‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, மிருணாள் தாக்கூர் நடிப்பில், ஷௌர்யுவ் இயக்கத்தில், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘hi நான்னா.’
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் பான் இந்தியா திரைப்படமாக வரும் டிசம்பர் 7-ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நானி பேசியபோது, ‘‘‘நான்னா’ என்றால் தமிழில் அப்பா, ஆனால் படத்தின் பெயர் எல்லா மொழியிலும் ஒரே மாதிரி இருக்கட்டும் என்று நினைத்தோம், அது லிப் சிங்க் மற்றும் பலவற்றுக்கும் உதவியாய் இருந்தது. படத்தில் நிறைய முறை ‘நான்னா’ என்ற வார்த்தை வருகிறது, அதுவும் ஒரு காரணம். இது ஒரு மிக அழகான படம். படத்தை முழுதாகப் பார்த்த பிறகு சொல்கிறேன் இந்தப்படம் எனக்கு பெருமை தரும் படம். டிசம்பர் 7 திரையரங்குகள் கொண்டாடும் படமாக இது இருக்கும்.
இது காதல் படம்தான், ஆனால் பரபரவென போகும் கதை என கண்டிப்பாக உங்கள் மனதில் இடம்பிடிக்கும் படமாக இருக்கும். தமிழில் நான் நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து எப்போதும் எனக்கு ஆதரவு தந்து வருகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள். இது ஒரு முறை பார்க்கும் படமாக இருக்காது, மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கும் படைப்பாக இருக்கும்.
நடிகை மிருணாள் இந்தப் பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று மொத்த டீமும் நினைத்து தான் தேர்வு செய்தோம், அதை அவர் அற்புதமாக செய்துள்ளார்.
ஆரம்பத்தில் தமிழ் இயக்குநர்களோடு வேலை பார்த்தேன். ஆனால் அதை இங்குள்ள மக்கள் தெலுங்குப் படமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள், தெலுங்கு மக்கள் தமிழ்ப் படமாக பார்க்க ஆரம்பித்தார்கள். பின்னர் ‘பாகுபலி’, ‘காந்தாரா’ போன்ற படங்கள் வந்த பிறகு தமிழ் நடிகர், தெலுங்கு நடிகர் என்று பிரித்து பார்த்து படம் எடுக்கத் தேவையில்லை, சொல்லும் கதைக்கு உண்மையாக இருந்தால் போதும், அது மக்களிடம் போய்ச் சேரும் எனப் புரிந்தது, எனவே தான் நான் கதைகளுக்கு முக்கியத்துவம் தருகிறேன். தமிழ், தெலுங்கு எனப் பிரித்து வைக்க தேவையில்லை, என் எல்லாப் படங்களும் இங்கு தமிழில் வரும்.” என்றார்.