சந்தர்ப்பச் சூழ்நிலையால் சாமானியன் ஒருவன் பிளாக்மெயில் செய்பவனாக மாறுகிற கதைக்களம்.
தொழிலதிபர் ஒருவரின் குழந்தை காணாமல் போக, குழந்தை தன்னிடம் இருப்பதாக சொல்லி லட்சக்கணக்கில் பணம் கேட்கிறார் கதையின் நாயகன் ஜீ வி பிரகாஷ். அவர் கேட்கும் பணத்தை கொடுக்கிறார் அந்த தொழிலதிபர். அதை பெற்றுக் கொண்ட ஜீ வி தன்னிடம் குழந்தையில்லை என்று சொல்லி அதிர்ச்சி தருகிறார். பின்னர் யாரோ ஒருவர் அந்த குழந்தை தன்னிடம் இருப்பதாக சொல்லி பணம் கேட்கிறார். அந்த பணத்தையும் தர தொழிலதிபர் தயாராக இருக்கிறார். ஆனால், குழந்தை அவரிடமும் இல்லை.
இப்படியான ‘பிளாக்மெயில்’களால் கதையில் பரபரப்பு தொற்றிக்கொள்ள குழந்தை காணாமல் போனாளா? யாராவது கடத்தினார்களா? ஜீ வி பிரகாஷ் குழந்தை தன் வசமிருப்பதாக சொல்லி பணம் கேட்டுப் பெற்றதன் காரணம் என்ன? என்பதற்கான பதில்களாய் விரிகின்றன மிச்சமீதி காட்சிகள்…
காதலியை தன் முதலாளி கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டும் சூழ்நிலையில் பணத் தேவைக்காக தொழிலதிபரின் குழந்தையைக் கடத்த திட்டமிடுவது, திட்டமிட்டபடி குழந்தையைக் கடத்தாமல் போய்விட சூழ்ச்சி செய்து தொழிலதிபரிடமிருந்து பணம் பறிப்பது, செய்த தவறுக்கு தண்டனையாக காதலியை ஒரு பிரச்சனையிலிருந்து மீட்டு இன்னொரு தரப்பில் அவளை சிக்க வைப்பது என சாமானிய மனிதன் சூழ்நிலைக் கைதியாக மாறினால் எப்படியெல்லாம் செயல்படுவான் என்பதற்கு உதாரணமாக களமாடியிருக்கிறார் ஜீ வி.
ஜீ வி யின் காதலியாக வருகிற தேஜு அஸ்வினி ஜி.வியை காதலிக்கும் தருணங்கள் மிகமிக குறைவு. இப்போது இவர், அடுத்தது அவர் என யார் யாராலோ கடத்தப்பட்டு அவதிப்படுவது அதிகம். அந்த காட்சிகளுக்கான நடிப்பை கச்சிதமாக கொடுத்திருக்கிறார்.
எத்தனை கோடி கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருக்கிற, உண்மையில் குழந்தையைக் கடத்தியது யார் என புரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகிற கனமான கதாபாத்திரத்தில் கவனம் பெறுகிறார் ஸ்ரீகாந்த்.
தன் குழந்தை கடத்தப்பட்ட வேதனை, தன்னுடன் ஒரு காலகட்டத்தில் இணைந்து வாழ்ந்த நபரின் மிரட்டலுக்கு ஆளாகும் நிலைமை என காட்சிக்கு காட்சி கலங்கித் தவிப்பவராக பிந்து மாதவியின் நடிப்பு தரம்.
தன்னுடன் வாழ்ந்த பிந்து மாதவியின் அந்தரங்க தருணங்களை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவது, அவரது குழந்தையைக் கடத்த ஸ்கெட்ச் போடுவது என தெனாவட்டான வில்லத்தனத்தால் கவர்கிறார் லிங்கா.
ரமேஷ் திலக், வேட்டை முத்துக்குமார் என மற்றவர்கள் கதையின் முக்கிய கதாபாத்திரங்களைச் சுமந்திருக்கிறார்கள். ரெடின் கிங்ஸ்லியால் கொஞ்சமே கொஞ்சம் சிரிக்க வைக்க முடிகிறது. கடத்தப்படுகிற குழந்தையிலிருந்து மற்ற அனைவரின் நடிப்பும் நிறைவு.
கதையின் ஒவ்வொரு நகர்விலும் பதட்டம் சூழ்ந்திருக்க, அதன் சதவிகிதத்தை பல மடங்காக்கியிருக்கிறது சாம் சி எஸ்ஸின் பின்னணி இசை. கோகுல் பினாயின் ஒளிப்பதிவு தரம்.
ஒரு சிறுமி காணாமல் போவதும், அதை தேடுவதுமாய் துவங்கும் காட்சியில் பற்ற வைத்த பரபரப்பை கிளைமாக்ஸ் வரை கொண்டு செல்ல நினைத்த இயக்குநர் மு மாறன் ஒரு கட்டத்துக்கு மேல் டிவிஸ்ட் மேல் டிவிஸ்டை திணித்திருப்பது பொறுமையைச் சோதிக்கிறது.

