அந்த சிறுவனைப் பார்க்கும்போது இன்னமும் அவன் குழந்தைப் பருவத்தைத் தாண்டவில்லை என்ற உணர்வு ஏற்படுகிறது. அந்த வயதிலேயே ராணுவம் அவனை பிடித்து சிறையிலடைக்கிறது. தங்கள் தலைவரின் மகன் என்பதால் அவருக்கு தருகிற அதே மரியாதையை அந்த சிறுவனுக்கும் தருகிறார்கள் சிறையில் அடைபட்டிருப்பவர்கள்.
அந்த சிறுவனுக்கு எப்படியும் தன்னை கொன்று விடுவார்கள் என்பது தெரிகிறது. அதிகாரிகளின் விசாரணைகளை எதிர்கொள்ளும்போது அவன் கண்ணில் துளிகூட பயம் தெரியவில்லை. ‘உன் தந்தையைக் கொன்று விட்டோம்’ என்று அதிகாரிகள் சொல்லும்போது ‘அவர் இறக்கவில்லை; மனதில் வாழ்கிறார்’ என்று சொல்லும்போது பேச்சில் அத்தனை தெளிவு; அத்தனை கம்பீரம்.
குழந்தை போலிருக்கிற அந்த சிறுவனுக்கு எப்படி அத்தனை துணிச்சல்? எப்படி அத்தனை தெளிவு? காரணம் வளர்ப்பு அப்படி. வளர்த்தது, ஈழ மண்ணின் விடுதலைக்காக போராடிய தலைவர். மாவீரனாக மக்கள் மனதில் இடம்பிடித்து அமர்ந்திருப்பவர்.
ஆம், இது அதே கதைதான். அந்த ஈழ மண்ணில் நடந்த கொடூரங்களின் ஆவணம்தான்.
லட்சக்கணக்கான தமிழ் மக்கள் மனதில் போராட்டக் குணத்தை விதைத்த அந்த மாவீரரின் மகன் சிறையில் அடைக்கப்பட்ட காலகட்டத்திலிருந்து இந்த படத்தின் கதை தொடங்குகிறது
படத்தில் நடக்கும் சம்பவங்கள் நிஜத்தில் நடந்தவற்றின் பிரதிபலிப்புதான் என்றாலும், படத்தை வெளியிடுவதில் நெருக்கடிகள் உருவாகலாம் என்பதால், வழக்கம்போல் எதையும் வெளிப்படையாக குறிப்பிடாமல் கதை தீவு ஒன்றில் நடப்பதாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. நிஜ பெயர்கள் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
அத்தனை பெரிய மாவீரனின் மகன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிற குழந்தை நட்சத்திரம் அத்வைத், கருத்தாழமிக்க வசனங்களை பேசியிருக்கும் விதம், சிறையின் கஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டு மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம்; வரட்டும் என்ற நெஞ்சுறுதியை காட்டும் விதம், தன் மீது அன்பு காட்டுகிற அதிகாரியின் மகனிடம் பாசத்தை பொழியும் விதம், ‘யுத்தமில்லா உலகம் உருவாகவேண்டும்’ என்ற எண்ணத்தை மனதில் வைத்து அப்படியொரு உலகம் உருவாகும் என்ற நம்பிக்கையை மற்றவர் மனதில் ஏற்றிவிடும் விதம்… அத்தனையிலும் குழந்தைத்தனமும் கம்பீரமும் கலந்து உறவாடியிருக்கிறது.
மாவீரனின் மகனை சிறையில் பாதுகாக்கும் பொறுப்பைச் சுமக்கும் அதிகாரியாக வருகிறவர், எதிரியின் வாரிசும் எதிரிதான் என்ற கொள்கைப்படி கடுமை காட்டுவது, போகப்போக மனம் மாறி பிரியத்தை கனிவான உடல்மொழியில் பரிமாறுவதுமாய் மனதை நிறைக்கிறார். இந்த பச்சப்புள்ளைய கொல்றதுக்கு அஞ்சு குண்டு அவசியமா என்று ராணுவ உயரதிகாரிகளிடம் மனம் நொறுங்கிய நிலையில் கேட்பது நெகிழ வைக்கிறது. அப்படி அன்பால் நெகிழவைப்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிற அன்புமணி!
தங்கள் வசம் கைதியாக இருக்கிற பெண்களை அதிகாரிகள் தங்கள் காமப்பசிக்கு கூட்டாக பயன்படுத்துகிற கொடுமையான காட்சிகளும் படத்தில் உண்டு. அதில் நடித்திருப்பவர்கள் அந்த கொடூரங்களின் தன்மையை சரியானபடி நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்கள்.
சிறையில் எப்படியும் கேடுகெட்ட அதிகாரிகள் தன்னை சீரழிக்காமல் விடமாட்டார்கள் என்பதை உணர்ந்து, தன்னுடன் இருக்கும் இளைஞனிடம் தன்னைக் கொல்லச் சொல்லி, உயிர் விடுகிறாள் ஒரு பெண். விவரம் தெரிந்து தொடங்கும் விசாரணையில் அந்த இளைஞன் அதிகாரிகளால் சித்தரவதை செய்யப்படுவது அதிர்ச்சியடையச் செய்கிறது என்றால், அந்த இளைஞன் தான் கொன்றது தன் சொந்த தங்கையை என சொல்லும்போது கண்கள் கலங்குவதை தவிர்க்க முடியாமல் போகிறது.
சிறையில் பலராலும் பலாத்காரம் செய்யப்பட்டதன் விளைவாக ஒரு பெண் கைதிக்கு குழந்தை பிறக்க, அந்த குழந்தைக்கு யார் அப்பா என்பதுகூட தெரியாமல் வளர்வது, பாலுக்கு வழியில்லாமல் கதறுவதெல்லாம் மக்கள் அனுபவித்த, அனுபவிக்கும் கொடுமைகளின் உதாரணங்களில் ஒன்று. இப்படி அதிரவைக்கும் காட்சிகளின் தொகுப்பான இந்த படத்திற்கு பின்னணி இசையால் பதற்றத்தை அதிகரித்திருக்கிறார் ஆனந்த் ஜார்ஜ்.
ரவி மேனனின் இசையில் பாடல்கள் கதையோட்டத்தில் கலந்து பயணிக்கின்றன.
சிறைச்சாலை உருவாக்கம் உள்ளிட்டவை படத்தின் பட்ஜெட் மிக எளிமையானது என்பதை தெரிவிக்கிறது. இருந்தாலும் கதையின் போக்கில் அது குறையாக இல்லை என்பதை சொல்லியாக வேண்டும்.
உலகளவில் தாக்கத்தை உருவாக்கியவற்றில் ஒன்று அந்த மாவீரனின் மகனது உயிரை துப்பாக்கிக் குண்டுகளால் பறித்த நிகழ்வு. அந்த உயிர் உறையச் செய்யும் வரலாற்றை சில மாற்றங்களுடன் சித்தரித்திருக்கிற இந்த வீரத்தின் மகனுக்கு நாம் என்ன செய்யலாம்? யுத்தமில்லா உலகம் உருவாக வேண்டுமென்று இறையருளையோ இயற்கையையோ பிரார்த்திக்கலாம்!

