கெட்டவர்களிடமிருந்து பணத்தை சுருட்டி ஏழை எளியவர்களுக்கு உதவுகிற கதாநாயகனும் அவனைச் சூழும் ஆபத்துகளும் என சுற்றிச் சுழலும் பழக்கப்பட்ட கதையில் ‘சக்தித் திருமகன்.’
அவர் இளைஞர், கெட்டிக்கார மூளைக்குச் சொந்தக்காரர், பெயர் கிட்டு. அவருக்கு எல்லா குறுக்கு வழிகளும் தெரியும். அவரிடம் பெரும் பணக்காரர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் அதை செய்து கொடு, இதை செய்து கொடு என்று அணுகுகிறார்கள். டிரான்ஸ்பரிலிருந்து அமைச்சரை பதவியிலிருந்து இறக்குவது பலவற்றையும் செய்கிறார். சில வேலைகளை முடிப்பதற்காக அதற்கான ஆட்களை வைத்து கொலைகளை செய்யவும் தயங்குவதில்லை. அப்படியான வேலைகளுக்கு அவர் கமிஷனாக, லஞ்சமாக பெற்ற பணம் பல்லாயிரம் கோடி.
அந்த விவரத்தைத் தெரிந்துகொள்ளும் காவல்துறை கிட்டு யார்? அவர் பலரிடமும் இருந்து பெற்ற பல கோடி ரூபாயை என்ன செய்தார்? எங்கே பதுக்கியிருக்கிறார்? என்பதையும் தலைமறைவான அவரையும் தேடும் பணியில் இறங்குகிறது.
தேடியதில் என்னவெல்லாம் கிடைக்கிறது என்பது திரைக்கதை…
கிட்டுவாக வருகிற விஜய் ஆண்டனிக்கு தன்னை அணுகும் அயோக்கியர்களிடமிருந்தும், அதிகார பலமிக்கவர்களிடமிருந்தும் பணம் பெற்றுக்கொண்டு அவர்கள் கேட்பதை செய்து கொடுப்பதற்காக மூளையை ஸ்மார்ட்டாக பயன்படுத்துகிற வேலை. மூளை மட்டுமல்ல நடை உடையிலும் அந்த ஸ்மார்ட்னஸ் தெரிகிறபடி வருகிற அவர் ஒவ்வொரு செயலிலும் புத்திசாலித்தனமாக காய் நகர்த்துவது விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்க அதற்கேற்ற உடல்மொழியாலும் கருத்தாழமிக்க வசனங்களை அனல் பறக்கப் பேசியும் கவனிக்க வைக்கிறார்.
சமூகத்திலிருக்கும் களைகளை பிடுங்கி விச களமிறங்கியவனுக்கு வாழ்க்கைப் பட்டவள் என்னென்ன வலிகளை அனுபவிப்பாளோ அதையெல்லாம் அதற்கேற்ற உணர்வோடு அனுபவித்திருக்கிறார் திருப்தி ரவீந்திரா.
மல்டி மில்லியனர், அரசியல் ஆலோசகர், மனிதாபிமானமற்ற செயல்களை குதூகலத்துடன் செய்பவர், இந்திய ஜனாதிபதி வேட்பாளர் என ஆளுமை நிரம்பிய நபராக வருகிற கண்ணனின் (அந்தக்கால காதல் ஓவியம் பட ஹீரோ) வில்லத்தனம் மிரட்டல்.
விஜய் ஆண்டனியின் தளபதியாக செல் முருகன், விஜய் ஆண்டனியை சமூக அக்கறைப் போராளியாக உருவாக்கும் வாகை சந்திரசேகர், புலனாய்வுத்துறை அதிகாரியாக கிரண் குமார், அதிகார பலமிக்க பெண்ணாக ஷோபா விஷ்வநாத் என மற்ற கேரக்டர்களில் வருகிற பலரது நடிப்பும் பலம்.
கிட்டத்தட்ட அத்தனை காட்சிகளும் பரபரப்பாக அமைந்திருக்க, அந்த பரபரப்பின் சதவிகிதத்தைக் கூட்டியிருக்கிறது விஜய் ஆண்டனியின் பின்னணி இசை.
கிட்டத்தட்ட அத்தனை காட்சிகளும் பிரமாண்டமாக அமைந்திருக்க, அதை பல மடங்காக்கியிருக்கிறது ஷெல்லி ஆர். காலிஸ்ட்ஸின் ஒளிப்பதிவு.
கதை பழக்கப்பட்டதாக இருந்தாலும் திரைக்கதையில் சுவாரஸ்யங்களை கொட்டிக்குவித்து திருமகனுக்கு சக்தியூட்டியிருக்கிறார் இயக்குநர் அருண் பிரபு.

