பயங்கரமான சம்பவங்கள் நடந்ததால் பல வருடங்களாக மூடியிருந்த அந்த கல்லூரியின் ஹாஸ்டல் மீண்டும் திறக்கப்பட, அதில் சேர்கிறான் மாணவன் விவேக். சேர்ந்ததிலிருந்தே அவனைக் குறிவைத்து அமானுஷ்ய தாக்குதல்கள் நடக்கின்றன. உயிருக்கே ஆபத்து என்கிற அளவுக்கு அவனது நிலைமை மோசமாகிறது.
அந்த நிலையில் விவேக், ஹாஸ்டலில் பல வருடங்கள் முன் என்ன நடந்தது, அப்போது நடந்த சம்பவங்களுக்கும் இப்போது தான் பாதிக்கப்படுவதற்கும் தொடர்பு இருக்கிறதா என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளும் முயற்சியில் இறங்குகிறான்.
அவன் என்ன தெரிந்து கொள்கிறான் என்பதும், தனக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக்களிலிருந்து அவனால் மீள முடிந்ததா இல்லையா என்பதும் மீதிக் கதை…
கதை விவேக் என்ற மாணவனைச் சுற்றி நடந்தாலும் கதையின் ஹீரோ, ஹீரோயின் எல்லாமே சைத்தா ஆச்சார்தான். யக்சகானா நடனக் கலைஞராக திறமை காட்டுவதும், குழந்தையில்லாத ஏக்கத்தில் தன்னுடன் வாழ்கிற மனிதர்களையே பலி கொடுக்கிற அளவுக்கு கொடூரமான பெண்ணாக உருமாறி நிற்பதுமாக ‘வேற லெவல்’ என்று சொல்கிற அளவில் பங்களிப்பு தந்திருக்கிறார்.
விவேக்காக வருகிற சூர்யராஜ்வீரபத்னி பயம், பதட்டம், தன்னைச் சுற்றி நடக்கிற மர்மங்களின் பின்னணியை அலசி ஆராய்வதில் பரபரப்பு என கேரக்டரில் பொருந்தியிருக்கிறார்.
பிரீத்தி பகதாலா கதையின் இரண்டாம் நாயகி. இளமைத் துள்ளளோடு துடிப்பான நடிப்பால் கவர்கிறர். சரண் லக்கராஜு, சஷாங்க் பாட்டில், ஸ்ரீவைஷ்ணவ், ரமேஷ் இந்திரா உள்ளிட்ட மற்றோர் என மற்றவர்களின் நடிப்பு கச்சிதம்.
திகிலான கதையோட்டத்துக்கு விறுவிறுப்பு தரும்படி பின்னணி இசையைத் தந்திருக்கிறார் வெங்கி ஜி ஜி. தினேஷ் திவாகரனின் ஒளிப்பதிவு தரம்.
அழுத்தமான கதையை எடுத்துக்கொண்டு, ரத்தம் தெறிக்கிற காட்சிகள் கலந்துகட்டி ஆடியன்ஸுக்கு மிரட்டலான அனுபவம் தருகிறார் இயக்குநர் கீர்த்தன் நடகௌடா. மிரள விரும்புவோர் தாராளமாக தியேட்டருக்கு கிளம்பலாம். குழந்தைகளோடு பார்க்க முடியாத படம் என்பது முக்கியச் செய்தி.
Rating 3.5 / 5

