சாமானிய மனிதர்கள் காவல்துறையினர் முன்னும் நீதிமன்றங்கள் முன்னும் குற்றவாளிகளாக நிற்கும்போதும், குற்ற விசாரணைக்கு ஆளாகும்போதும் எந்தளவுக்கு மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டும் படைப்புகளில் ஒன்றாக ‘சிறை.’
கான்ஸ்டபிள் கதிரவன், வேலூரிலிருந்து சிவகங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அப்துல் என்ற விசாரணைக் கைதியை அரசுப் பேருந்தில் அழைத்துச் செல்லும்போதே கதையில் பரபரப்பு தொற்றுகிறது. காரணம், இதே கதிரவன் கடந்தமுறை விசாரணைக் கைதி ஒருவரை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும்போது அதை தடுக்க நடந்த முயற்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர். அப்படியான அதிகாரியின் பாதுகாப்பிலிருந்து விசாரணைக் கைதி அப்துல் போலீஸாரின் துப்பாக்கியுடன் தப்பிவிடுகிறான்.
இனி நடக்கப்போவதெல்லாம் விபரீதமாகவே இருக்கும் என்ற மூடுக்கு வந்துவிடுகிறோம். நாம் எதிர்பார்த்தபடியே விபரீதங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும் கொண்டிருக்கிறது திரைக்கதை.
கான்ஸ்டபிள் கதிரவனாக விக்ரம் பிரபு. போலீஸ் யூனிபார்முக்கு கம்பீரம் தருகிற உடற்கட்டுடன் இருக்கும் அவர், அப்துலுக்கு ஒரு காதல், அந்த காதலுக்கான எதிர்ப்பால் ஒரு கொலை செய்திருக்கிறான்; அதற்காகவே அவன் ஐந்து வருடங்களாகவே விசாரணைக் கைதியாக இருக்கிறான் என்பதையெல்லாம் அறிந்துகொள்ளும் வரை போலீஸுக்கான கெத்து காட்டுகிறார். அதன்பின் மனிதாபிமான மனிதனாக, தனது அதிகாரத்துக்கு உட்பட்டு ஒரு கைதிக்கு எப்படியெல்லாம் உதவ முடியுமோ அப்படியெல்லாம் உதவும்போது கேரக்டரின் மதிப்பை உயர்த்துகிறார். அவரது கரியரில் டாணாக்காரனுக்கு பிறகு கிட்டத்தட்ட அதன் இரண்டாம் பாகம் போல் உருவாகியிருக்கிற இந்த படத்தின் கேரக்டரும் பெருமை சேர்க்கிறது.
அப்துலாக (இந்த படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாரின் மகன்) அக்சய்குமார். நடிப்புக்கு புதுமுகம் என்றாலும் அது தெரியாதபடி காதல், இயலாமை, விரக்தி, பயம், பதற்றம், நேர்மை, கெஞ்சல், கதறல் என எல்லாவித உணர்வுகளையும் கதையின் தேவைக்கேற்ப நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.
அக்சய்க்கு ஜோடியாக வருகிற அனிஷ்மா அனில்குமார் காதலிக்கும் தருணங்களில் உற்சாகம், காதலனை சிறையில் சந்திக்கும் வாய்ப்புகளில் தவிப்பு, கோர்ட்டில் காதலனை பார்த்துப் பேசும்போது பரவசம் என அவருக்கான காட்சிகளில் கவனம் பெறுகிறார்.
மூணாறு ரமேஷ் ஒரேயொரு காட்சியில் வருகிறார். காவல்துறை உயரதிகாரிகள் கீழ்நிலை அதிகாரிகளிடம் எந்தளவுக்கு திமிரும் தெனாவட்டுமாக நடந்துகொள்வார்கள் என்பதற்கு சாட்சியாக நடந்துகொள்கிறார். அவர் மூலமாக சிறுபான்மையின குற்றவாளிகளை காவல்துறை அதிகாரிகள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.
கதையில் இடம்பெறுகிற மற்ற எல்லா கேரக்டர்களுக்கும் கதையில் முக்கியத்துவமிருக்கிறது. தகுதியான நடிகர் நடிகைகள் அந்த கேரக்டர்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
பின்னணி இசையின் நேர்த்தியும் ஒளிப்பதிவின் கச்சிதமான பங்களிப்பும் காட்சிகளை தரமாக்கி படத்தை தாங்கி நிற்கின்றன.
‘டாணாக்காரன்’ என்ற தமிழ் சினிமாவின் தரமான படத்தின் இயக்குநரான தமிழ், இந்த படத்திற்கான கதையைக் கொடுத்து, திரைக்கதை வசனங்களில் தன் பங்களிப்பாக வழங்க, அவற்றிலுள்ள ஆழத்தை துல்லியமாக பிரதிபலிக்கும்படி படத்தை இயக்கி ‘சிறை _ சிறப்பு’ என்ற பாராட்டுக்களைக் குவிக்கிறார் சுரேஷ் ராஜகுமாரி.
Rating 3.5 / 5

