HomeMovie Reviewஆர் கே வெள்ளிமேகம் சினிமா விமர்சனம்

ஆர் கே வெள்ளிமேகம் சினிமா விமர்சனம்

Published on

சஸ்பென்ஸ் திரில்லர், சைக்கோ திரில்லர், ஹாரர் திரில்லர் என எதில் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம் எனும்படி உருவாகியிருக்கும் படைப்பு. மலையாளத்தில் ஐந்து படங்கள் இயக்கி கவனம் ஈர்த்த சைனு சாவக்காடன், தமிழில் இயக்கியிருக்கும் முதல் படம்.

இளைஞர்கள் சந்தோஷும் ரகுவும் தாங்கள் எழுதிய கதை திரைப்படமாக உருவாக வேண்டும் என விரும்புகிறார்கள். அதற்காக ஆர்.கே. என்ற பிரபல இயக்குநரை சந்தித்து கதை சொல்கிறார்கள். கதையைக் கேட்ட அந்த இயக்குநர் மனம்போன போக்கில், கதையில் அதை மாத்து இதை மாத்து என அவர்களிடம் மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது சற்றே கோபப்படவும் செய்கிறார். அவரை திருப்திப்படுத்துவது பெரும் கஷ்டமாக இருக்கிறது.

அப்படியான கதை விவாதத்திற்காக அவரை அடிக்கடி சந்திக்கும் அந்த இளைஞர்கள், அந்த இயக்குநர் ஏதோ ஒரு விஷயத்தால் மனதளவில் பெரிதாய் பாதிக்கப்பட்டிருப்பதையும், அவரைச் சுற்றி அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டம் இருப்பதையும் அறிந்து கொள்கிறார்கள். அவரிடம் கதை சொன்னபின் அந்த இளைஞர்களும் அமானுஷ்ய சக்தியின் பிடியில் சிக்கியதைப் போல் உணர்கிறார்கள்.

இப்படி பயணிக்கும் கதையில், இயக்குநரின் கடந்த காலம் எப்படிப்பட்டது? இயக்குநரை சூழ்ந்திருக்கும் அமானுஷ்ய சக்திகளின் பின்னணி என்ன? அவரிடம் கதை சொல்ல வந்தவர்களின் நோக்கம் நிறைவேறியதா? என்ற கேள்விகளுக்கு பதிலளித்து கடந்தோடுகிறது திரைக்கதை.

கதாசிரியர்கள் சந்தோஷாக விஜய் கெளரிஷ்; ரகுவாக ரூபேஸ்வரன். தங்களது கதையை இயக்குநர் ஏற்றுக்கொள்ளும்வரை முயற்சியைக் கைவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பது, கதையில் அவர் சொல்லும் திருத்தங்களை சலிப்படையாமல் செய்வது என நீளும் காட்சிகளில் எந்தவொரு அதிர்வையும் தராத விஜய், ரூபேஷ் கூட்டணி இயக்குநரை சூழ்ந்திருக்கும் அமானுஷ்ய சக்தியின் பின்னணியை அலசி ஆராய்ந்து கண்டுபிடிக்கும்போது வெளிப்படுத்தியிருக்கும் துடிப்பான நடிப்பு சற்றே கவனம் ஈர்க்கிறது.

தூக்கில் தொங்கி உயிர்விட்ட அப்பாவை, அந்த அப்பாவால் கொலை செய்யப்பட்ட அம்மாவை சிறுவயதில் பார்த்த வலியை பிரதிபலித்தபடி வாழ்நாளைக் கடத்த வேண்டும். அமானுஷ்ய சக்தியின் பிடியில் சிக்கித் தவிப்பதன் பயத்தையும் பதற்றத்தையும் வெளிப்படுத்த வேண்டும். தன் படங்களில் நடித்து முன்னேறிய பெண்ணை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர், அந்த பெண்ணை கொலை செய்த குற்றத்துக்காக தண்டனை அனுபவித்து திரும்பியவர், சூழ்நிலை தந்த நெருக்கடிகளால் படம் இயக்க முடியாமல் விரக்தியில் இருப்பவர் என ஆர்.கே.வாக வருகிறவருக்கு கதையின் பெரும்பகுதியை தூக்கிச் சுமக்கிற வேலை. அதை உணர்ந்து அவர் வெளிப்படுத்தியிருக்கிற நேர்த்தியான நடிப்பு கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் தந்திருக்கிறது.

இயக்குநரின் கார் டிரைவராக வருகிற ‘சுப்ரமணியபுரம்’ விசித்திரன், கிட்டத்தட்ட படத்தின் கடைசி அரைமணி நேரத்தை ஆக்கிரமித்திருக்கிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மனைவியை பறிகொடுத்து கதறுவதாகட்டும், மனைவி பறிபோனதற்கு காரணமானவர்களாக கருதுபவர்களை பழிவாங்கத் திட்டமிட்டு செயல்படுத்துவதாகட்டும், கதையின் போக்கிற்கேற்ப நடிப்பில் வித்தியாசமும் சில தருணங்களில் வெறித்தனமும் காட்டி கதையின் திருப்பத்துக்கு உதவியிருக்கிறார்.

ஆர்.கே.வின் படங்களில் நடித்து முன்னேறுகிற இளம்பெண், ஆர்.கே.வின் மனைவியாக வருகிற ஆதிரா, விஜய் கெளரிஷின் காதலியாக வருகிறவர்… மூவரிடமும் இளமையும் அழகும் சரிவிகிதமாய் கலந்திருக்க, ஆதிராவுக்கு மட்டுமே ஓரளவு நடிப்பை வெளிப்படுத்துகிற வாய்ப்பு தந்திருக்கிறது திரைக்கதை.

ஆர்கே.வின் திரைப்படங்களில் பணிபுரிந்து, அவருடன் நண்பர்களாக கலந்து பழகி, குடித்துக் கூத்தடிக்கிற குழுவில் ஆதேஷ்பாலா, கொட்டாச்சி, சின்ராசு உள்ளிட்டோருடன் ஒரு வாட்டசாட்டமான பெண்ணும் வலம் வருகிறார். அவர்கள் அத்தனைப் பேரும் ஒரு சந்தர்ப்பத்தில் மரணமடைந்தாலும், ஆர்.கே. சரக்கு பாட்டிலில் கை வைக்கும்போதெல்லாம் ஓடி வந்து கலவரப் படுத்துவதை கொஞ்சமே கொஞ்சம் ரசிக்க முடிகிறது. அவர்கள், ஆர்.கே.வின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்போது அட்டடன்ஸ் போட்டு அடிதடியில் ஈடுபடும் காட்சிகள் சுறுசுறுப்பாக நகர்கிறது.

சீனியர் நடிகர் வின்சென்ட்ராய் முக்கிய கதாபாத்திரத்தில் வந்து போகிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் ராமச்சந்திரன், அந்தக்கால தமிழ் சினிமா ஹீரோயின் ஷர்மிளாவோடு ஒன்றிரண்டு காட்சிகளில் எட்டிப் பார்க்கிறார்.

சாய் பாலன் இசையில், ‘கடலிங்கு தேடும் கரை நீதானடி’, ‘கண்ணுக்குள்ள காதல் வெச்சு’ பாடல்கள் இதம் தருகின்றன. ‘கடவுள் கொடுத்த பாதி நீ’ பாடல் கிறக்கம் தருகிறது.

சென்னையின் பரபரப்பான சாலைகளில், பசுமை படர்ந்த செம்மொழிப் பூங்காவில் தாவிப் பாய்ந்திருக்கிறது ஒளிப்பதிவாளர் டன்ஸ் அலெக்ஸின் கேமரா.

ஒரு சில கொலைகள், அதற்கான காரணங்கள் என பின்னப்பட்ட திரைக்கதையில் கொலையாளி யார் என்ற கேள்வியை முன்வைத்து, ஒரு விபத்து அதில் இறந்தவர்கள் ஆவியாக அலைந்து திரிகிற சுவாரஸ்யத்தைப் புகுத்தியிருக்கிற இயக்குநர் சைனு சாவக்காடன் தமிழ் சினிமாவுக்கு நல்வரவு. அவர் இயக்கியிருக்கிற இந்த படத்தை ஒருமுறை பார்க்கலாம். அவரது அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை பெரிதாய் கவரும் என எதிர்பார்க்கலாம்!

Rating 3 / 5

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...