நிஜமாகவே வித்தியாசமான கிரைம் திரில்லர்…
தொடர்ந்து ஒரே விதமாக நடக்கும் கொலைகள், கொலைகளைச் செய்வது யாரென கண்டுபிடிக்க களமிறங்கும் போலீஸ். இப்படி சிம்பிளான கதையில் உருவாகியிருக்கும் ‘லெவன்.’
கொலையாளி யார்? போலீஸ் அந்த நபரை எப்படி கண்டுபிடிக்கிறது? கொலைகளுக்கான காரணம் என்ன? என்பதை பரபரப்பாக தொகுத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ்
நவீன் சந்திராவுக்கு கொலைகளை செய்யும் நபரைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு. காவல்துறை அதிகாரியாக நடை உடையில் கம்பீரம், நடவடிக்கைகளில் புத்திசாலித்தனம், ஆக்சன் காட்சிகளில் உடல் பலம் என கலந்துகட்டி அந்த பொறுப்பை சரியாக நிறைவேற்றியிருக்கிறார்.
தன்னை எத்தனை முறை தவிர்த்தாலும் அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு ஹீரோவை துரத்தித் துரத்தி காதலிக்கிற எளிமையான வேலையை ஏற்றுகொண்டு, அதற்கேற்ப எளிமையாக நடித்திருக்கிறார்.
தன்னிடம் படிக்கும் மாணவனுக்கு சக மாணவ மாணவிகளால் மன உளைச்சல் உருவாக அவனுக்கு சொந்த அம்மாவைப் போல் அன்பு காட்டி ஆறுதல் தருகிற கடமையை கனிவாக செய்திருக்கிறார் ஆசிரியராக வருகிற அபிராமி.
கதாநாயகனின் இளவயது கதாபாத்திரத்தை சுமந்திருப்பவர் கதையின் கனமான பகுதியை உணர்ச்சிபூர்வமான நடிப்பால் நிரப்பியிருக்க, ஆடுகளம் நரேன், ஹரிஷ் பேரடி, ரித்விகா, அர்ஜெய் என மற்றவர்கள் அவரவர் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
டி இமானின் பின்னணி இசை கதையின் விறுவிறுப்புக்கு வீரியம் சேர்த்திருக்கிறது. (இதுவரை நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்திருக்கும் இமான் இதுவரை கிரைம் திரில்லர் படங்களுக்கு இசையமைத்ததில்லை. அந்த வகையில் அவர் இசையில் உருவாகியிருக்கும் முதல் கிரைம் திரில்லர் படம் இது.)
கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவு படத்தை தரம் உயர்த்தியுள்ளது.
சைக்கோ கொலைகாரனை தேடிப்பிடிக்கும் போலீஸ் என்ற வழக்கமான கதையில், வித்தியாசமான ஒரு விஷயத்தை புகுத்தியிருப்பதால் லெவன் தருகிற அனுபவம் தனித்துவமாக இருக்கிறது!