அடுத்து என்ன நடக்கும், அடுத்து என்ன நடக்கும் என காட்சிக்கு காட்சி எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எபிசோடுகளைக் கொண்ட வெப் சீரிஸாக ‘ஆஹா ஓடிடி’யின் ‘தூள்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்.’
அந்த பெண் அதிகாரி தூள்பேட்டை ஸ்டேஷனில் பணிபுரிகிறார். அவர் மனதில் ஏதாவது அசம்பாவிதமாக நடக்கப்போகிறது என்று தோன்றினால், அதன்படி நடந்துவிடும். அன்று அவர் மனதில், மூன்று கொலைகள் நடக்கப்போவது காட்சியாக தெரிகிறது. அதன்படியே நடக்கவும் செய்கிறது.
அந்த சமயத்தில், தான் பணிபுரிவதற்கு தூள்பேட்டை ஸ்டேஷன்தான் வேண்டும் என கேட்டுப் பெற்ற அந்த அஸிஸ்டண்ட் கமிஷ்னர் ஸ்டேஷனுக்கு வந்து பொறுப்பேற்கிறார். அவர் முன்னிலையில் கொலை செய்யப்பட்ட மூன்று பேரின் தலையும் ஸ்டேசனுக்கு வந்து சேர்கிறது.
ஒரு ஸ்டேசனை கவனிக்க ஒரு அஸிஸ்டண்ட் கமிஷ்னரை நியமிப்பதே போலீஸ் துறை வரலாற்றில் புதிதாக இருக்க, தற்காலிகப் பொறுப்பு கொடுத்து இன்னொரு அஸிஸ்டண்ட் கமிஷ்னரும் நியமிக்கப்படுகிறார்.
ஒரு அதிகாரி அந்த ஸ்டேஷன்தான் வேண்டும் என கேட்டு போஸ்டிங் பெறும்போதே நடக்கப்போவதெல்லாம் தாறுமாறாகத்தான் இருக்கப் போகிறது என்ற முடிவுக்கு வந்து விடுகிறோம். அதே ஸ்டேஷனில் இன்னொரு அஸிஸ்டண்ட் கமிஷ்னர் இணையும்போது எதிர்பார்ப்பின் சதவிகிதம் எகிறுகிறது.
ஒரு தலையை வெட்டியது யார் என்பதையும் எதற்காக என்பதையும் பார்வையாளர்களுக்கு காண்பித்துவிட, மற்ற தலைகள் யாருடையது, கொலைகளைச் செய்தது யார் என்பதை கண்டறிவதற்கான விசாரணையும் அதன் மூலம் தெரியவருகிற உண்மைகளுமாக வேகமெடுக்கின்றன அடுத்தடுத்த அத்தியாயங்கள்…
நேரடியாக ஸ்டேஷனுக்கு வந்து பொறுப்பேற்காமல் அந்த ஊரில் லாட்ஜில் தங்கியிருப்பது, போலீஸாரால் சுற்றி வளைக்கப்படுவது என அஸிஸ்டண்ட் கமிஷ்னராக வருகிற அஸ்வின் குமாரின் ஆரம்பக் காட்சிகளே அமர்க்களமாக இருக்கிறது. நடிப்பில் வேகத்தையும் விவேகத்தையும் தேவைக்கேற்ப கலந்து பரிமாறியிருப்பது கவனம் பெறுகிறது.
கூடுதல் பொறுப்பு அதிகாரியாக வருகிற குரு லெஷ்மணின் நடிப்பில் கெத்து தெரிகிறது. ஈகோ மோதல்களில் இரு அதிகாரிகளின் கம்பீரமும் அசத்துகிறது.
பாடினி குமாரிடம் போலீஸ் அதிகாரிக்கான அலட்டல், தோரணை என எதுவும் பெரிதாக தென்படவில்லை. அவர் சாதாரண கான்ஸ்டபிள் லெவலில் இருப்பதால் அதெல்லாம் அவசியமும் இல்லை. அவருக்கான வேலை மனதில் விபரிதமான காட்சிகளைப் பார்த்து பயத்தையும் பதற்றத்தையும் வெளிப்படுத்துவது. அந்த வேலையை கண்களில் மிரட்சியைக் காண்பித்து கச்சிதமாக செய்து முடிக்கிறார்.
கொலைவெறியோடு சுற்றுகிற கதாபாத்திரங்கள் நடிப்பில் மிரட்டுகிறார்கள். பிர்லா போஸ், ஶ்ரீத்து கிருஷ்ணன், பிரீத்தி ஷர்மா என ஏராளமான நடிகர் நடிகைகளுக்கு வாய்ப்பும் அவர்களின் நடிப்புக்கான முக்கியத்துவமும் படத்தில் இருக்கிறது.
நிமிடத்துக்கு நிமிடம் விறுவிறுப்பு வேகமெடுக்கிற கதையோட்டத்திற்கேற்ப சுறுசுறுப்பான பின்னணி இசையைத் தந்திருக்கிறார் அஷ்வத். என் எஸ் சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு அசத்தலான பங்களிப்பு.
கொலையும் அதற்கான காரணங்களும் என விரிகிற பழக்கப்பட்ட கதைதான் என்றாலும் கிடைக்கிற கேப்பிலெல்லாம் அதிர்ச்சிகள், திருப்பங்கள் என நிரப்பிக் கொண்டு பயணிக்கிற திரைக்கதையால் ‘அடி தூள்’ என்று சொல்லவைக்கிறது ஜெ ஜெஸ்வினி இயக்கியிருக்கும் இந்த ‘தூள்பேட்.’
Rating 3.5 / 5


