உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘பிளாக் கோல்டு’ நவம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தின் உருவாக்கம், கதைக்களம், நட்சத்திரங்களின் பங்களிப்பு மற்றும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்வில் நடிகர் வெற்றி பேசியதாவது,
‘பிளாக் கோல்டு’ திரைப்படம் எனது திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படம். பொதுவாக பிளாக் கோல்டு என்றால் கச்சா எண்ணெய் அல்லது மிளகு என்று பலரும் நினைக்கலாம். ஆனால் இந்தப் படத்தில் நாங்கள் குறிப்பிடுவது மனிதர்களின் தலைமுடியைத்தான். தலைமுடிக்குப் பின்னால் ஒவ்வொரு நாளும் நடைபெறும் மிகப்பெரிய வணிகமும், அதன் பின்னணியில் இயங்கும் வலையமைப்பும்தான் இந்தப் படத்தின் கதைக்களம். இந்தப் பின்னணியில் ஒரு குடும்பக் கதையையும், அப்பா – மகன் இடையிலான உணர்வுப்பூர்வமான உறவையும் இணைத்து இயக்குநர் தீரன் உருவாக்கியிருக்கிறார்.
இந்தக் கதையை முதன்முதலில் கேட்டபோதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வித்தியாசமான கதைக்களத்துடன் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாகியுள்ளது. இதில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், சக நடிகர்கள், இயக்குநர் குழுவினர் மற்றும் தயாரிப்பாளர் மூர்த்தி உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
‘பிளாக் கோல்டு’ திரைப்படம் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் படத்தைப் பார்த்துவிட்டு உங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். எப்போதும் அளிக்கும் ஆதரவைப் போல இந்தப் படத்திற்கும் ஊடக நண்பர்களும் ரசிகர்களும் ஆதரவு தர வேண்டும். நன்றி.
இயக்குநர் தீரன் அருண்குமார் பேசியதாவது,
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இதே அரங்கில் உங்களைச் சந்திப்பது, காணாமல் போன குழந்தை மீண்டும் கிடைத்தது போன்ற உணர்வைத் தருகிறது. எனது முதல் படமான ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் உங்களைச் சந்தித்தேன். தற்போது எனது இரண்டாவது படமான ‘பிளாக் கோல்டு’ மூலம் மீண்டும் உங்கள் முன்னால் நிற்கிறேன். முதல் படத்திற்குப் பிறகு அடுத்த படத்திற்கான முயற்சியில் இருந்தபோது, தெலுங்கில் ஒரு பெரிய பட்ஜெட் படத்திற்கான கதையைச் சொல்லியிருந்தேன். சில கட்டங்களைக் கடந்தும் அந்தப் படம் தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால் தமிழுக்கே திரும்பி, புதுமையான ஒரு கதையைத் திரைப்படமாக உருவாக்க முடிவு செய்தேன். பல தயாரிப்பாளர்களிடம் கதையைச் சொன்னபோதும் யாரும் துணிவாக முன் வரவில்லை. மலையாள சினிமா போல வித்தியாசமான கதைகளுக்கான வரவேற்பு தமிழிலும் இன்னும் அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அந்தச் சூழலில்தான் ‘பிளாக் கோல்டு’ உருவானது.
இந்தப் படத்திற்கு வெற்றியைத் தேர்வு செய்ததற்குக் காரணம், குறைந்த பட்ஜெட்டிலும் குறைந்த நாட்களிலும் பணியாற்றக்கூடிய அதே நேரத்தில் கதைக்கு ஏற்ற கதையின் நாயகனாக அவர் இருப்பார் என்று நம்பியதுதான். அவரிடம் கதையைச் சொன்னதும் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு உடனடியாகப் படத்தைத் தொடங்கலாம் என்றார். படத்தின் நாயகி உடல்நலக் குறைவால் இன்றைய நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. அபிராமி காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். அருள் டி. சங்கர் நடித்த சுருள் ஆயுதச் சண்டைக் காட்சிக்காக எட்டு முதல் ஒன்பது நாட்கள் பயிற்சி அளித்தோம். படத்தில் சுமார் ஒன்றரை நிமிடம் மட்டுமே வரும் அந்தக் காட்சிக்காகவும் அவர் கடுமையாக உழைத்தார். அதற்காக ஸ்டண்ட் மாஸ்டர் “மெட்ரோ” மகேஸ் மாஸ்டருக்கு நன்றியை சொல்லிக்கொள்கிறேன். ஏ. வெங்கடேஷ் போன்ற அனுபவமிக்க கலைஞர் எங்களுடன் மிகவும் நட்பாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றியது மகிழ்ச்சி. சபீதா ராய், கராத்தே வெங்கடேஷ், ஜப்பான் குமார் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர். குறிப்பாக ஜப்பான் குமாருக்கு வசனங்கள் இல்லாத கதாபாத்திரம். பேசாமல் உணர்வுகளை வெளிப்படுத்துவது எளிதான விஷயமல்ல; அதை அவர் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
ஒரு திரைப்படத்தின் தரத்தைத் தீர்மானிப்பதில் ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் ஆகிய மூவரின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது. இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் குமார் தனது முதல் படத்திலேயே சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார். எடிட்டர் தினேசிற்கும் எனக்கும் நல்ல புரிதல் இருந்ததால் படத்தைச் சிறப்பாக முடிக்க முடிந்தது. இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷும் படத்திற்கு மிகவும் வலு சேர்த்துள்ளார். எனது நண்பர் ராம் பல ஆண்டுகளாகப் பழக்கமானவர்; அவரையும் இந்தப் படத்தின் மூலம் சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். புதிய கலைஞர்களை நம்பி வாய்ப்பளிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. படத்தைப் பார்த்தவர்கள் நல்ல முறையில் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். ஆனால் இறுதித் தீர்ப்பு நவம்பர் 13ஆம் தேதி படம் வெளியாகும்போது ரசிகர்களிடமிருந்தும் ஊடகங்களிடமிருந்தும்தான் கிடைக்கும். சிறிய படம், பெரிய படம் என்ற பிரிவுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. கதையின் உள்ளடக்கம்தான் ஒரு படத்தின் மதிப்பைத் தீர்மானிக்கிறது. நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களைத் தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஆதரித்திருக்கிறார்கள்; அதே ஆதரவை எங்களுக்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.
இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் தயாரிப்பாளர் மூர்த்தி சார்தான். ஆரம்பம் முதல் இன்று வரை அவர் ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், மிகப்பெரிய சினிமா ரசிகராகவே என்னுடன் பயணித்திருக்கிறார். படத்தில் வரும் காட்சிகள், வசனங்கள் என அனைத்தையும் ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்துகொள்வார். அதிகாலை ஐந்து மணிக்குப் படப்பிடிப்பை முடித்துவிட்டுச் சென்றாலும், அன்றைய படப்பிடிப்பு எப்படி நடந்தது, காட்சிகள் நன்றாக வந்ததா என்று விசாரிப்பார். இப்படிப்பட்ட சினிமா மீதான ஆர்வம் கொண்ட தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவுக்கு மிகவும் அவசியம். பணம் இல்லாமல் பல நல்ல கதைகள் திரைப்படமாக முடியாமல் நிற்கின்றன. அப்படிப்பட்ட சூழலில் எனக்கு மூர்த்தி சார் கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம். எனது வெற்றியை விட அவர் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எனக்கு முக்கியம். அவர் வெற்றி பெற்றால் என்னைப் போன்ற பல புதிய இயக்குநர்களுக்கும் வாய்ப்பளிக்க முடியும். இந்தப் படத்தின் தொடக்கத்திலிருந்து பல தடைகளைச் சந்தித்தோம். படம் பாதியில் நின்றுவிடும், அடுத்த கட்டத்திற்குச் செல்லாது, வியாபாரம் ஆகாது என்று பலரும் கூறினார்கள். ஆனால் ஒவ்வொரு தடையையும் கடந்து படத்தை முடித்தோம். தற்போது வியாபாரமும் முடிந்து, திரையரங்க வெளியீட்டிற்குத் தயாராக இருக்கிறோம்.
இந்தப் படத்தைத் தொடங்கியதும் இதே வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் சிறிய பூஜை நடத்தினோம். அப்போது இந்தப் படம் நிற்கும் என்று கூறியவர்கள் பலர் இருந்தார்கள். ஆனால் இன்று அனைத்து தடைகளையும் கடந்து உங்கள் முன்னால் வந்திருக்கிறோம். படத்தின் அடுத்தகட்ட விளம்பரப் பணிகளையும் தொடங்கவிருக்கிறோம். எங்கள் குழுவினர் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உழைப்பைக் கொடுத்து ஒரு கட்டடத்தைச் செங்கல் செங்கலாக உருவாக்குவது போல இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம். அதன் வெற்றியைத் தீர்மானிப்பது உங்கள் ஆதரவுதான். நவம்பர் 13ஆம் தேதி வெளியாகும் ‘பிளாக் கோல்ட்’ படத்தைப் பார்த்து எனது உழைப்பும், எங்கள் குழுவின் முயற்சியும் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன். மீண்டும் உங்கள் அனைவரையும் வெற்றிக் கொண்டாட்டத்தில் சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம். மூர்த்தி தயாரிப்பில், தீரன் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘பிளாக் கோல்டு’. இப்படத்தில் லிவிங்ஸ்டன், ப்ரியாலயா,துளசி, பிக்பாஸ் அபிராமி, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யாருக்கும் தெரியாத பெரிய நிழல் வணிகம், ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனை எவ்வாறு பாதிக்கிறது என்பதே இப்படத்தின் கதை.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டிருப்பது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

