சூர்யா போலீஸாக நடிக்கிறார் என்பதால் ‘சிங்கம்’ போல வில்லன்களை சுளுக்கெடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் போனால் அவர் ஷார்ட்ஸ் டீ சர்ட் போட்டுக்கொண்டு ஜாலியாக ஆஃபீஸுக்கு போகிறார். போலீஸுக்கான ஹேர் கட், முறுக்கிய மீசை அதுஇதுவென எந்த கம்பீரமும் இல்லை. ஆனால் அவர் டி எஸ் பி.
ஒரு கொலை நடக்கிறது. ஸ்பாட்டுக்கு போகிறார்; ஒரு சேர் போட்டு ஓரமாக உட்கார்ந்து கொண்டு, அதை பார் இதை பார் என தனக்கு கீழ் பணிபுரிகிற அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். அவர்கள் அதையும் இதையும் பார்த்துவிட்டு சொல்கிற தகவல்களை வைத்து, அலசி ஆராய்ந்து கொலை எப்படி நடந்திருக்கும், எதற்காக நடந்திருக்கும் என்பதை சொல்கிறார். அப்படியான நடவடிக்கைகள் மூலமே தொடர் கொலைகள் செய்கிற ஒரு சைக்கோவை கைது செய்கிறார். அந்த சைக்கோ, ‘என்னைக் கைது செய்த டி எஸ் பி’க்கு கண் தெரியாது’ என்று சொல்கிறார்.
அந்த சைக்கோ சொல்வது உண்மை என்று தெரியும்போது தூக்கி வாரிப் போடுகிறது நமக்கு. அப்படியே நிமிர்ந்து உட்கார்ந்தால், அவர் கைது செய்த சைக்கோ சிறையிலிருக்கும்போது, அந்த சைக்கோ போலவே வேறு யாரோ ஒருவர் தொடர்ந்து கொலைகளைச் செய்ய கதை சூடுபிடிக்கிறது.
அந்த புது சைக்கோ யார் என்பதை கண் தெரியாத சூர்யா எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது மீதிக்கதை…
கதை சீரியஸ்தான்; ஆனா நீங்க ஜாலியா நடிச்சா போதும் என்று இயக்குநர் சூர்யாவிடம் சொல்லியிருப்பார் என யூகிக்க முடிகிறது. கண் பார்வை கிட்டத்தட்ட முழுமையாக பறிபோய்விட்ட நிலையில் மற்றவர்களின் துணையுடன் தனது மூளையைப் பயன்படுத்தி கொலைகாரனை நெருங்குவது, அவனிடம் வசமாகச் சிக்கி யாருடைய துணையுமில்லாமல் சண்டை செய்வது என ஒவ்வொரு காட்சியையும் தனது துள்ளலான நடிப்பால் ரசிக்க வைக்கிறார்.
சூர்யாவுக்கு அசிஸ்டன்டாக நஸ்ரியா. தன் பாஸிடம் இருக்கும் புத்திசாலித்தனத்துக்கு சப்போர்ட்டாக தன் சுறுசுறுப்பை தருகிற கேரக்டர். இயல்பாக நடித்திருக்கிறார். மேடத்துக்கு செமையான ஆக்சன் காட்சியும் உண்டு.
அமுல்பேபி போல் முகத்தை வைத்துக் கொண்டு வீரியமான வில்லத்தனம் காட்டுகிறார் நஸ்லென்.
சூர்யாவின் அப்பாவாக ஆனந்த்ராஜ், அம்மாவாக ராஜலெஷ்மி கூட்டணியால் காமெடி களைகட்டுகிறது. டெவினோ தாமஸுக்கு ஜஸ்ட் வந்து போகிற கேரக்டர்; அதிலும் அதிரடி கிளப்புகிறார்.
‘லுங்கி பாய்ஸ்’ ராஜ்பிரியன் தமிழ் சினிமாவுக்கு நல்வரவு. கவனம் பெறுகிற காட்சிகள் இருக்கிறது. இன்ஸ்டா பிரபலங்கள், யூடியூபர்ஸ் பலருக்கு நடிக்கிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
பின்னணி இசையால் காட்சிகளுக்கு வேகம் கூட்டியிருக்கிற சுஷில் ஷியாம், நேர்த்தியான ஒளிப்பதிவு செய்திருக்கிற வினித் அகஸ்தியன், படத்தின் முக்கிய கதாபாத்திரமாக இருக்கிற சூர்யா வசிக்கும் வீட்டை வடிவமைத்த கலை இயக்குநர் என ஒவ்வொருவரும் படத்தை தாங்கியிருக்கிறார்கள்.
எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு வித்தியாசமாக கதை உருவாக்க வேண்டும்; சிறிய விஷயத்தை கதையாக எடுத்துக் கொண்டாலும் அதற்கான திரைக்கதையில் ரசிகர்களை வியக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் மலையாள இயக்குநர்கள். அந்த உறுதியோடு ஜித்து மாதவன் இயக்கியிருக்கும் இந்த படமும் ரசிகர்களை வியக்க வைக்கிறது; ரசிக்க வைக்கிறது.
Rating 4 / 5

