கதை, திரைக்கதையில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத ‘பண்டமாற்று.’
அறந்தாங்கி சுற்று வட்டாரத்திலுள்ள மரம் செடி கொடிகள் அடர்ந்த சிறியளவிலான காட்டுப் பகுதி. அதில் பேசிக் கொண்டிருப்பதற்காகவோ, சில்மிஷத்தில் ஈடுபடுவதற்காகவோ ஏதோவொன்றுக்காக ஒதுங்கும் ஜோடிகள் கொல்லப்படுகிறார்கள். கொல்பவர்கள் அவர்களிடமுள்ள பணம் நகைகளை பறித்துக் கொண்டு போகிறார்கள்.
கொல்பவர்கள் யார், அவர்களின் பின்னணி என்ன, நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக அடுத்தடுத்த காட்சிகளைப் பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆரம்பத்திலேயே, கொலை செய்பவர்கள் ஒரு இளம்பெண்ணும் ஒரு இளைஞனும் என்பதை இயக்குநர் காட்டிவிடுகிறார்.
அந்த பெண்ணுக்கு பொருட்களை அடமானம் பெற்றுக் கொண்டு வட்டிக்கு பணம் கொடுக்கிற வேலை. கடன் வாங்கியவர்கள் வட்டியையும் கடனையும் சொன்னபடி திருப்பிக் கொடுக்காத பட்சத்தில் ரவுடித்தனம் காட்டுவது கூடுதல் வேலை. அந்த இளைஞன் அந்த பெண்ணுக்கு உதவியாளராக இருக்கிறான்.
எல்லாம் சரி, எதற்காக கொலைகள்? பணம் நகைகளுக்காக. சிம்பிள்.
தொடர்ந்து கொலை செய்பவர்களை போலீஸ் சும்மா விடுமா? அவர்களுக்கு எனன தண்டனை?
காரணம் என்னவோ தெரியவில்லை. அரை மணி நேரப் படத்தில் போலீஸ் எட்டிக்கூட பார்க்கவில்லை. கொலைகாரர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதோடு படம் முடிகிறது. தண்டிப்பது யார் என்பது வெரி வெரி இன்ட்ரஸ்டிங்.
வட்டித் தொழிலில் காட்டும் ரவுடித்தனம், கொலை செய்யும்போது வெளிப்படுத்தும் வெறித்தனம். டயலாக் டெலிவரியும் பயங்கரம். கொடூர மனுஷியாய் மிரட்டியிருக்கிறார் நாயகி ஜெயசுதா. அவர் இதமாகப் பேசினால் எப்படியிருப்பார், பாடலுக்கு ஆடினால் எப்படியிருப்பார், புடவை கட்டினால் எப்படியிருப்பார், மாடர்ன் டிரெஸில் எப்படியிருப்பார் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள ஒரு காட்சி கூட இல்லை. முழுக்க முழுக்க மனிதாபிமானமற்ற பெண்ணாக மட்டுமே களமாடும்படியான கேரக்டர். அதை சரியாக உள்வாங்கி பிரதிபலித்திருக்கிறார்.
ஜெயசுதா சொல்வதை ஏன் எதற்கு என்று கேட்காமல் செய்கிற தளபதியாக கண்ணன் சாவித்ரி. இந்த படத்தை இயக்கிருப்பவரும் அவரே. இந்த படத்தின் திரைக்கதையை பெரிதாக்கி திரைப்படமாக எடுக்கும் எண்ணமும் இருக்கிறதாம். எடுத்தவரை, தனக்கு விறுவிறுப்பாக எடுக்கத் தெரியும் என்பதை நிரூபித்திருக்கிறார். அதற்காக பாராட்டுவதோடு, அடுத்தடுத்த முயற்சிகளுக்காக வாழ்த்தி விடலாம்.
நடக்கும் கொலைகளுக்கு முன் நோட்டம் பார்க்கிற வேலையை செய்கிற பாட்ஷாவின் பங்களிப்பு பக்கா. அவர் ஜெயசுதாவுக்கு எதிரியாகிற ஒரு சூழ்நிலை உருவாகிறது. அது படத்தில் அதிகம் அதிர வைக்கும் காட்சி.
வட்டிக்கு கடன் வாங்கி திருப்பிக் கொடுக்க முடியாமல் அடி உதை, அவமானப் படுகிற சிலர் மட்டுமே படத்தின் மற்ற கேரக்டர்கள். அவர்களின் நடிப்பு கச்சிதம்.
பயங்கர சம்பவங்களைக் கொண்ட கதையோட்டத்துக்கு கூடுதல் வேகமூட்டும்படி அதிரடியான பின்னணி இசையைத் தந்திருக்கிறார் அர்ஜுன் வி.அக்ஷயா. பாண்டி அருணாசலத்தின் ஒளிப்பதிவும், படத் தொகுப்பும் கச்சிதம்.
படம் மூலம் கிடைக்கிற செய்தி இரண்டு…
ஒன்று செய்கிற குற்றங்களுக்கு தண்டனை எப்படி வேண்டுமானாலும் கிடைக்கலாம்; யார் மூலமாக வேண்டுமானாலும் கிடைக்கலாம். தப்பிக்கவே முடியாது.
தன்னை பெரியாளாக நினைத்துக் கொள்கிறவர்களை, தங்களை அசைக்க முடியாது என நம்பிக் கொண்டிருக்கிறவர்களை அசைக்கவும் அழிக்கவும் கண்டிப்பாக யாராவது வருவார்கள். ஜாக்கிரதை.
Rating 3 / 5

