இந்த கதையின் ஹீரோ இளைஞன் கரசாமி. அவனது அப்பா இறந்து போகிறார். அவரை தங்களது சொந்த நிலத்தில், தங்கள் முன்னோர்களை அடக்கம் செய்த நிலத்தில் அடக்கம் செய்ய வேண்டும். அந்த நிலம் வங்கியில் அடகு வைக்கப்பட்டிருப்பதால் அதற்கு வாய்ப்பில்லை என்கிற நிலைமை. நிலத்தை மீட்க வேறெந்த வழியும் இல்லாமல் தவிக்கும் கரசாமி சம்பந்தப்பட்ட வங்கியில் புகுந்து கொள்ளையடிக்க திட்டமிடுகிறான்.
கரசாமிக்கு வங்கியை கொள்ளையடிப்பது என்பது புதிய விஷயமாக இருக்கலாம். ஆனால், அவனுக்கு திருட்டு புதிய விஷயமில்லை. காரணம் பூட்டை உடைத்து, ஓடுகளைப் பிரித்து வீடுகளுக்குள் நுழைந்து திருடிப் பிழைப்பதை வழக்கமாக கொண்டவன் அவன். திருடுவதை விட்டொழித்து திருந்தி வாழ முடிவெடுத்தபோது மீண்டும் திருட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறான்.
அவன் வங்கியை கொள்ளையடிக்க தீட்டும் திட்டம் எப்படிப்பட்டது, நிலத்தை மீட்க முடிந்ததா, அப்பாவை அந்த நிலத்தில் அடக்கம் செய்ய முடிந்ததா என்பதெல்லாம் மீதிக்கதை…
பிழைப்புக்காக திருடுவதில் காட்டுகிற புத்திசாலித்தனம், வங்கிக் கொள்ளையில் ஈடுபடும்போது காட்டுகிற அதிரடி அட்டகாசம் என கரசாமியாக வருகிற தனுஷின் நடிப்பு எப்போதும்போல் தரம். அவரும் அவரது அப்பாவும் பேசிக்கொள்ளும் காட்சிகளில் அத்தனை உயிரோட்டம். ஆக்சனிலும் அனல் பறக்கவிடுகிறார்.
தனுஷுன் அப்பாவாக கே எஸ் ரவிகுமார். தூக்கலான பற்கள் தோற்றத்தை மாறுபடுத்திக் காட்ட, தளர்ந்த உடலும் சோர்ந்த மனதுமாய் நடமாடும் அவரிடமிருந்து இதுவரை காணாத நடிப்பு கிடைத்திருக்கிறது.
காவல்துறை உயரதிகாரியாக சுராஜ் வெஞ்சாரமூடு, லட்ச லட்சமாக களவாடும் கரசாமியை கையும் களவுமாக பிடிப்பதை லட்சியமாக கொண்டு சுற்றும்போது கம்பீரமும் காட்டுகிறார்; பப்ளிசிடி பிரியராக உடல்மொழியால் சற்றே கலகலப்புட்டவும் செய்கிறார்.
சில காட்சிகளில் மட்டுமே வருகிற மமிதா பைஜு, கணவன் கரசாமியின் தவறான நடவடிக்கைகளைக் கண்டு கொதிக்கும்போது முதுகெலும்பு புடைக்க உணர்ச்சியை சரியாக விகிதத்தில் வெளிப்படுத்தி கடந்து போகிறார்.
பேங்க் மேனேஜராக வருகிற ஜெயராம் தானும் ஒரு கொள்ளையனாக மாறி கரசாமிக்கு குடைச்சல் கொடுக்கும் வில்லத்தனம் வீரியமாக இருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்லும்படியான கதாபாத்திரத்தில் கவனம் பெறுகிறார் கருணாஸ்.
பேங்கில் கடன் வாங்கி திருப்பிக் கட்ட முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பவர்களில் ஒருவராக வருகிற முதியவர் எம் எஸ் பாஸ்கர். அவரை ஆடியன்ஸ் அடையாளம் காண்பது கடினம். அப்படியொரு தோற்ற மாற்றம். ஸ்ரீஜா ரவி, பிரித்வி என மற்றவர்களின் பங்களிப்பும் நிறைவு.
ராமநாதபுரத்தின் சுற்று வட்டார வறட்சியை தேனி ஈஸ்வரின் நேர்த்தியான ஒளிப்பதிவில் பார்க்கும்போது படம் பிரமாண்டமாக தெரிகிறது. ஜி வி பிரகாஷின் இசையில் பாடல்கள் அத்தனையிலும் உயிரோட்டம் ததும்புகிறது. தனுஷ் குரலில் ‘கண்ணம்மா என் கண்ணம்மா’ பாடல் மனதை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது. பின்னணி இசையால் காட்சிகளின் விறுவிறுப்பு கூடுகிறது.
கரசாமி சம்பவம் செய்து கொண்டிருக்கும்போது, அந்த ஏரியாவில் தேவர் மகன் படத்தின் படப்பிடிப்பு நடப்பதாக வருகிற காட்சி, கரசாமி பேங்கை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும்போது காவல்துறை அதிகாரி ஆடுகளம் நரேன் வந்துபோகும் காட்சி உள்ளிட்டவை சுவாரஸ்யம்.
வங்கிகள் தந்த விவசாயக் கடன்கள் விவசாயிகளை எந்தளவுக்கு சீரழித்தது என்கிற 1990 காலகட்ட உண்மைச் சம்பவ பின்னணியில்,
திருந்தி வாழ நினைக்கும் திருடன் ஒருவனை காலம் கொள்ளைக்காரனாக மாற்ற, அவனால் ஊருக்கே நல்லது நடக்கிறது என்பதாக ஹீரோயிஸக் கதையொன்றை யோசித்த இயக்குநர் ‘போர் தொழில்’ விக்னேஷ் ராஜா நடிப்பு அசுரனை களமாட வைத்து திரையில் மாஸான ஆக்சன் விருந்து படைத்திருக்கிறார்.
Rating 4 / 5 

