ஃபீல்குட் உணர்வில் மிதக்க விரும்புகிறவர்களுக்கான அழகிய படைப்பு.
ஹீரோ கல்லூரிக் காலத்தில் சக மாணவியைக் காதலிக்க, நாட்கள் உற்சாகமாக நகர்கிறது. ஒரு கட்டத்தில் அந்த காதல் பிரேக் அப்பில் முடிகிறது. அடுத்து ஒரு பெண்ணுடன் பழக்கமாகி நெருக்கமாக, காதலில் விழுகிறார்கள். முன்பு போலவே நாட்கள் உற்சாகமாக நகர்கிறது. ஒரு கட்டத்தில் அந்த காதலும் பிரேக் அப்பில் முடிகிற அளவுக்கு நிலைமை சீரியஸாகிறது.
இப்படி தொடர்ந்து காதலில் சிக்கல் உருவாவதற்கு யார் காரணம்? யார் மீது தவறு? ஹீரோ மீதா? அவரைக் காதலிக்கிற ஹீரோயின்கள் மீதா?
யுவராஜ் சின்னசாமியின் திரைக்கதையில் பதில் இருக்கிறது.
ஹீரோ ஏகனுக்கு காதலிக்க, காதலியை டாக்ஸிக் மனப்பான்மையோடு அணுக, காதல் பிரிவில் வருந்த, செய்த தவறு குறித்து புரிந்து திருந்த என சுலபமாய் செய்ய முடிகிற வேலைகள். உணர்வுபூர்வமாக செய்திருக்கிறார். பெண்கள் மட்டுமே படிக்கிற காலேஜில் தனியொரு மாணவனாக சேர்ந்து அனுபவிக்கிற காமெடி களேபரங்களில் ஈடுபடுகிற சான்ஸும் உண்டு. அதிலும் அலட்டலின்றி அசத்துகிறார்.
முதல் காதலியாக ஸ்ரீதேவி அப்பலா, இரண்டாம் காதலியாக ஃபெமினா ஜார்ஜ். உற்சாகமாக காதலிப்பது, உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத காதலனின் அணுகுமுறையால் மன உளைச்சலுக்கு ஆளாவது என இருவருக்கும் சரிசமமான கனமான காட்சிகள். நடிப்பு பொருத்தமாக இருக்கிறது.
நண்பர்கள், நண்பிகளாக வருகிறவர்களும் மற்றவர்களும் கதைக்கு தேவையானதை செய்திருக்கிறார்கள்.
காதலர்கள் இனிமையாக நாட்களைக் கழிக்கிற, உணர்வுபூர்வமாக நடந்து கொள்கிற, உணர்ச்சிவசப்பட்டு காதலில் சிக்கலை உருவாக்கிக் கொள்கிற காட்சிகள் மாறிமாறி வர அதற்கெல்லாம் உயிரோட்டம் தருகிறது சித்துகுமாரின் பின்னணி இசை. யப்பா ஏசப்பா’, கருவிழி’ பாடல்களை ரசிக்கலாம். பிரியேஷ் குருசாமியின் ஒளிப்பதிவு நேர்த்தி.
காதலில் எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்பதை சொல்லிக் கொடுப்பதைப் போன்ற கதை. அதற்கான திரைக்கதையை எந்தளவு முடியுமோ அந்தளவு காமெடியாலும் சுவாரஸ்மான காட்சிகளாலும் மனதைத் தொடும் தருணங்களாலும் நிரப்பியிருக்கிறார் இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!
Rating 3.5 / 5 

