சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றுள்ள படம் ‘மண்டாடி ‘ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் படத்தின் நாயகன் சூரி பேசும்போது,
“எங்கள் படக்குழுவின் சார்பாக இந்த ‘மண்டாடி’ படத்தைத் தன்னுடைய படைப்பாக ஏற்றுக் கொண்டு கொண்டாடி வரும் உலகம் முழுதும் இருக்கும் ஒட்டுமொத்த மக்களுக்கும் என்னுடைய மிகப்பெரிய நன்றி.அப்படித்தான் இன்று இதைக் கொண்டாடி வருகிறார்கள்.அவர்களுக்கு எங்கள் படக்குழுவின் சார்பில் நன்றி.
பல்வேறு வகையிலும் மண்டாடி படத்தைக் கொண்டாடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இப்படி ஒரு படைப்பை உருவாக்கிய தயாரிப்பு நிறுவனத்துக்கும் எல்ரெட் குமார் அண்ணனுக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்கண்ணே.அதே நேரத்தில இந்த படைப்பை மிக நேர்த்தியாகவும் உணர்வு பூர்வமாகவும் சிறந்த திரைப்படமாகவும் உருவாக்கியமதிமாறன் அண்ணனுக்கு ரொம்ப ரொம்ப நன்றிண்ணே.
’நீ ஜெயிச்சிட்ட மாறா’ அப்படிங்கிற மாதிரி’ நீங்க ஜெயிச்சிட்டீங்க மதிமாறா’ அப்படித்தான் இருக்குண்ணே.
இந்தக் கதையைச் சொல்லி முடிச்ச உடனே நீங்க என்கிட்ட சொன்ன போது இந்த முத்துக்காளி இதுதான், 20 வருஷம் அவன் வாழ்க்கையில்இழந்து விட்டு வந்ததற்குப்பிறகு வந்து 20 வருஷத்துக்கு அப்புறம் திருப்பி அவன் அந்த ஊருக்குள் வந்தால் அவன் எப்படி இருப்பான்? அவன் மனநிலை எப்படி இருக்கும்?ஒருத்தர் அவனைக் கூப்பிட்டால் கூட அவன் எப்படித் திரும்புவான்?அவன் எப்படி உட்காருவான்? அவனுடைய நடவடிக்கை எப்படி இருக்கும்? அவனுக்கு பிடிக்காத விஷயங்கள் பழையதை ஞாபகப்படுத்துற மாதிரி ஒரு விஷயத்தை சின்னவிஷயத்தைச் சொன்னால் கூட அவனைக் கோபப்படுத்துகிற மாதிரி இருக்கும்.அதைத் தொட்டால் அவன் எப்படி வெளிப்படுத்துவான் என்பதெல்லாம் நீங்கள் என்னிடம் தெளிவாகக் கூறினீர்கள்.அதைத்தான் நானும் நண்பர்களும் ஒரு வாரமாக யோசித்துக் கொண்டே இருந்தோம்.இதை என்ன மாதிரிச் செய்யலாம் என்ன மாதிரிச் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.
ஒருத்தன் பாறையை முழுங்கிட்டு இருந்தான்னா எப்படி இருப்பான்? அவன் எப்படி நடமாடுவான்? அவனைப் போய் ஒரு கட்டத்துக்கு அப்புறம் அவனைச் சீண்டினால் அவன் எப்படிவெளிப்படுத்துவான்? அந்த மாதிரி யோசித்துக்கொண்டேடே இருந்தேன். இயக்குநருடன் கலந்து பேசினேன், விவாதம் செய்தேன்.அப்போது அண்ணன் சொன்னார் இதுதான் நான் எதிர்பார்க்கிறேன். அப்படி இந்த கேரக்டர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்.நீங்க சொன்னது இன்றைக்கு எல்லாரும் என்னை சூரியோட நடிப்பு சூப்பர் என்று சொல்லும் போது முத்துக்காளியாக மதிமாறனாக என் கண்ணுக்குத் தெரிகிறார்கள்.ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்கண்ணே.
ஆந்திரா சென்றபோது அவர்கள், எங்கள் சுஹாஸ் அண்ணாவை நீங்கள் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களை நாங்கள் நன்றாகப் பார்த்துக் கொள்கிறோம் என்றார்கள். தெலுங்கில் பெரிய வெற்றி பெற்றுள்ளது மிக்க நன்றி.
பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் உங்களுக்கு எனது ராயல் சல்யூட். மண்டாடியை அப்படியே உங்களிடம் கொடுத்துவிட்டார்கள்.ஏதாவது தவறுதலாகப் பேசி இருந்தால் மன்னிக்கவும்.இந்தப் படத்துக்காக மாஸ்டரின் மகன் கிரண் 20 நாள் சிரமப்பட்டு இருக்கிறார்.அப்படித்தான் அசால் மாஸ்டரும் மண்டாடி பாடல் எடுத்த போது நடுக்கடலில் ஆட்கள் இல்லாத போது எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை மறக்கவே முடியாது. யாருமே இல்லாமல் நடிகர்களை மட்டும் வைத்துக்கொண்டு சிரமப்பட்டார் .
முதன் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து வாழ்த்து வந்தது.அதை மறக்கவே முடியாது.
படம் பார்த்துவிட்டு சரத்குமார் சார் இரவு ஒரு மணிக்கு போன் செய்தார் .படத்தில் நான் மஹிமாவிடம் மன்னிப்பு வாங்கும் காட்சியைப் பார்த்து விட்டு அவரும் கண் கலங்கியதாகச் சொன்னார்.நெப்போலியன் சார் அமெரிக்காவில் இருந்து போன் செய்தார். பார்த்திபன் சாரும் போன் செய்து வாழ்த்தினார். சீயான் விக்ரம் சார் வாழ்த்து சொல்லி விட்டுப் பத்து நிமிடங்கள் பேசி விட்டுச் சென்றார்.அப்படியே எனக்கு வாழ்த்து சொன்ன
கார்த்தி சார், எஸ்டிஆர் சிலம்பரசன் சகோ ,தம்பி எஸ் கே ,நண்பர் விமல், நானி பிரதர் ,ஆர் ஜே பாலாஜி பிரதர், சிறுத்தை சிவா சார் ,தாணு சார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி.
கேமராமேன் கதிர் சார் எங்களுடைய இன்னொரு கதாநாயகன் .உங்களுக்கு நன்றி. இசையமைப்பாளர் ஜீவி அவர்களுக்கு மிக மிக நன்றி.படகுகள் ஏற்பாடுகள் செய்த சொக்கலிங்க முதலாளிக்கு நன்றி.இப்படியே ஆனால் யார் பெயரையாவது மறந்து விடுவேனோ என்று எனக்கே பயமாக இருக்கிறது.
ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் சொன்னார் ,”இதற்கு மேல் நாம் இந்தப் படத்திற்கு விளம்பரம் செய்ய வேண்டியதில்லை, மக்களே கொண்டு சேர்ப்பார்கள் ”என்றார் .அவர் சொன்னபடியே மக்களே இதைக் கொண்டாடுகிறார்கள்.’மண்டாடி ‘சம்பந்தமாக ஆயிரக்கணக்கான ரீல்ஸ்கள் போட்டுக் கொண்டாடி வருகிறார்கள்.மனம் நிறைவாக இருக்கிறது.அனைவருக்கும் நன்றி.
சூரி எப்போதும் இப்படியே இருப்பேன். சூரி இனி போன் எடுக்க வேண்டும் என்றார்கள் .எனக்கு எப்போதும் நான் மேனேஜர் வைத்துக் கொள்வதில்லை.அன்புத் தம்பி உதயசங்கர் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்
.அனைவருக்கும் நன்றி வணக்கம்!” என்றார்.
படத்தின் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேசும்போது,
“என் பேச்சைத் தொடங்குவதற்கு முன்பாக இந்தப் படத்தின் வெற்றியைப் பாய்மரப்படகு சொந்தக்காரர்களுக்குச் சமர்ப்பணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் .
அவர்கள் தினமும் கடலோடு போராடித் தங்களை, தங்கள் வாழ்வாதாரத்தைப்பார்த்துக் கொள்ளக்கூடிய சொந்தங்கள் .தலைமுறை தலைமுறையாக இந்த விளையாட்டைப் பாதுகாத்து அதற்கு ஒரு காரணத்தை வைத்து தொடர்ந்து கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் அந்த மீனவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனி வரப்போகிற தலைமுறைக்கும் நான் என்னுடைய சமர்ப்பணத்தைச் சொல்லிக் கொள்கிறேன். இந்தப் படம் உங்களுக்கானது .ரொம்ப நன்றி!
இந்த உலகத்தில் இருந்த எனக்கு ‘மண்டாடி’ உலகத்தைச் சொல்லிக் கொடுத்து அறிமுகம் செய்த தோழர் சதீஷ் அவர்களுக்கும், இன்னும் சொல்லப்படாத கதைகளை எனக்குச் சொல்லிக் கொடுத்த உதவிப் பேராசிரியர் மோகன வசந்தன் அவர்களுக்கும் பெரிய நன்றி.இன்னும் நிறைய கதைகளைக் கண்டுபிடிப்போம்; தொடர்ந்து பயணிப்போம்.
இயக்குநர் வெற்றி சார் சொன்னது , எல்ரெட்சாருக்கு ஓர் இயக்குநரைப் பிடித்துவிட்டு நம்பிக்கை வைத்து விட்டார் என்றால் அப்புறம் அந்தப் படம் உங்கள் கையில் இருக்காது என்று சொன்னார். அதுதான் இந்தப் படத்தில் நடந்தது.
அவருக்குப் பிடித்த மாதிரி நான் நடந்ததால ஒரு சராசரி மீடியம் பட்ஜெட்டில் ஆரம்பித்த படத்தின் பட்ஜெட் விரிந்து பெரியதாகி விட்டது.
தமிழ் மொழியில் மட்டும் தொடங்கிய இந்தப் படம் ஐந்து மொழிப் படமாக மாறியது. நம்ம ஊர் திரையில் வரும் என்பதைத் தாண்டி ஐமேக்ஸ் ஸ்கிரீன் என்று மாறியது.காரணம் எல்ரெட்சார்தான்.எந்த வெற்றியும் கொடுக்காத என்னுடைய கதையை நம்பி இந்தப் படத்தை எடுக்க ஆரம்பித்தார். பெரிய சுமை என் மேல் தான் இருந்தது. ஏனென்றால் அந்த நம்பிக்கை எனக்கு இருந்தது. நான் அதை ஒவ்வொரு நிமிடமும் சுமந்து கொண்டே தான் இருந்தேன். என் வேலையைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். எல்ரெட் சார் நம்பினார். என் கூடவே ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். இன்று நினைக்கிறேன் ,இது என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படுத்தும் என்று நினைத்தால்,ஒரு பெரிய படம் பண்ணினால் தான் பெரிய இயக்குநராக இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது .ஒரு சின்ன இயக்குநரிடம் இருந்து ஒரு பெரிய கனவு இருந்தாலும் எல்ரெட் சார் மாதிரி ஒரு தயாரிப்பாளர் இருந்தாலும் அது சாத்தியமாகும் என்பதை எல்லா உதவி இயக்குநருக்கும் ஏற்படுத்தியது .எல்ரெட் சாருக்கு என்னுடைய நன்றி.
அடுத்து சூரி சாருக்கு நன்றி.ஒரு வாழ்க்கையில் இரண்டாவது அத்தியாயம் கிடைக்க வேண்டும் என்றால் அதை அடைய என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணம் தான் முத்துக்காளி பாத்திரம்.இந்தக் கதை பாத்திரம் எனக்கு மிகவும் அந்தரங்கமானது. இந்தக் கதையை என்னிடமிருந்து தான் தேடினேன்.முத்துக்காளிக்கு உயிர் கொடுத்த உங்களுக்கு என்னுடைய நன்றி.
சுஹாஸ் சார் சொல்வார் கறுப்பாக இருக்கிறவர் மேலே வர முடியாது ,அந்த நிறவெறி கேலிகள் எல்லாம் உள்ளன என்று சொல்லி வருத்தப்பட்டார். அப்போது நான் சொன்னேன் ,தமிழ்நாட்டில் இதெல்லாம் பேசாதீர்கள் அதெல்லாம் இங்கே இல்லை ,நம் படம் ஜெயிக்கும் என்றேன்.அதுதான் நடந்திருக்கிறது.
மஹிமாவிடம் நான் உறுதிப்படுத்திய மாதிரி அந்தப் பாத்திரத்தை செய்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன். ரொம்ப நன்றி . அந்தப் பாத்திரத்தில் நீங்கள் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள் என்று உங்கள் பேட்டிகளில் நீங்கள் நடந்ததை எல்லாம் சொல்லி இருக்கிறீர்கள். பார்த்தேன் ரொம்ப நன்றி .இந்த முயற்சிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்த பீட்டர் ஹெயின் மாஸ்டருக்கு நன்றி.ஒளிப்பதிவாளர் கதிர், இசையமைப்பாளர் ஜீவி என்று எத்தனை பேர் இதில் பங்கெடுத்திருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் படப்பிடிப்பு தளத்தில் ஏகப்பட்ட பேர் இதில் பங்கெடுத்து உதவியிருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி” என்றார்.

