ஹாரர் திரில்லர் சப்ஜெக்டில் மற்றுமொரு படம். ஓமன்’ படத்தின் தமிழ் ரீ மேக்காக ‘ஜென்ம நட்சத்திரம்.’
பாழடைந்த அந்த கட்டடத்துக்குள் 57 கோடி ரூபாய் பதுக்கப்பட்டிருக்கிறது. அதை சொந்தமாக்கிக் கொள்ள நினைத்து, அதிலிருந்து ஒரு குழந்தையில் ஆபரேசனுக்கு 40 லட்ச ரூபாயைக் கொடுத்து உதவ நினைத்து கதையின் நாயகன் தமனும் அவருடைய காதலியும் நண்பர்களுமாக இணைந்து அந்த கட்டடத்துக்குள் நுழைகிறார்கள். நுழைந்ததிலிருந்து ஒவ்வொருவராக ஏதோவொரு சக்தியால் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள்.
அவர்கள் கொலையாவதன் காரணம் என்ன? உயிர் பிழைத்தது யார்? கோடிக்கணக்காக ரூபாயை அங்கே பதுக்கியது யார்? அந்த பணம் யாருக்கு சொந்தமானது? என்கிற பல கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக கதை நகர்கிறது…
தமன், அவருக்கு ஜோடியாக மால்வி மல்ஹோத்ரா, அவர்களுடன் இணைந்திருக்கிற நண்பர்கள் என அத்தனைப் பேரும் பணத்தை தேடிப்போன இடத்தில் தாக்கப்படும்போது, உடனிருக்கிறவர்களின் உயிர் பறிக்கப்படும்போது கண்களில் பயத்தையும் உடலில் பதற்றத்தையும் சரியாக கொண்டு வந்திருக்கிறார்கள்.
மகள் ஆபரேசனுக்கு தன் முதலாளியிடம் பணம் கேட்டு கிடைக்காதபோது கலங்கி நிற்கும் காளி வெங்கட்டின் நடிப்பு தரம்.
அரசியல்வாதியாக வருகிற வேல ராமமூர்த்தி கம்பீரமாக களமாடி நகர்கிறார். முனீஷ்காந்த் கொஞ்ச நேரம் வருகிறார்; கொஞ்சமாய் சிரிக்க வைக்கிறார்.
மற்றவர்கள் கதையின் தன்மையோடு பொருந்தியிருக்கிறார்கள்.
சஞ்சய் மாணிக்கத்தின் பின்னணி இசை கதையோட்டத்தின் வேகத்தை அதிகரிக்கிறது. மிரட்சி தரும் காட்சிகளை கே ஜியின் கேமரா கோணங்களில் பார்ப்பது படபடப்பை அதிகரிக்கிறது.
சாத்தான் வழிபாடு நடந்த இடத்தில் நடக்கும் சம்பவங்கள் திகிலாக இருக்க, கிளைமாக்ஸ் நெருங்கியபோது கதை அமானுஷ்யத்துக்கு சம்பந்தப்படாத ஒன்றுக்குள் புகுந்து புறப்படுவது எதிர்பாராதது.
ஜென்ம நட்சத்திரம் _ எதிர்பாராததை எதிர்பாருங்கள்!
Rating 3 /5

