சீரியஸான ஹாரர் சப்ஜெக்டுக்கு சிரிப்பு மசாலா தடவியிருக்கும் படம்.
திரைப்படங்களை விமர்சனம் என்ற பெயரில் கேலியும் கிண்டலுமாக பிரித்து மேய்கிறவர்களை தூக்கி வந்து கொடுமைப்படுத்தி கொலை செய்கிற கும்பலிடம், யூடியூப் சினிமா விமர்சகர் சந்தானம், அவருடைய குடும்பத்தினரோடு சேர்த்து சிக்குகிறார்.
மனிதர்களை நறுக்கிச் சாப்பிடுகிற அந்த மாய உலக கும்பலிடமிருந்து சந்தானமும் அவருடைய குடும்பத்தினரும் தப்பிக்க என்ன செய்யலாம் ஏது செய்யலாம் என யோசித்து சிலபல நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள். அதனால் கிடைத்த கஷ்ட நஷ்டங்களும் பலனும் மீதிக்கதை…
சந்தானம் வழக்கத்துக்கு மாறான ஹேர்ஸ்டைலில் வருகிறார்; வழக்கமான டயலாக் டெலிவரியால் கொஞ்சம் கொஞ்சம் கலகலப்பூட்டுகிறார்.
அவரை விட கூடுதலாக சிரிக்க வைக்கிறார் மொட்டை ராஜேந்திரன். ஒரு காட்சிக்காக உடல் முழுதும் பெயிண்ட் பூசிக்கொண்டு நிற்பதற்கு தனியாக பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
பேயாக அப்படியும் இப்படியும் பறந்து தன் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார் ஹீரோயின் கீத்திகா.
செல்வராகவனும் பேயாகவே வருகிறார். உட்கார்ந்த இடத்திலிருந்தே மிரட்டல் குரலில் வசனம் பேசிக் கொண்டிருப்பதோடு அவரது வேலை முடிகிறது.
கெளதம் மேனன் பத்தோடு பதினொன்றாக கதையில் கலந்ந்திருக்கிறார்.
யாஷிகா ஆனந்த், மாறன், ரெடின் கிங்ஸ்லி, கஸ்தூரி என மற்றவர்கள் ஆளாளுக்கு சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்.
அமானுஷ்ய மாய உலகத்துக்குள் கதை நுழைந்ததிலிருந்து கிளைமாக்ஸ் வரை கலை இயக்குநரின் உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது.
பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்தை தாங்கிப் பிடித்திருக்கின்றன.
ஒரு திரையரங்கம், அதில் ஓடும் படத்துக்குள் சிக்க வைக்கப்படுபவர்கள் மீண்டு வருவதற்கு படும் பாடு என ரசிகர்களை புதுவிதமான ஃபேண்டஸி உலகத்துக்குள் கொண்டுபோகும் இயக்குநர் பிரேம் ஆனந்த், சுவாரஸ்யமான விஷயங்களைச் சேர்த்து, ரசித்துச் சிரிக்க வைக்கும் காட்சிகளை உருவாக்கியிருந்தால் நெக்ஸ்ட் லெவலின் வசூல் பெஸ்ட் லெவலாக இருந்திருக்கும்!