அமானுஷ்ய ஆர்ப்பாட்டங்களின் தொகுப்பாக ‘தி ராஜாசாப்.’
வாழும்போது பேராசையால் மனிதர்களால் செய்யமுடியாத செயல்களையெல்லாம் செய்து, மலையளவுக்கு தங்கம், வைரம், பணம் என கொள்ளையடித்துச் சேர்த்து வைத்த ஒருவர்,
இறந்தபின்னும் பேராசை குறையாமல், அரக்கன் போல் மாறி கொள்ளையடித்தவற்றை ஒரு இடத்தில் பதுக்கி வைத்து பாதுகாத்து வருகிறார்.
பல வருடங்கள் முன் காணாமல்போன தன் தாத்தாவை தேடிக் கொண்டிருக்கும் கதையின் நாயகன் ஒரு கட்டத்தில் அந்த இடத்துக்கு போய்ச் சேர்கிறார். அங்கு பதுக்கப்பட்டிருக்கும் பொன் பொருள் அனைத்தும் தனக்கு உரிமையானது என்கிறார்.
அவற்றை எடுத்துக்கொண்டு வெளியேறுவது அவரது நோக்கமாக இருக்கிறது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்றாகி, அங்கிருந்து உயிருடன் வெளியேறவும் முடியாது என்கிற அளவுக்கு ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்.
அவர் அந்த இடத்துக்கு போனதற்கு காரணம் என்ன, அங்கு அவருக்கு என்ன மாதிரியான ஆபத்து சூழ்ந்தது, அங்கிருந்து தப்பிக்க முடிந்ததா, அங்குள்ள பணம், தங்கமெல்லாம் தனக்கு சொந்தம் என்று அவர் உரிமை கொண்டாடுவதன் பின்னணி என்ன என்பதெல்லாம்தான் கதையோட்டம்…
பிரபாஸுக்கு அடிதடியில் அதிரடி கிளப்ப, மூன்று ஹீரோயின்களுடன் ஆடிப்பாட, பாட்டியுடனான செனடிமெண்ட்’டில் உருக வைக்க, பேயாக அரக்கனாக உருமாறியிருக்கும் தன் தாத்தாவிடம் மாட்டிக்கொண்டு தவிக்க என ஏகப்பட்ட வேலைகள். எல்லாவற்றையும் குஷியாக செய்திருக்கிறார்.
சூழ்ச்சியால் மாபெரும் சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றுவது, மாய மந்திரம் என வேறொரு உலகத்தில் ஆவியாகத் திரிவது என சஞ்சய் தத் தனக்கு கொடுக்கப்பட்ட வில்லன் கேரக்டருக்கு தோற்றத்தாலும் செயல்களாலும் மிரட்டலான பங்களிப்பு தந்திருக்கிறார்.
மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்து குமார் என மூன்று ஹீரோயின்களில் நிதி அகர்வாலுக்கு நடிப்போடு கவர்ச்சி காட்டவும் வாய்ப்பு. முடிந்தவரை காட்டியிருக்கிறார். மற்ற இருவரும், கதாநாயகனின் பாட்டியாக ஜரினா வஹாப், ஜரினா வஹாப்பின் இளவயது கதாபாத்திரத்தில் அம்மு அபிராமி என மற்றவர்கள் கதைக்கு தேவையானதை செய்திருக்கிறார்கள்.
கதாநாயகனும் அவரது பாட்டியும் அவரது மூன்று ஜோடிகளும் காமெடி பங்களிப்பிலும் ஈடுபடும்படியான திரைக்கதையில் விடிவி கணேஷுக்கும் இடமிருக்கிறது.
பேய் பங்களாவின் அசத்தலான உருவாக்கம் கலை இயக்குநரின் உழைப்பைக் காட்டுகிறது. தமன் இசையில் பாடல்கள் ஆட்டம்போட வைக்கின்றன. பின்னணி இசை ஹாரர் சப்ஜெக்ட்க்கு பொருத்தம். ஒளிப்பதிவு, வி எஃப் எக்ஸ், சிஜி என எல்லாமுமாக சேர்ந்து படத்துக்கு பிரமாண்டமான கட்டமைப்பை உருவாக்கியுள்ளன.
படத்தின் பட்ஜெட், நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என எல்லாமும் எல்லாரும் பலமாக இருக்க கதையும் திரைக்கதையும் பலவீனமாக அமைந்து விட்டதால் படக்குழுவுக்கு ‘பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்’ என சொல்ல வேண்டியிருக்கிறது.
Rating 2.5 / 5

