கிராமம், எளிய மனிதர்கள், அவர்களின் வாழ்வியல், சண்டை சச்சரவு, போட்டி பொறாமை, காதல் மோதல், பாசம் பரிவு, பகை வன்மம், தெய்வம் திருவிழா என எல்லாவற்றையும் கலந்துகட்டி மண்மணத்துடன் மலர்ந்திருக்கும் படைப்பு.
கிராமத்து எளிய மனிதர் நல்லபாடன். அவரது மகன் ஒரு ஆபத்தில் சிக்கிக்கொள்ள, அவன் உயிர் பிழைக்க வேண்டிக்கொண்டு, தான் வளர்க்கும் ஆட்டுக் குட்டியை ஒண்டிமுனிக்கு நேர்ந்து விடுகிறார். மகன் உயிர் பிழைத்து விடுகிறான்.
இனி ஒண்டிமுனி கோவிலில் கிடாவை வெட்டி படையலிடவேண்டும். அதற்கு ஊரில் இரண்டு பெரிய மனிதர்கள் சம்மதம் தர வேண்டும். அந்த மனிதர்கள் பகையாளிகளாக இருப்பதால் சம்மதம் கிடைக்கவில்லை. ஆட்டுக்குட்டி பெரிதாய் வளர்ந்து ஆட்டுகிடாவாக கெத்தாக திரிகிறது. மகனும் வளர்ந்து வாலிபனாகி விடுகிறான்.
நல்லபாடன் ஓண்டிமுனிக்கான வேண்டுதலை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என உறுதியெடுத்துக் கொண்டு, ஊர்ப் பெரிய மனிதர்களின் சம்மதத்திற்காக படாதபாடு படுகிறார். அவர் படும் பாட்டுக்கு பலன் கிடைத்ததா, இல்லையா என்பது திரைக்கதை… இயக்கம் சுகவனம்
சில படங்களில் சிலருடைய நடிப்பைப் பார்த்து கேரக்டராகவே மாறியிருக்கிறார்; கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்றெல்லாம் குறிப்பிட்டுப் பாராட்டுவோம். அப்படியொரு பாராட்டுக்கு தகுதியான நடிப்பைத் தந்திருக்கிறார் இந்த கதையின் நாயகன் நல்லபாடனாக நடித்திருக்கும் பரோட்டா முருகேசன். உழைப்புக்கு மரியாதையும் தகுந்த ஊதியமும் தராத பண்ணையார்களுக்காக அடிமை போல் உழைப்பதாகட்டும், கிடா வெட்டுக்கு அவர்களிடம் சம்மதம் பெற கோரிக்கை வைத்து வைத்து அவர்கள் ஏற்காதபோது மனம் உடைவதாகட்டும், அடிபட்டு மிதிபட்டு வலி சுமப்பதாகட்டும் காட்சிக்கு காட்சி பரிதாபத்தைச் சம்பாதிக்கிறார். சில தருணங்களில் அவருக்கு மெல்லிய உற்சாகம் கிடைக்கும்போது அந்த உற்சாகம் நீடிக்க வேண்டும் என நாம் ஒண்டிமுனியை வேண்டிக்கொள்ளும் அளவுக்கு எளிமையான நடிப்பால் தாக்கத்தை உருவாக்குகிறார்.
தன் வீட்டிலிருந்து சேவலை திருடுகிற பொறுப்பற்ற தனத்திலிருந்து, தன் மக்கள் பண்ணையாரிடம் ஏமாறுவதை தடுக்கும் பொறுப்பானவராக மாறுவதை கச்சிதமாக தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார் நல்லபாடனின் மகனாக வருகிற விஜயன் தியா.
அவரை காதலிக்கும் உயர்சாதிப் பெண்ணாக வித்யா சக்திவேல் அழகான சிரிப்பாலும், ஒரு காதலியாக என்னென்ன உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டுமோ அதை அளவாக வெளிப்படுத்தியும் கவர்கிறார். ஒரு தருணத்தில் தன்னால் கலவரச்சூழல் உருவாகிவிடக் கூடாது என முடிவெடுப்பது படத்தின் அர்த்தமுள்ள காட்சிகளில் ஒன்று.
ஏற்கனவே சில படங்களில் தலைகாட்டி நற்பெயரைச் சம்பாதித்திருக்கும் சித்ரா நாகராஜன் மகளாக பாராட்டும்படியான நடிப்பைத் தந்திருக்கிறார். பிரதான கேரக்டரான அந்த ஓங்கி உயர்ந்து வளர்ந்த ஆடும் கவனம் பெறுகிறது.
நடிகர் நடிகைகளை கதைக்களத்துக்கேற்ற மனிதர்களாக தேர்வு செய்திருப்பதற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம்.
ஜெ டி விமலின் ஒளிப்பதிவு கதை நிகழும் மண்ணுக்கு நம்மை கூட்டிச் செல்வது போலிருக்கிறது. நடராஜன் சங்கரனின் பின்னணி இசை கதைக்கேற்றபடி பயணிக்கிறது.
சாமிக்கு நேர்ந்துவிட்ட ஆட்டை அந்த சாமிக்கு படையலிட்டு தன்னைச் சார்ந்த மக்களுக்கு விருந்து வைக்க நினைக்கும் ஒரு சாமானியன், அதை செய்யமுடியாமல் படுகிற அவஸ்தைகள், சந்திக்கிற கொடுமைகளை அதன் தன்மையோடு காட்சிப்படுத்துவதுதான் படத்தின் நோக்கம். அதில் இன்றைக்கும் இருக்கிற காதலுக்கெதிரான சாதிவெறி, பண்ணையார்கள் உடலுழைப்புத் தொழிலாளிகளை அடிமையாக நடத்தும் கொடுமை, விவசாய நிலங்களை அபகரிக்கும் அதிகார ஆளுமைகளின் சூழ்ச்சி என பலவற்றையும் தொட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குநர் சுகவனம்.
படம் பார்த்து முடிக்கும்போது ‘பலியிட வேண்டிய எத்தனையோ படுபாவி மனிதர்கள் நம்மிடையே நடமாடிக் கொண்டிருக்கும்போது, நாம் இன்னும் சாமிக்காக ஆடு கோழிகளை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோமே’ என்பதுபோல் ஒருவித உணர்வு நமக்குள் உருவாகும். அந்த நொடியில் கைத்தட்டாமல் சீட்டிலிருந்து எழுந்திருக்க முடியாது. அதுவே படத்தின் வெற்றி!
Rating 4 / 5


