எம் ஜி ஆரை சூப்பர் ஹீரோவாக பார்க்கும் வாய்ப்பு.
போலீஸ் அதிகாரி ராமேஸ்வரன் லஞ்சத்துக்கு ஆசைப்பட்டு, மக்களுக்கெதிராக செயல்படும் கார்ப்பரேட் முதலாளி ஒருவருக்கு விசுவாசியாகிறார். அந்த நேரத்தில் ராமேஸ்வரன் உடம்புக்குள் நுழைகிற எம் ஜி ஆரின் ஆன்மா, ராமேஸ்வரனை அந்த கார்ப்பரேட் முதலாளிக்கு எதிராக செயல்பட வைக்கிறது. அந்த செயல்பாடுகளில் சூப்பர் ஹீரோத்தனம் வெளிப்பட அதனால் ராமேஸ்வரனுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? எம் ஜி ஆர் அவருக்குள் வந்ததற்கான காரணம் என்ன? கார்ப்பரேட் முதலாளிக்கு என்ன தண்டனை கிடைக்கிறது?
இப்படியான கேள்விகளுக்கு பதில்களே படத்தின் மீதிக்கதை… இயக்கம் நலன் குமரசாமி
ராமேஸ்வரனாக வரும்போது ஜாலியான நடிப்பையும் எம் ஜி ஆராக மாறும்போது அவரது மேனரிஸங்களை ரசிக்கும்படியும் பிரதிபலித்துள்ள கார்த்தி, ஆக்சன் காட்சிகளில் சூப்பர் ஹீரோக்களுக்கேற்ற சுறுசுறுப்போடு வெளிப்பட்டிருக்கிறார்.
ஆவிகளின் மனதைப் படிக்கும்போது கொஞ்சமாகவும் பாடலுக்கு ஆடும்போது கொஞ்சம் அதிகமாகவும் கவனம் ஈர்க்கிறார் கிர்த்தி ஷெட்டி. உருட்டல் மிரட்டல்களை கார்ப்பரேட் வில்லன்களுக்கான பாடி லாங்வேஜுடன் செய்திருக்கிறார் சத்யராஜ்.
ஷில்பா மஞ்சுநாத், ராஜ்கிரண், நிழல்கள் ரவி, பி எல் தேனப்பன், கருணாகரன், ஜி எம் சுந்தர், நிழல்கள் ரவி, யார் கண்ணன் உள்ளிட்ட மற்றவர்களின் நடிப்பும் ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவும் கச்சிதம்.
‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ ரீமிக்ஸ் பாடல் சந்தோஷ் நாராயணனின் இசையில் உற்சாகம் தருகிறது. பின்னணி இசை சுமாரான காட்சிகளையும் பரபரப்பாக்கியிருக்கிறது.
கார்ப்பரேட் சதியை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் மஞ்சள் முகம் குழுவினரின் புத்திசாலித்தமான செயல்பாடுகள் படத்தின் விறுவிறுப்புக்கு உதவுகிறது. அதே விறுவிறுப்பை மற்ற காட்சிகளில் எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
Rating 2 / 5


