரிந்து கொள்ள முயற்சிப்பதும், அதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகளும் கதையின் மீதி…
அருணாக கண்ணா ரவி. பிச்சைக்காரராக இருந்து ஒரு ரவுடியை சுட்டுக்கொல்லும் ஆரம்பக் காட்சியிலேயே கவனிக்க வைக்கும் கண்ணா ரவி, பரோட்டா மாஸ்டராக மாறி ரவுடி ஆதியின் குடும்ப நண்பராகி அவரது கதையை முடிக்க திட்டமிடும்போது தனது பரபரப்பை நமக்கு கடத்துகிறார்.
ஊர் மக்களால் கடவுளாக மதிக்கப்படுபவர், தன் குடும்பத்தில் கலந்து பழகுகிற நபர் தன்னை கொல்ல வந்தவர் என்பது தெரிந்து அவரை விலகிப் போகச் சொல்லும்போது தாதாவாக கம்பீரம் காட்டுபவர் என சஞ்சய் வெங்கட்டில் இருவேறு முகபாவம் கெத்தாக இருக்கிறது.
ஷ்ரவணிதா, வினுஷா, ரேகா நாயர், லாவண்யா என மற்றவர்கள் கதையின் தேவையை மிகச்சரியான நடிப்பால் நிரப்பியிருக்கிறார்கள்.
ஸ்ரீனிவாசன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு, விபின் பாஸ்கரின் பின்னணி இசை பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த தொடருக்கு வேகம் தந்திருக்க, ஒவ்வொரு எபிசோடின் முடிவிலும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டி திருப்பங்களுடன் இயக்கியிருக்கிறார் பவன்.
குறைகள் சில இருந்தாலும் அதைத்தாண்டி கிரைம் திரில்லர், சஸ்பென்ஸ் திரில்லர், பொலிடிகல் திரில்லர் என தேடித்தேடி பார்ப்பவர்களுக்கு கணிசமான திருப்தி கிடைக்கும்.
Rating 3.5 / 5

