கொலை வழக்குகளில் போலீஸுக்கு கொலையாளி யார் என்பதை, கொலைக்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிப்பது, கொலையாளியை தேடிப் பிடிப்பது என ஏகப்பட்ட வேலைகள் இருக்கும். இந்த கதையில் கொலையாளி நான் என் காதலியை குத்திக் கொன்று விட்டேன் என்று சொல்லி போலீஸில் சரணடைகிறான். அப்புறமென்ன, சட்டப்படி செய்ய வேண்டியதைச் செய்து ஃபைலை குளோஸ் பண்ண வேண்டியதுதான். ஆனால், இந்த கேஸில் போலீஸால் அப்படி செய்ய முடியவில்லை. புதிதாய் ஒரு கொலை வழக்கை தோண்டித் துருவி விசாரிப்பது போல் விசாரிக்க வேண்டியிருக்கிறது.
அது ஏன்? அப்படி விசாரிக்கும் போலீஸ் எதையெல்லாம் கண்டுபிடிக்கிறது? என்பதற்கான பதில்களே கதையின் மீதி…
காதலியைக் கொன்றதாகச் சொல்லி கத்தியுடன் போலீஸில் சரணடையும் ஆரம்பக் காட்சியிலிருந்து, தன் முன் இல்லாத பெண்ணிடம் ஜாலியாகப் பேசுவது, குளிர்பானம் வாங்கிக் கொடுப்பது வரை தான் ஏற்றிருக்கும் விநோதமான கேரக்டருக்கு தேவையான எல்லா உணர்வுகளையும் மிகச்சரியாக தனது உடல்மொழியில், வசன உச்சரிப்பில் கொண்டு வந்திருக்கிறார் நாயகன் அசோக்.
கொலைகளின் பின்னணியில் இருக்கிற மர்மங்களை தோண்டியெடுத்து நிஜக் குற்றவாளியை நெருங்குகிற கடமை யுகனுக்கு. ஹீரோவுக்கான தகுதிகளுடன் இருக்கிற அவர் போலீஸ் உயரதிகாரிக்கான கம்பீரத்தை குறையில்லாமல் காண்பித்து துப்புதுலக்கும் கடமையை நிறைவேற்றியிருக்கிறார்.
மூன்று ஹீரோயின்களுக்கு கதையில் இடமிருக்கிறது. அதை சங்கவி, சிமு அத்வானி, நிஷா கூட்டணி நிரப்பியிருக்கிறது.
டாக்டராக வருகிற இயக்குநர் அரவிந்த்ராஜ் பழிவாங்கும் உணர்ச்சியை அலட்டலில்லாமல் வெளிப்படுத்தியிருக்க மற்றவர்கள் அளவறிந்து நடித்திருக்கிறார்கள்.
மெல்லிசையில் மாறா மாறா பாடல் தந்து, பின்னணி இசையால் கதையின் பரபரப்புக்கு சுறுசுறுப்பூட்டுகிறார் காதர். வி எஸ் வேலனின் ஒளிப்பதிவில் எளிமையும் நேர்த்தியும் தெரிகிறது.
பழக்கப்பட்ட பழி வாங்கல் கதைக்கு சஸ்பென்ஸ் நிரம்பிய திரைக்கதை அமைத்து காட்சிகளில் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார் இயக்குநர் நெடுமாறன் மோகன்தாஸ். சஸ்பென்ஸ் அசத்தலாக இருக்கிற அளவுக்கு அது ஏன் இது ஏன் என்ற குழப்பியடிக்கும் கேள்விகளும் மனதில் வந்து போகிறது. அந்த குறையை தவிர்த்திருந்தால் கிட்டி அதிகளவிலான வரவேற்பை எட்டிப் பிடித்திருக்கும்!
Rating 2.5 / 5 

